‘பெண்கள் பாதுகாப்பு குறித்த எடப்பாடியின் அற்பத்தனம் அம்பலமானது’ – ஆர்.எஸ்.பாரதி

சென்னை: “தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பாக இல்லை என பழனிசாமி விஷமப் பிரச்சாரம் செய்ததற்கு வெட்கித் தலைகுனிய வேண்டும். இபிஎஸ் வழியில் அன்புமணி ராமதாஸ், நயினார் நாகேந்திரன் போன்றவர்களும் உண்மை அறியாமல் தங்களது அரசியல் சுயலாபத்திற்காகப் பெண்களின் பாதுகாப்பை அரசியல் பகடைக்காயாக உருட்டிக் கொண்டிருப்பதை அற்பத்தனமான அறிக்கைகள் அம்பலப்படுத்தி இருக்கின்றன.” என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பாக இல்லை என்கிற செய்தி எப்படியாவது செவியில் எட்டிவிடாதா? என்கிற காத்திருப்பில் விஷமப் பிரசாரத்தை நாள்தோறும் நடத்திக் கொண்டிருக்கின்றனர் எடப்பாடியும் இன்னும் சில எதிர்க்கட்சிகளும்!

ஒரு குற்றம் நடந்தவுடனே அதை வைத்து எப்படி அரசியல் ஆதாயம் தேடலாம் என்று அற்பப் புத்தியோடு செயல்பட்டுவரும் எதிர்க்கட்சிகளின் அரைவேக்காட்டுத்தனத்தைப் படம்பிடித்துக் காட்டியிருக்கிறது கோவை நிகழ்வு.

கோவை சாலையில் நடந்து சென்ற பெண் காரில் கடத்தப்படுவதாகவும், சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த ஆறாம் வகுப்பு மாணவி ஒருவர் மாயமாகி உள்ளதாகவும் அதனால் தமிழ்நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பே இல்லை என்றும் உண்மை நிலை தெரிவதற்கு முன்பே முந்திரிக் கொட்டையாக வந்து அயோக்கியத்தனமான அறிக்கையை வெளியிட்டார் ‘பச்சைப் பொய்’ பழனிசாமி.

கோவை நிகழ்வில் காவல் துறை தீவிரமான விசாரணையை மேற்கொண்டது. அந்தச் சம்பவம் குடும்பத் தகராறில் ஏற்பட்டது என தெரிய வந்தது. ’’என்னை யாரும் கடத்தவில்லை” என அந்தப் பெண் வீடியோ மூலம் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.

இதே போல நேற்றைய முன் தினம் இரவு காணாமல் போன கண்ணகி நகர் மாணவியைத் தனிப்படை அமைத்து காலை 6.30 மணிக்கே காவல்துறை மீட்டு வீட்டில் ஒப்படைத்துவிட்டது.

உண்மைகள் இப்படியிருக்கத் தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பாக இல்லை என பழனிசாமி விஷமப் பிரச்சாரம் செய்ததற்கு வெட்கித் தலைகுனிய வேண்டும். எடப்பாடி பழனிசாமி வழியில் அன்புமணி ராமதாஸ், நயினார் நாகேந்திரன் போன்றவர்களும் உண்மை அறியாமல் தங்களது அரசியல் சுயலாபத்திற்காகப் பெண்களின் பாதுகாப்பை அரசியல் பகடைக்காயாக உருட்டிக் கொண்டிருப்பதைத்தான் அற்பத்தனமான அறிக்கைகள் அம்பலப்படுத்தியிருக்கின்றன.

திமுக அரசுக்கு எந்த வகையிலாவது களங்கம் கற்பிக்கலாம் என நினைத்து இதுபோன்ற அவதூறு பிரச்சாரத்தை மேற்கொள்ளும் எதிர்க்கட்சிகளின் முகமூடி ஒவ்வொரு நாளும் மக்களிடம் கிழிபட்டுக் கொண்டிருக்கிறது. பெண்களின் நலனையே முதன்மை நோக்கமாகக் கொண்டு செயலாற்றிவரும் தமிழக முதல்வர் தலைமையிலான திராவிட மாடல் அரசு அவர்களது பாதுகாப்பில் எந்தச் சமரசத்துக்கும் இடம்கொடுக்காது. அது திரும்பத் திரும்ப நிரூபணம் ஆகிக் கொண்டேதான் இருக்கும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.