தவெக: "விஜய் கவனமாக இருக்கணும்; அவரைச் சுத்தி நிறைய சகுனிகள் இருக்காங்க" – பி.டி.செல்வகுமார்

தவெக தலைவர் விஜய்யைச் சுற்றிலும் சூழ்ச்சி வலை இருப்பதாக அவருக்கு 27 ஆண்டுகளாக மேனேஜராகப் பணியாற்றி வந்த பி.டி.செல்வகுமார் தெரிவித்திருக்கிறார்.

நடிகர் விவேக் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று (நவ.19) ‘கலப்பை மக்கள் இயக்கம்’ சார்பாக ‘புலி’ படத் தயாரிப்பாளரும், தவெக கட்சித் தலைவர் விஜய்க்கு 27 ஆண்டுகளாக மேனேஜராகப் பணியாற்றியவருமான பி.டி.செல்வகுமார் சென்னை விருகம்பாக்கம் ஏவிஎம் பார்க் அருகில் 100 பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் வறுமையில் உள்ள சினிமா காமெடி நடிகர்களுக்கு பண உதவி செய்திருந்தார்.

தவெக விஜய்
தவெக விஜய்

அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய பி.டி.செல்வகுமார், “விஜய்யுடன் 27 ஆண்டுகள் பயணித்திருக்கிறேன். விஜய் இப்படி மாபெரும் நட்சத்திரமாக வளர்ந்து இருப்பதில் என்னுடைய பங்கும் இருக்கிறது.

நட்சத்திரம் விஜய்தான். ஆனாலும் அதற்கு உறுதுணையாக நான் இருந்திருக்கிறேன். நான் நேர்மையாக இருந்ததால்தான் எஸ்.ஏ.சந்திரசேகர், விஜய் ஆகியோருடன் பல ஆண்டுகள் பயணிக்க முடிந்தது.

இந்தச் சூழலில் வேதனையுடன் ஒன்று சொல்லிக் கொள்கின்றேன். புலி திரைப்படம் வெளியாகும் முன் என்னுடைய வீட்டிற்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இந்தச் சோதனைக்கு மிக முக்கிய காரணமாக விஜய்யுடன் நெருக்கமாக இருந்தவர்கள்தான் என, எனக்கு சோதனை செய்ய வந்த அதிகாரிகளே தெரிவித்தார்கள். அந்தக் கள்ள நபர்கள் யார்? என்பதை விஜய் அடையாளம் காண வேண்டும்.

மகாபாரதத்திற்கு மிகப் பெரிய காரணமே சகுனிதான். ராமாயணத்திற்கு மிகப்பெரிய காரணமே கைகேயிதான். அதே போல விஜய்யைச் சுற்றிலும் சூழ்ச்சி வலையானது இருக்கிறது.

தவெக விஜய்
தவெக விஜய்

அவர் கவனமாக இருக்க வேண்டும். விஜய்யைச் சுற்றி நிறைய சகுனிகள் இருக்கிறார்கள். அவர்களை அவர் அடையாளம் காண வேண்டும். நல்லவர்களை விஜய் தன்னுடன் வைத்துக்கொள்ளவேண்டும்” என்று பேசியிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.