யூ டியூபில் பேசறதுக்கு திட்டினாங்க‌, இப்ப வெடிகுண்டு மிரட்டல்! – ஏ.எல்.எஸ்.ஜெயந்தி கண்ணப்பன்

சிங்கப்பூரிலிருந்து சென்னை வந்த விமானம், சென்னையில் இயங்கி வரும் சில வெளிநாட்டுத் தூதரங்கங்கள், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை, பாட்டாளி மக்கள் கட்சியின் அன்புமணி, நடிகை திரிஷா, திரைப்படத் தயாரிப்பாளர்கள் ஆஸ்கர் ரவிச்சந்திரன், ஏஎல்எஸ் ஜெயந்தி கண்ணப்பன், நடிகை சச்சு ஆகியோரது வீடுகள்..

கடந்த 24 மணி நேரத்தில் வெடிகுண்டு மிரட்டலுக்கு ஆளான நபர்கள், இடங்களின் பட்டியல் இது.

முன்பெல்லாம் வெடிகுண்டு மிரட்டல் என்றால் சம்பந்தப்பட்ட இடங்கள் அல்லது நபர்களுக்குதான் மிரட்டல் கால்கள் போகும். இப்போதோ நேரடியாக கமிஷனர் அல்லது டி.ஜி.பி அலுவலகங்களூக்கே மெயில் போய் விடுகிறதாம்.

stalin, Udhayanidhi Stalin

‘நாங்க உண்டு எங்க வேலை உண்டு’னு இருக்கிறோமே, எங்க வீட்டுலெல்லாம் எதுக்கு வெடிகுண்டை வைக்கணும்’ எனக் கேட்கின்றனர் பட்டியலில் இடம்பிடித்த அப்பாவிகள் சிலர்.

இன்றைய மிரட்டலுக்கு ஆளான கவிஞர் கண்ணதாசனின் மருமகள் ஜெய்ந்தி கண்ணப்பன் தற்போது சென்னை வீட்டிலேயே இல்லை. துபாயில் இருக்கும் அவரது வீட்டிலும் போலீஸ் மோப்ப நாய் சகிதம் போய் வெடிகுண்டு சோதனை செய்யப்பட்டிருக்கிறது.

ஜெயந்தி கண்ணப்பனைத் தொடர்பு கொண்டு பேசினோம்.

”இது என்னன்னே தெரியலைங்க. கொஞ்ச நாளாகவே இந்த மாதிரியான செய்திகளைப் பாக்குறப்ப பதட்டமா இருக்கு. தமிழ்நாடு எப்பவுமே அமைதியான ஒரு மாநிலமாத்தான் இருந்துட்டு வருது. தமிழ்நாட்டுல வெடிகுண்டு கலாசாரம் பெருகிடுச்சுனு நடிகர் ரஜினிகாந்த் முன்ன ஒரு தடவை பேசினார். அந்தச் சமயத்துல கூட பொது அமைதிக்கு பாதிப்பு வந்ததில்லை.

காரணம், தமிழ்நாட்டு மக்களுக்கிடையில் மதத்தைக் காரணமா வச்செல்லாம் பிரிவினையை அவ்வளவு சீக்கிரத்துல உண்டாக்கிட முடியாது. ஆனா சமீபமா மக்கள் மத்தியில் பீதியை உண்டாக்குகிற மாதிரியான‌ இந்த வெடிகுண்டு மிரட்டல்களை எதுக்கு பண்றாங்க தெரியல. இதுக்குப் பின்னணியில் யார் இருக்காங்கன்னு போலீஸ் கண்டுபிடிக்கணும்.

jeyanthi kannappan’s house

ஒரே நேரத்துல பல விஐபிக்கள் வீடுகளுக்கு இந்த மாதிரி மிரட்டல் வந்துச்சுன்னா போலீஸ் ஃபோர்ஸ்க்கு அதனால எவ்வளவு சிக்கல்? வெட்டியா விளையாட்டுத்தனமா இந்தச் செயல்களைச் செய்றாங்கன்னா அவங்களைக் கண்டுபிடிச்சு கடுமையான தண்டனை கொடுக்கணும். அதுவும் போலீஸுக்கே மெயில் அனுப்பி இந்த மாதிரி பண்றாங்கன்னா பயம் இல்லைன்னுதான் சொல்லணும்.

இப்ப நான் துபாய்ல இருக்கேன். போலீஸ் சென்னை கோபாலபுரத்துல இருக்கிற எங்க வீட்டுல சோதனை போட்டுட்டுப் போயிருக்காங்க.

கவிஞர் கண்ணதாசனின் அண்ணனான என்னுடைய மாமனார் ஏ.எல்.சீனிவாசன் திரைப்படங்களைத் தயாரிச்சவர். கோபாலபுரத்துல கலைஞர் வீடு, நடிகர் சிவாஜி கணேசனின் அலுவலகம் முதலான முக்கியமான இடங்கள் இருக்கிற பகுதியிலதான் எங்க வீடும் இருக்கு. திமுகவோ அதிமுகவோ யார் ஆண்டாலும் ஏ.எல்.எஸ்.கவிஞர் குடும்பம்னா ரொம்பவே மரியாதை தருவாங்க.

என்னுடைய மாமனார் கலைஞரின் நண்பர், ஜெயலலிதா முதல்வராக இருந்தப்ப இயல், இசை, நாடக மன்றத்துல நான் பொறுப்புல இருந்தேன். எதுக்கு இதையெல்லாம் சொல்றேன்னா, எங்க குடும்பத்துக்கும் மிரட்டல் வருதுன்னா யாரைக் குத்தம் சொல்றது தெரியலை.

சமீபமா நான் யூ டியூப் சேனல்கள்ல திரையுலகம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் குறித்துப் பேசிட்டு வர்றேன்.. இது பிடிக்காத சிலர் ‘நீங்க யார் அதையெல்லாம் பேசறதுக்கு?’ங்கிற ரீதியில கேட்டாங்க.

தவிர சிலர் நான் பேசினாலே கமென்டல வந்து திட்டறதை வழக்கமா வச்சிருந்தாங்க. இப்ப வெடிகுண்டு மிரட்டல்னு எதையெல்லாமோ யோசிக்க வேண்டியிருக்கு” என்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.