புனே,
மராட்டிய மாநிலம் புனேவில் உள்ள சிவானா நகரை சேர்ந்தவர் சமீர் ஜாதவ். இவரது மனைவி அஞ்சலி (வயது38) தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு 3-ம் வகுப்பு, 5-ம் வகுப்பு பயிலும் 2 குழந்தைகள் உள்ளனர். சமீர் ஜாதவ் ஆட்டோ மொபைல் டிப்ளமோ படித்து முடித்துள்ளார். இவர் ஆட்டோமொபைல் கடை நடத்தி வருகிறார். கடந்த மாதம் 26-ந்தேதி சமீர் ஜாதவ் தான் புதிதாக வாடகைக்கு ஒரு குடோன் எடுத்துள்ளதாகவும், அதை காட்டுவதாகவும். கூறி மனைவி அஞ்சலியை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றுள்ளார். குறிப்பிட்ட இடத்திற்கு சென்றதும் மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற சமீர் ஜாதவ் அங்கு தான் தயார் செய்து வைத்திருந்த இரும்பு உலையில் அஞ்சலியின் உடலை எரித்துள்ளார். பின்னர் சாம்பலை அருகே இருந்த ஆற்றில் கரைத்துள்ளார்.
சம்பவம் நடந்த போது 2 பேரும் குழந்தைகள் தீபாவளி விடுமுறைக்காக ஊருக்கு சென்றிருந்தனர். அதை சாதகமாக்கி சமீர் ஜாதவ் தனது மனைவியை கொலை செய்துள்ளார். பின்னர் சமீர் ஜாதவ் போலீஸ் நிலையத்திற்கு சென்று தனது மனைவி காணாமல்போய்விட்டதாக புகார் கூறினார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். தன் மீது போலீசாருக்கு சந்தேகம் வந்துவிடக்கூடாது என கருதிய சமீர் ஜாதவ் அடிக்கடி போலீஸ் நிலையத்திற்கு சென்று எனது மனைவியை எப்போது கண்டுபிடித்து தருவீர்கள் என கேள்வி எழுப்பி வந்துள்ளார்.
அவரது நடவடிக்கைகள் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து போலீசார் விசாரணையை சமீர் ஜாதவ் மீது திருப்பினர். அஞ்சலி மாயமானதாக கூறப்படும் நாளில் அப்பகுதியில் இருந்த சி.சி.டி.வி. காட்சி களை ஆய்வு செய்த போது அவர் தனது கணவருடன் சென்றது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் சமீரை பிடித்து தங்களது பாணியில் கவனித்து விசாரித்தனர். அப்போது அவர் தனது மனைவி அஞ்சலியை கொன்று எரித்ததை ஒப்புக்கொண்டார். தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.
சமீர் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு சமீர் ஜாதவ் இந்த கொலையை நிகழ்த்தியிருக்கலாம் என போலீசார் கருதினர். ஆனால் அவரிடம் நடத்திய விசாரணையில் சமீர் ஜாதவுக்கு வேறொரு பெண்ணுடன் கள்ளத் தொடர்பு இருந்ததும், இது தொடர்பான தகராறில் அவர் திட்டம் தீட்டி தனது மனைவியை கொலை செய்ததும் தெரியவந்தது.
அதாவது அஜய் தேவ்கான் நடிப்பில் வெளிவந்த த்ரிஷ்யம் படத்தை 4 முறை பார்த்ததாகவும், அதே பாணியில் மனைவியை கொன்று நாடகமாடியதாகவும் அவர் கூறினார். மேலும் அஞ்சலிக்கு கள்ளத்தொடர்பு இருப்பது போல் காட்டுவதற்காக, அவரை கொலை செய்த பின்பு. அவரது செல்போனை எடுத்து வந்து அதில் இருந்து தனது நண்பர் ஒருவருக்கு ‘ஐ லவ் யூ’ மெசேஜ் அனுப்பியுள்ளார். என
பின்னர் அந்த மெசேஜ்க்கு பதிலும் அனுப்பியுள்ளார். போலீஸ் விசாரணையின் போது இந்த செல்போன் மெசேஜ்க்களை காட்டி தனது மனைவியின் நடத்தையின் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்படுத்தும் வகையில் நடந்துள்ளார். ஆனால் அடிக்கடி போலீஸ் நிலையம் சென்ற அவர் மீதே போலீசாரின் சந்தேகப்பார்வை விழுந்ததால் அவர் கையும் களவுமாக சிக்கி கொண்டார்.