தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழக்கும் அபாயத்தில் உள்ள இந்திய அணி, தொடரை சமன் செய்வதற்கான வாழ்வா-சாவா போட்டியில் சனிக்கிழமை (நவம்பர் 22) கவுகாத்தியில் களமிறங்குகிறது. கேப்டன் ஷுப்மன் கில் காயம் காரணமாக இந்த போட்டியில் இருந்து விலகியுள்ளதால், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனான ரிஷப் பந்த் முதல் முறையாக டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை வழிநடத்த உள்ளார். இந்த முக்கியமான போட்டியில், இந்திய அணியின் ஆடும் லெவனில் இரண்டு முக்கிய மாற்றங்கள் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Add Zee News as a Preferred Source

தொடரை இழக்கும் அபாயத்தில் இந்தியா
கவுகாத்தியில் உள்ள பர்சபரா மைதானத்தில் முதல் முறையாக ஒரு சர்வதேச டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. முதல் போட்டியில் அடைந்த தோல்வியால், தற்போது தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்தியா பின்தங்கியுள்ளது. இந்த போட்டியிலும் தோல்வியடைந்தால், கடந்த 2000ம் ஆண்டுக்கு பிறகு, இந்திய மண்ணில் தென்னாப்பிரிக்காவிடம் இரண்டாவது முறையாக டெஸ்ட் தொடரை இழக்க நேரிடும். பயிற்சியாளர் கௌதம் கம்பீரின் கீழ், கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்திய அணி சொந்த மண்ணில் சந்திக்கும் இரண்டாவது ‘வொயிட்வாஷ்’ அபாயமாகவும் இது அமைந்துள்ளது.
கில்லுக்குப் பதில் சாய் சுதர்சன்
கேப்டன் ஷுப்மன் கில் இந்த போட்டியில் இருந்து விலகியிருப்பது அணிக்கு ஒரு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அவருக்கு பதிலாக, இளம் வீரரான சாய் சுதர்சன் மீண்டும் அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொல்கத்தாவில் நடந்த முதல் டெஸ்டில் வாய்ப்பு கிடைக்காத சுதர்சன், தனது கடைசி டெஸ்ட் போட்டியான மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் 87 ரன்கள் குவித்து நம்பிக்கை அளித்திருந்தார். அவர் மூன்றாவது வீரராக களமிறக்கப்படுவார் என கூறப்படுகிறது.
அக்சர் படேலுக்குப் பதில் நிதிஷ் குமார் ரெட்டி?
முதல் டெஸ்டில், இந்திய அணியின் முதல் எட்டு வீரர்களில் ஆறு பேர் இடது கை பேட்ஸ்மேன்களாக இருந்தது ஒரு பலவீனமாக கருதப்பட்டது. தற்போது சாய் சுதர்சனின் வருகையால் அந்த எண்ணிக்கை ஏழாக உயரும் அபாயம் உள்ளது. தென்னாப்பிரிக்காவின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான சைமன் ஹார்மருக்கு எதிராக இத்தனை இடது கை பேட்ஸ்மேன்கள் இருப்பது சவாலாக அமையலாம். எனவே, இந்த இதனை சரி செய்ய, சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரான அக்சர் படேலுக்கு பதிலாக, இளம் வீரரான நிதிஷ் குமார் ரெட்டிக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. நிதிஷ் குமாரின் வருகை, அணிக்கு ஒரு வலது கை பேட்ஸ்மேனை வழங்குவதோடு, கவுகாத்தி ஆடுகளத்திற்கு ஏற்ற ஒரு கூடுதல் வேகப்பந்து வீச்சு தேர்வையும் அளிக்கும்.
மற்றபடி, தொடக்க ஆட்டக்காரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல். ராகுல், விக்கெட் கீப்பர்-கேப்டன் ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தங்கள் இடங்களை தக்கவைத்து கொள்வார்கள் என தெரிகிறது. பந்துவீச்சில் குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் ஆடும் லெவனில் இடம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் உத்தேச பிளேயிங் லெவன்
யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல், சாய் சுதர்சன், துருவ் ஜுரெல், ரிஷப் பன்ட் (கேப்டன்/விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் குமார் ரெட்டி, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.
About the Author
RK Spark