நாயகன் ரீரிலீஸ்: “அப்பாவுடைய விசில் சத்தம் கேட்க மாட்டேங்குதுன்னு சொன்னேன்" – இந்திரஜா ரோபோ சங்கர்

கமல் ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு அவருடைய `நாயகன்’ படத்தை இன்று திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்திருக்கிறார்கள்.

கமலின் புதிய படமோ, பழைய படத்தின் ரீரிலீஸோ, அங்கு தீவிர கமல் ரசிகராக மறைந்த நடிகர் ரோபோ சங்கர் மேள சத்தம், தெறிக்கும் பட்டாசுகளுடன் கொண்டாட்டத்தை அமர்களப்படுத்துவார்.

Nayagan
Nayagan

அவரின் மறைவுக்குப் பின் `நாயகன்’ படத்தின் ரீரிலீஸ் முதல் காட்சியைப் பார்க்க அவருடைய மகள் இந்திரஜா வந்திருந்தார்.

சென்னையில் இயங்கி வரும் கமலா சினிமாஸ், ரோபோ சங்கருக்கு இரங்கல் தெரிவிக்கும் கார்டைப் படத்தில் சேர்த்து அவருடைய குடும்பத்திற்கு முதல் டிக்கெட்டை கொடுத்திருக்கிறது.

படம் பார்த்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய இந்திரஜா ரோபோ ஷங்கர், “நாயகன் படத்தை நான் இன்னைக்குதான் முதல் முறையாக தியேட்டர்ல பார்க்கிறேன்.

இந்த நேரத்துல வருத்தம் என்பதைத் தாண்டி ஒரு வெற்றிடம் இருக்கு. அப்பா இல்லாதது மட்டுந்தான் ஒரு வெற்றிடம்.

அவர் இந்த இடத்துல இருந்திருந்தால் கொண்டாட்டமே வேற மாதிரி இருந்திருக்கும். அவரில்லாமல் நான் பாக்குற முதல் படம்ங்கிறதுனால கஷ்டமாகவும் இருக்கு.

எப்போதுமே கமல் சார் படத்துக்கு இங்க அப்பாதான் முதல் டிக்கெட் வாங்குவாரு. இன்னைக்கும் மறக்காமல் முதல் டிக்கெட்டை அப்பாவுக்குக் கொடுத்ததுக்கு கமலா சினிமாஸுக்கு நன்றி.

Indraja Robo Shankar
Indraja Robo Shankar

இந்த தியேட்டர்ல படத்துக்கு முன்னாடி அப்பாவுக்கு இரங்கல் தெரிவிக்கும் கார்டைச் சேர்த்து காட்சிப்படுத்தியிருக்காங்க.

படம் பார்க்கும்போது என் மாமாகிட்ட `எல்லோருடைய விசில் சத்தமும் ஆராவாரமும் கேட்குது. அப்பாவுடைய விசில் சத்தம் கேட்கமாட்டேங்குது’னு சொன்னேன். ஏன்னா, அப்பாவுடைய விசில் சத்தம் ரொம்ப வித்தியாசமாக இருக்கும்.

அவர் இந்தக் கொண்டாட்டத்துல இருந்திருந்தால் அலப்பறையே வேற மாதிரி இருந்திருக்கும். அது இப்போ இல்லைங்கிறதுதான் பெரிய மிஸ்ஸிங்!

நிச்சயமாக, சாமிகிட்ட இருந்து எங்களை வழிநடத்துவார்னு எங்களுக்கு நம்பிக்கை இருக்கு” என்றார் வருத்தத்துடன்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.