மனிதர்களை கொன்று குவிக்க இத்தாலியர்கள் சென்ற இன்பச் சுற்றுலா? – 90-களில் நேர்ந்த கொடூரம்!

பொதுவாக சுற்றுலா எதற்கு செல்வோம்? குடும்பம் அல்லது ஃபிரண்ட்ஸ் உடன் ஜாலி ட்ரிப், சுற்றி பார்க்க, குறிப்பிட்ட ஏதோ ஒரு இடத்தை பார்க்க வேண்டும் போன்ற காரணங்களுக்காக தானே?

ஆனால், 1990-களில், மனிதர்களை சுட்டுக் கொல்வதற்காகவே இத்தாலியர்கள் உள்ளிட்ட பிற வெளிநாட்டினர் சரஜெவோவிற்கு சென்றுள்ளனர். அதுவும் இது ஒரு இன்ப சுற்றுலா.

இந்த விஷயத்தை சமீபத்தில் விசாரணைக்கு கொண்டு வந்துள்ளார் இத்தாலி மிலனை சேர்ந்த எழுத்தாளர் எஸியோ கவாஸ்ஸெனி. இந்த சுற்றுலாவிற்கு ‘ஸ்நைப்பர் சஃபாரி’ என்று பெயராம்.

ஸ்நைப்பர் அலி - சுடப்படக் கூடாது என்று மக்கள் பயந்து சென்ற காட்சி
ஸ்நைப்பர் அலி – சுடப்படக் கூடாது என்று மக்கள் பயந்து சென்ற காட்சி

பின்னணி என்ன?

1945-ம் ஆண்டு முதல் 1980-ம் ஆண்டு வரை யூகோஸ்லாவியாவின் ஆறு குடியரசுகளையும் ஒன்றாக ஒற்றுமையுடன் ஆட்சி செய்தவர் ஜோசப் ப்ரோஸ் டிட்டோ. அவரது இறப்புக்குப் பிறகு, இந்தக் குடியரசுகளில் அரசியல் கட்டுப்பாடு சிதறியது.

ஒவ்வொரு குடியரசுகளும் தங்களுக்கு தனி நாடு வேண்டும் என்று போராட தொடங்கின. இதன் ஒரு பகுதியாக, போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா யூகோஸ்லாவியாவில் இருந்து பிரியலாமா என்பதற்கு ஒரு வாக்கெடுப்பு நடத்தியது.

அதில் போஸ்னியா மற்றும் குரோஷியாவை சேர்ந்தவர்கள் ‘பிரியலாம்’ என்று வாக்களித்தனர். போஸ்னியன் செர்ப் அதை எதிர்த்து வாக்கெடுப்பிலேயே கலந்துகொள்ளவில்லை.

போஸ்னியா செர்ப்பை பொறுத்த வரை, அவர்களுக்கு போஸ்னியா, குரேஷியா பிரிய வேண்டாம். அவர்கள் செர்பியா உடனே தொடர வேண்டும் என்று நினைத்தார்கள்.

இதனால், போஸ்னியா மற்றும் போஸ்னியா செர்ப்பிற்கு இடையே போர் மூண்டது. இந்தப் போரில் கிட்டத்தட்ட 1.50 லட்சம் மக்கள் உயிரிழந்திருக்கின்றனர்.

ஸ்நைப்பர் அலி - குழந்தைகள் பயந்து ஓடும் காட்சி
ஸ்நைப்பர் அலி – குழந்தைகள் பயந்து ஓடும் காட்சி

ஸ்நைப்பர் அலி

போஸ்னியா பகுதியில் ஸ்நைப்பர் அலி என்கிற சாலை உண்டு. அந்தப் பகுதிக்கு மேல் இருக்கும் மலைகளில் இருந்து செர்ப் படைகள் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள், உணவு தேடி வரும் முதியவர்கள், பெண்கள் என்று சுட்டு குவித்தனர்.

அந்த மலையில் இருந்து மனிதர்களைக் கொல்வதற்கு தான் பணக்கார வெளிநாட்டினர் செர்ப்களுக்கு பணம் கொடுத்து சுற்றுலா சென்றுள்ளனர்.

சரேஜெவோ சஃபாரி

2022-ம் ஆண்டு, ஸ்லோவேனிய இயக்குநர் மிரான் ஜூபானிச் ‘சரேஜெவோ சஃபாரி’ என்கிற ஆவணப்படத்தை வெளியிட்டார். அது தான் இந்தக் குற்றசாட்டை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது.

இந்த சுற்றுலாவிற்கு இத்தாலியர்கள் €80,000 (தோராயமாக ரூ.82,73,600) கொடுத்துள்ளனர்.

சில இடங்களில் ஆண்களைச் சுடுவதற்கு €5,000 (தோராயமாக ரூ.5,17,100), பெண்களுக்கு €3,000 (தோராயமாக ரூ.3,10,260), குழந்தைகளுக்குத் €15,000 (தோராயமாக ரூ.15,51,300) என விலைப்பட்டியல் இருந்துள்ளது.

இது குறித்த செய்திகள், 1993-ம் ஆண்டு, போஸ்னியா உளவுத்துறை அறிக்கையில் பதிவு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இதை செர்ப் தரப்பு முழுமையாக மறுக்கின்றன

இந்த ஆவணப்படத்திற்கு பிறகு, உண்மையை கண்டுபிடிக்க அழுத்தம் கொடுக்கப்பட்டது. அதனால், இப்போது இது குறித்து வழக்கு பதிவு செய்து, விசாரணை நடந்து வருகிறது.

ஸ்நைப்பர் அலி - சுடப்படக் கூடாது என்று மக்கள் பயந்து சென்ற காட்சி
ஸ்நைப்பர் அலி – சுடப்படக் கூடாது என்று மக்கள் பயந்து சென்ற காட்சி

விசாரணை

இந்த வழக்கு ‘கொடூரத்துடன் கூடிய விருப்பக் கொலை’ என்கிற குற்றச்சாட்டின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கிற்கு போஸ்னியா அரசு முழுமையாக ஒத்துழைப்பு வழங்குவதாக தெரிவித்துள்ளது.

இந்த விசாரணைக்கு பிறகு 1993-ம் ஆண்டு போஸ்னியா உளவுத்துறை அறிக்கை, ரகசிய சாட்சியங்கள், ஸ்நைப்பர் தள வரைப்படங்கள், முன்னாள் செர்ப் படை வீரர்களின் சாட்சி, 1990-களில் இத்தாலிய தூதரக ஆவணங்கள் போன்ற சாட்சியங்கள் அடிப்படையாக கொள்ளப்பட்டுள்ளன.

ஒருவேளை, இந்த வழக்கு முடிந்து, குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் நிச்சயம் உலகம் அதிரும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.