‘3’, ‘புதுப்பேட்டை’, ‘கில்லி’ போன்ற படங்கள் ரீ ரிலீஸ் என்கிற புதிய டிரெண்டை உருவாக்கியது.
அப்படங்களுக்கு மக்கள் கொடுத்த ஏகோபித்த வரவேற்பைத் தொடர்ந்து, மக்கள் முன்பு கொண்டாடிய பல கல்ட் க்ளாசிக் படங்களையும் அடுத்தடுத்து ரீ ரிலீஸ் செய்தார்கள்.
ஆனால், அதில் சில படங்கள் நினைத்ததுபோல பெரிதளவில் திரையரங்குகளில் சோபிக்கவில்லை. ஒரு படத்தை ரீ ரிலீஸுக்கு தயார் செய்யும் விநியோகஸ்தர், அப்படத்தைத் தற்போதைய தொழில்நுட்பத்திற்கேற்ப மெருகேற்ற (ரீ மாஸ்டரிங்) அதற்கென குறிப்பிட்ட தொகையை செலவழிப்பார்கள்.
ஆனால், அதற்கு செலவழித்த பணத்தைக் கூட வசூலில் எடுக்க முடியவில்லை என்கிற பேச்சும் இப்போது எழுந்திருக்கின்றது.
.jpg)
இந்த நவம்பர் மாதத்தில் மொத்தமாக நான்கு படங்களை ரீ ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருந்தார்கள். அதில் ‘நாயகன்’, ‘ஆட்டோகிராப்’ படங்கள் கடந்த வாரங்களில் வெளியாகின.
இன்று விஜயின் ‘ப்ரெண்ட்ஸ்’ ரீ ரிலீஸ் ஆகிறது. இதனைத் தொடர்ந்து இம்மாத இறுதியில் சூர்யாவின் ‘அஞ்சான்’ திரைப்படமும் ரீ எடிட் செய்யப்பட்டு திரைக்கு வருகிறது. இதுமட்டுமல்ல, அஜித்தின் ‘அமர்களம்’, ‘அட்டகாசம்’ போன்ற படங்களையும் வெளியிடத் திட்டமிட்டு வருகிறார்கள்.
இப்படியான சூழலில் தற்போதைய ரீ ரிலீஸ் பிசினஸ் குறித்தும், முன்பு போல ரீ ரிலீஸில் படங்கள் பெரிதளவில் வரவேற்பு பெறாதது குறித்தும் தயாரிப்பாளர் தனஞ்செயனிடம் கேட்டறிந்தோம்.
நம்மிடையே பேசிய தனஞ்செயன், “இந்த மாசம் மொத்தமாக நான்கு படங்கள் ரீ ரிலீஸ் ஆகுது. ரீ ரிலீஸ் என்பது தங்க முட்டை போடும் வாத்து மாதிரிதான்! ஒண்ணுதான் எடுக்கணும்.
மொத்தமாக எடுக்கணும்னு நினைச்சா முழுமையாகவே அது போயிடும். கல்ட் க்ளாசிக் படங்களை எப்போதாவது ரீ ரிலீஸ் செய்தால் மக்கள் கண்டிப்பா அதை விரும்பிப் பார்ப்பாங்க.
ஆனா, ஒரே சமயத்துல மொத்தமாகப் பல படங்கள் ரீ ரிலீஸ் ஆகினா, மக்கள் எப்படிப் பார்ப்பாங்க? இப்போ புதுப் படங்களும் அடுத்தடுத்து வந்துட்டே இருக்கு. இங்க பெரிதளவுல புது படங்கள் ரிலீஸ் இல்லாத சமயத்துலதான் ரீ ரிலீஸ் செய்யணும்.

புது ரிலீஸ் எதுவுமில்லாமல் ஒரு இடைவெளி இருக்கிற சமயத்துலதான் ரீ ரிலீஸ் பண்ணனும். அப்போ மக்கள்கிட்ட எதிர்பார்க்கிற வரவேற்பும் கிடைக்கும். ஒரு சில புது படங்கள் வர்ற சமயத்துல ஒரு ப்ளாக்பஸ்டர் படத்தை ரீ ரிலீஸ் செய்யும்போது மக்கள் விரும்பிப் பார்ப்பாங்க.
ஒரே மாசத்துல இத்தனை படங்கள் ரீ ரிலீஸ் ஆகினால், மக்களுக்கு அதனுடைய எக்சைட்மெண்ட் போயிடும். ‘இத்தனை புது படங்கள் வந்திருக்கு, அதுல நான் எதைப் பார்க்கிறது’னு மக்களுக்கு ஒரு எண்ணம் இருக்கு. அப்படியான வேளையில, ரீ ரிலீஸ் படங்கள் கொண்டு வந்தால், அதுக்கு பெரிதளவுல வரவேற்பு இருக்காது.
இந்த வாரம் ஏழு புதிய படங்கள் வந்திருக்கும்போது, எப்படி மக்கள் ரீ ரிலீஸ் படங்களைப் போய்ப் பார்ப்பாங்க. அந்தப் படத்தைப் பார்க்க ஆர்வத்தோட இருக்கிற குறைவான மக்கள்தான் போய் பார்ப்பாங்க. ரீ ரிலீஸுக்கு பெரியளவுல மக்கள் வரவேற்பு கிடைக்கணும்னா, ரிலீஸ்ல ஒரு இடைவெளி இருக்கணும்.
ரீ ரிலீஸுக்கான உரிமத்தை வாங்குற விநியோகஸ்தர்கள், அதனை சரியான நேரத்துல வெளியிடுறதுக்கு திட்டமிடணும். ஒவ்வொரு வகையான படங்களுக்கும், ஒவ்வொரு வகையிலான ஆடியன்ஸ் இருப்பாங்க.
ஆனா, அதுக்கு சரியான ரிலீஸ் தேதியும் முக்கியமானது.” என்றவரிடம் “ரீ ரிலீஸ் படங்களின் வெளியீட்டில், ரீ மாஸ்டரிங்கிற்கு செலவழித்த பணத்தைகூட எடுக்க முடியவில்லை என்கிற பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறதே!” எனக் கேட்டோம்.

பதில் தந்தவர், “ரீ மாஸ்டரிங் செய்வதற்கு செலவு பண்றாங்க. ஆனா, மக்கள் கூட்டம் பெரிதளவுல வரணும்னா ரிலீஸ்ல சரியான திட்டமிடல் இருக்கணும்.
அதனால இப்போ ரீ ரிலீஸ் டிரெண்ட் குறைஞ்சிடுச்சுனு சொல்ல முடியாது. மக்களும் ரீ ரிலீஸ் படங்களைப் பார்க்க நிச்சயம் திரையரங்குகளுக்கு வருவாங்க.
முதல் ரிலீஸ் சமயத்துல தியேட்டர்ல பார்க்காமல் மிஸ் பண்ணின ஆடியன்ஸ் நிச்சயமாக ரீ ரிலீஸை எதிர்பார்த்து வருவாங்க.
புதிய படங்களுக்கு ரிலீஸ் தேதி எவ்வளவு முக்கியமோ, அதுபோல, ரீ ரிலீஸ் படங்களுக்கு சரியான ரிலீஸ் தேதி முக்கியம். வெற்றியை எதிர்பார்ப்பவர்கள் இந்தப் ப்ளான்ல கவனமாக செயல்படணும்.” என்றார்.