சஞ்சு சாம்சனுக்காக இந்த 3 வீரர்களை விட்டுக்கொடுக்க தயாராகும் சிஎஸ்கே?

ஐபிஎல் 2026 ஏலத்திற்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், டிரேடிங் குறித்த செய்திகள் கிரிக்கெட் வட்டாரத்தில் சூடுபிடிக்க தொடங்கியுள்ளன. அந்த வகையில் தற்போது ஐபிஎல் உலகின் ஹாட் டாப்பிக்காக வலம் வருவது, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனின் டிரேடிங் விவகாரம் தான். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து வெளியேற சஞ்சு சாம்சன் முடிவெடுத்துள்ள நிலையில், அவரை தங்கள் அணிக்கு கொண்டு வர, ஐந்து முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Add Zee News as a Preferred Source

சஞ்சு சாம்சனை CSK குறிவைப்பது ஏன்?

தல தோனி, 2026 ஐபிஎல் தொடரிலும் விளையாடுவார் என சிஎஸ்கே நிர்வாகம் உறுதி செய்துள்ள போதிலும், அவருக்கு அடுத்தபடியாக அணியை வழிநடத்த ஒரு திறமையான கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனை சிஎஸ்கே தேடி வருகிறது. இந்த தேடலுக்கு, சஞ்சு சாம்சன் மிகவும் பொருத்தமானவராக கருதப்படுகிறார். அதிரடியாக ஆடக்கூடிய ஒரு டாப்-ஆர்டர் பேட்ஸ்மேன், சிறந்த விக்கெட் கீப்பர் மற்றும் கேப்டன் என பன்முக திறமை கொண்டவராக சஞ்சு சாம்சன் இருப்பதால், அவரை அணிக்குள் கொண்டு வர சிஎஸ்கே நிர்வாகம் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறது.

டிரேடிங்கில் சிஎஸ்கே கொடுக்கப்போகும் வீரர்கள் யார்?

சஞ்சு சாம்சனை போன்ற ஒரு முக்கிய வீரரை விடுவிக்கும்போது, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, அதற்கு ஈடாக ஒரு நட்சத்திர வீரரை சிஎஸ்கேவிடம் இருந்து எதிர்பார்க்கும். அந்த வகையில், சிஎஸ்கே அணியின் சில முக்கிய வீரர்களின் பெயர்கள் டிரேடிங்கிற்காக பரிசீலிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

ரவீந்திர ஜடேஜா: ஆரம்பத்தில், சஞ்சு சாம்சனுக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜாவை ராஜஸ்தான் அணிக்குகொடுக்க சிஎஸ்கே தயாராக இருப்பதாக செய்திகள் வெளியாகின. பேட்டிங், பந்துவீச்சு, ஃபீல்டிங் என மூன்றிலும் சிறந்து விளங்கும் ஜடேஜா, ஒரு முழுமையான மேட்ச் வின்னர் என்பதால், இந்த டிரேடிங் ராஜஸ்தான் அணிக்கு பெரும் பலமாக அமையும் என கருதப்பட்டது. ஆனால், ஜடேஜாவை அணியில் இருந்து விடுவிக்க முடியாது என சிஎஸ்கே திட்டவட்டமாக மறுத்துவிட்டதாக தற்போது தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிவம் துபே: ஜடேஜாவை தொடர்ந்து, அதிரடி ஆல்-ரவுண்டரான சிவம் துபேயின் பெயர் தற்போது டிரேடிங் பட்டியலில் முன்னணியில் உள்ளது. 2024ம் ஆண்டு இந்திய அணிக்கு திரும்பியதில் இருந்து, துபேயின் கிரிக்கெட் வாழ்க்கை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதிரடியாக ரன் குவிக்கும் திறனும், தேவையான நேரங்களில் விக்கெட் வீழ்த்தும் திறனும் கொண்ட துபே, ராஜஸ்தான் அணிக்கு ஒரு சிறந்த தேர்வாக இருப்பார். மேலும், அவர் ஏற்கனவே ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ருதுராஜ் கெய்க்வாட்: சிஎஸ்கே அணியின் தற்போதைய கேப்டனான ருதுராஜ் கெய்க்வாட்டையும் ராஜஸ்தான் அணி டிரேடிங்கில் கேட்டதாககூறப்பட்டது. ஆனால், தனது கேப்டனையே விட்டுக்கொடுக்க சிஎஸ்கே தயாராக இல்லை.

KKR மற்றும் DCயும் போட்டியில்

சஞ்சு சாம்சனை தங்கள் அணிக்கு இழுக்க சிஎஸ்கே மட்டுமல்லாமல், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளும் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றன. இதனால், இந்த டிரேடிங் போட்டி மேலும் சூடுபிடித்துள்ளது. சிஎஸ்கே நிர்வாகம், ராஜஸ்தான் அணியுடன் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளதாகவும், ஒரு முக்கிய வீரரை டிரேடிங்கிற்காக விட்டுக்கொடுக்க சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த இறுதி முடிவு நவம்பர் 10 அல்லது 11-ம் தேதி தோனி, அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன், கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் ஆகியோர் சந்தித்து பேசிய பிறகு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

About the Author


RK Spark

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.