இந்தோனேசியா, வங்கதேசம், மடகாஸ்கர் மற்றும் நேபாளத்தில் ஆளும் அரசாங்கத்தின் பல்வேறு நிர்வாகக் கோளாறுகளை எதிர்த்து மிகப் பெரிய ‘ஜென் Z’ போராட்டங்கள் நடைபெற்றன. இந்தப் போராட்டங்கள் அனைத்தும் அந்தந்த நாடுகளின் அரசாங்கம், காவல் மற்றும் ராணுவப் படைகளை அதிரவைத்தன.
இந்த வரிசையில் தற்போது லத்தீன் அமெரிக்க நாடான மெக்சிகோவும் இணைந்துள்ளது.
ஏன் போராட்டம்?
மெக்சிகோவில் தற்போது அதிகரித்து வரும் குற்றங்கள், மோசமான அரசியல் நிர்வாகம், ஊழல், போதைப்பொருள் புழக்கம், வன்முறை குற்றவாளிகளுக்கு தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப்படுவது, உருபான் நகரின் மேயர் கார்லோஸ் மான்சோவின் கொலை எனப் பல்வேறு அரசாங்க அதிருப்திகளை எதிர்த்து ‘ஜென் Z’ தலைமுறையினர் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

எந்தவொரு நாட்டிலும் எதாவது குறிப்பிட்ட பிரிவு மக்களை அசௌகரியப்படுத்தும் காரியங்களை அரசாங்கம் செய்யும்போது, அது ஒட்டுமொத்த நாட்டின் பிரச்னையாக மாறாது. ஏனென்றால், அது எல்லோருக்குமான பிரச்னையாக அணுகப்படுவதில்லை.
அந்த நாட்டின் அரசாங்கம் செய்யும் தவறுகள் நாட்டில் வாழும் அனைத்து மக்களுக்கும் சிக்கலாக மாறும்போது, அது ஒரு மாபெரும் தன்னெழுச்சியான மக்கள் போராட்டமாக மாறும்.
அப்படி ஒட்டுமொத்த நாட்டிற்கான பிரச்னையாக மெக்சிகோவில் தற்போது போராட்டம் நடந்து வருகிறது.
கொலை
மான்சோவின் கொலை, குற்றவியல் வன்முறை, போதைப்பொருள் புழக்கத்தின் அதிகரிப்பு மற்றும் பல உயர்மட்ட கொலைகள் என மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீன்பாம் பார்டோவின் பாதுகாப்புக் கொள்கையின் மீதான அதிருப்திகள் மெக்சிகோ மக்கள் மத்தியில் அதிகரித்துக்கொண்டே வந்தது.
அதிலும் குறிப்பாக, மிச்சோகான் மாகாணத்தில் உள்ள உருபான் நகரின் மேயராக இருந்த மான்சோ, தனது ஊரில் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கு எதிராக ஒரு சிலுவைப்போரை வழிநடத்தினார்.
அது பெரிதாக பேசப்பட்ட நிலையில், அவர் நவம்பர் 1-ம் தேதி படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். இதையடுத்து, அவரது ஆதரவாளர்கள் மிச்சோகான் மாகாணத்தில் உள்ள நகரங்களின் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர்.

‘ஜென் Z’ போராட்டம்
அதைத் தொடர்ந்து ஆளும் அரசாங்கத்தின் மீது மக்களுக்கு உள்ள, குறிப்பாக ‘ஜென் Z’ தலைமுறையினருக்கு உள்ள வெறுப்பின் காரணமாக கடந்த 15-ம் தேதி போராட்டம் தொடங்கியது.
இந்தப் போராட்டத்திற்கு ‘ஜெனரேஷன் Z மெக்ஸிகோ போராட்டம்’ (Generación Z México) என்று பெயரிடப்பட்டுள்ளது.
ஆயிரக்கணக்கான மக்கள் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
எப்படி தொடங்கியது இந்தப் போராட்டம்?
இந்தப் போராட்டத்தில் நடந்த வன்முறையால் குறைந்தது 120 பேர் காயமடைந்திருக்கின்றனர். இதில் பெரும்பாலானோர் போலீஸ் அதிகாரிகள் என மெக்சிகோ நகரத்தின் பாதுகாப்புப் பிரிவு கூறியுள்ளது. இதில் 40 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
போராட்டக்காரர்கள் சிலர் நாடாளுமன்றத்தை சூறையாட முயன்று, பின்னர் பாதுகாப்புப் படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கின்றனர்.
போராட்டத்தால் பல பொது சொத்துக்கள் சேதமடைந்துள்ளதால், அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. போராட்டக்காரர்களில் குறைந்தது 20 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தப் போராட்டம் சமூக வலைதளங்களின் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இதனால் போராட்ட அழைப்புகள் விரைவாக பல நகரங்களில் பரவியிருக்கிறது.
மெக்சிகோவின் அதிபர் ஷீன்பாம், வலதுசாரிக் கட்சிகள் இந்தப் போராட்டத்தில் ஊடுருவ முயற்சிப்பதாகவும், மக்கள் வருகையை அதிகரிக்க சமூக ஊடகங்களில் பாட்களைப் பயன்படுத்துவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தப் போராட்டத்தைக் கட்டுப்படுத்த ராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது. மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டு, தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன. இது மெக்சிகோ வரலாற்றில் மிகப்பெரிய போராட்டங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.