புதுடெல்லி
முகேஷ் அம்பானியின் சகோதரரான அனில் அம்பானியின் ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் மற்றும் ரிலையன்ஸ் கமர்சியல் பைனான்ஸ் நிறுவனங்களால் பொது நிதி திரட்டப்பட்டது. இதில் ‘எஸ்’ வங்கி ₹3 ஆயிரம் கோடியை முதலீடு செய்தது. இந்த பொது நிதியை மற்ற நிறுவனங்களுக்கு மாற்றம் செய்துள்ளதாக அனில் அம்பானி மீது குற்றச்சாட்டு எழுந்தது. விசாரணையில், அனில் அம்பானி ₹17 ஆயிரம் கோடி பண மோசடி செய்ததாக 2 வழக்குகளை சி.பி.ஐ. (மத்திய புலானாய்வு அமைப்பு) பதிவு செய்தது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதையடுத்து அவரது வீடு, அலுவலகம் உள்பட பல இடங்களிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இது தொடர்பான விசாரணையில் ₹600 கோடிக்கு மேல் சர்வதேச ஹவாலா பணம் மாற்றப்பட்டதை அமலாக்கத்துறை கண்டுபிடித்தது.
இந்த வழக்கில் அனில் அம்பானி நேரில் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை நேரில் சம்மன் அனுப்பியது. ஆனால் அனில் அம்பானி காணொலியில் மூலமாக ஆஜராக விருப்பம் தெரிவித்தார். இதனை அமலாக்கத்துறை நிராகரித்தது. இதை தொடர்ந்து அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியது. 2 முறையாக நேரில் ஆஜராவதை தவிர்த்த அனில் அம்பானி காணொலியில் ஆஜராக விரும்புவதாக தெரிவித்தார்.