ரூ.1800 கோடி அரசு நிலம் அஜித் பவார் மகனுக்கு ரூ.300 கோடிக்குதானா? – விசாரணைக்கு உத்தரவிட்ட பட்னாவிஸ்

மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் இருக்கும் முந்த்வா என்ற இடத்தில் அரசுக்கு சொந்தமான 40 ஏக்கர் நிலம் இருந்தது. அந்த நிலத்தின் மதிப்பு ரூ.1,800 கோடியாகும். இந்த நிலம் சமீபத்தில் துணை முதல்வர் அஜித்பவார் மகன் பார்த் பவார் பங்குதாரராக இருக்கும் அமேடியா எண்டர்பிரசைசஸ் என்ற நிறுவனத்திற்கு ரூ.300 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும் நிலம் விற்பனை செய்யப்பட்டபோது அதற்கு முத்திரை தீர்வையாக ரூ.21 கோடி செலுத்தி இருக்க வேண்டும். அந்த 21 கோடியும் அஜித்பவார் மகனிடம் வாங்கவில்லை. அந்த தொகையை பதிவாளர் தள்ளுபடி செய்துள்ளார். 300 கோடிக்கு பதிவு செய்ததற்கு முத்திரை தீர்வையாக வெறும் ரூ.500 மட்டுமே பெறப்பட்டுள்ளது.

இது போன்று சட்டவிரோதமாக நடந்து கொண்டதற்காகவும், அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தியதற்காகவும் பதிவாளர் ராஜேந்திரா பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அரசுக்கு இழப்பை ஏற்படுத்தியதாக பதிவாளர் ராஜேந்திரா உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நில விற்பனை மோசடி தொடர்பாக எதிர்க்கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் பிரச்னையை கிளப்பியதை தொடர்ந்து இந்த நில விற்பனை தொடர்பாக முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். 5 பேர் கொண்ட கமிட்டி இது குறித்து விசாரணை நடத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த நில விற்பனை அஜித் பவாருக்கு சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது.

இது குறித்து அஜித் பவார் கூறுகையில், ”இந்த நில விற்பனை விவகாரத்தில் நான் செய்வதற்கு எதுவும் இல்லை. கடந்த மூன்று மாதத்திற்கு முன்பே இது குறித்து கேள்விப்பட்டேன். எந்த வித தவறும் செய்யக்கூடாது என்று எச்சரித்தேன். குழந்தைகள் வளர்ந்ததும், அவர்கள் தங்கள் சொந்த தொழிலைத் தொடங்குகிறார்கள்.

சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் முகவரி என்னுடையது அல்ல. எனது மகன் பார்த்தின் முகவரி ஆகும். இதுவரை நான் எனது உறவினர்களுக்காக அரசு நிர்வாகத்தில் தலையிட்டது கிடையாது. அதோடு அதிகாரிகள் யாருக்கும் போன் பண்ணி பேசியது கிடையாது. எனது பெயரை சொல்லி யாராவது தவறு செய்தால் நான் அதற்கு ஆதரவு கொடுப்பதில்லை. இவ்விவகாரத்தில் விசாரணை நடத்த முதல்வருக்கு உரிமை உண்டு, அவர் உண்மையை வெளிக்கொணர்வார்” என்றும் அவர் கூறினார்.

அதேசமயம் சரத் பவார் மகள் சுப்ரியா சுலே இவ்விவகாரத்தில் பார்த் பவாருக்கு ஆதரவாக பேசியிருக்கிறார். `பார்த் பவார் தவறு செய்து இருக்கமாட்டார் என்று நம்புகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.