பாட்னா: பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக, பெண்களுக்கு ரூ.10,000 கொடுக்காமல் இருந்திருந்தால் ஜேடியு 25 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்றிருக்காது என்று ஜன சுராஜ் கட்சித் தலைவரும் பிரபல தேர்தல் வியூக வகுப்பாளருமான பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலை அடுத்து பிரசாந்த் கிஷோர், பாட்னாவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். தேர்தலுக்கு முன்னதாக, ஜேடியு 25 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறாது என பிரசாந்த கிஷோர் கூறியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், “தேர்தலுக்கு முன்பாக முதல்வரின் பெண்களுக்கான வாழ்வாதார திட்டத்தின் கீழ் ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியிலும் 60,000 பெண்களுக்கு தலா ரூ.10,000 வழங்கப்பட்டது. பெண்கள் சுயதொழில் தொடங்குவதற்காக 1.5 கோடி பெண்களுக்கு இந்த தொகை வழங்கப்பட்டது. மேலும், ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டது. இதன் காரணமாகத்தான் ஜேடியு அதிக இடங்களில் வெற்றி பெற்றது. இல்லாவிட்டால், 25 தொகுதிகளுக்கு மேல் அது வெற்றி பெற்றிருக்காது.” என தெரிவித்தார்.
இந்த தேர்தலில் ஜன சுராஜ் கட்சி படுதோல்வி அடைந்தது குறித்த கேள்விக்கு பதில் அளித்த பிரசாந்த் கிஷோர், “நாங்கள் நேர்மையான முறையில் தேர்தலை எதிர்கொண்டோம். ஆனால், தேர்தலில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த தவறிவிட்டோம். தோல்விக்கான முழு பொறுப்பையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். நாங்கள் பின்னடைவைச் சந்தித்துள்ளோம். எங்கள் தவறுகளைச் சரி செய்து கொண்டு எங்களை நாங்களே வலுப்படுத்திக் கொண்டு மீண்டு வருவோம். திரும்பிச் செல்லும் பேச்சுக்கே இடமில்லை.” என தெரிவித்தார்.
யாரும் எதிர்பாராத அளவு பாஜக – ஜேடியு கூட்டணி வெற்றி பெற்றது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், “பிஹாரை புரிந்து கொள்வதில் நான் தோல்வி அடைந்துவிட்டேன். நிதிஷ் குமாரும் பாஜக தலைவர் சாம்ராட் சவுத்ரியும் சாதி மற்றும் மத அடிப்படையில் மக்களைப் பிரித்து, பணத்தைக் கொடுத்து மக்களின் வாக்குகளை வாங்கிவிட்டார்கள். நாங்கள் வாக்குகளைப் பெறாதது குற்றமல்ல. குறைந்தபட்சம் நான் ஊழலில் ஈடுபடவில்லை, அதோடு பிளவுபடுத்தும் அரசியலிலும் ஈடுபடவில்லை என குறிப்பிட்டார்.
மேலும், தேசிய ஜனநாயகக் கூட்டணி தனது தேர்தல் வாக்குறுதிப்படி, 1.5 கோடி பெண்களுக்கு சுய தொழில் தொடங்க ரூ. 2 லட்சம் கொடுத்தால் நான் நிச்சயமாக அரசியலை விட்டு விலகிவிடுவேன்.” என்று தெரிவித்தார்.
நடந்து முடிந்த பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 243 தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 202 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதில், பாஜக 89, ஜேடியு 85, எல்ஜேபி (ஆர்வி) 19, ஹெச்ஏஎம் 5, ஆர்எல்எம் 4 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. எதிர் தரப்பில் மகா கூட்டணி 35 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதில், ஆர்ஜேடி 25, காங்கிரஸ் 6, சிபிஐ(எம்எல்) 2, ஐஐபி 1, சிபிஎம் 1 ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்றன. இரு கூட்டணிகளிலும் இடம்பெறாத அகில இந்திய மஜ்லிஸ் இ இட்டஹாதுல் முஸ்லிமீம் கட்சி 5 தொகுதிகளிலும், பிஎஸ்பி 1 தொகுதியிலும் வெற்றி பெற்றன.
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலை முதல் முறையாக எதிர்கொண்ட ஜன சுராஜ் கட்சி 238 தொகுதிகளில் போட்டியிட்டது. ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை. அதேநேரத்தில் இக்கட்சி 3.4% வாக்குகளைப் பெற்றுள்ளது. ஒரு தொகுதியில் இரண்டாம் இடத்தைப் பிடித்த இக்கட்சி, 129 இடங்களில் மூன்றாம் இடத்தையும், 73 தொகுதிகளில் 4ம் இடத்தையும், 24 தொகுதிகளில் 5ம் இடத்தையும் பெற்றது.