ஜெபநேசன் என்ற எழுத்தாளரின் கொலை வழக்கை விசாரிக்கக் களமிறங்குகிறார் இன்ஸ்பெக்டர் மகுடபதி (அர்ஜுன்). அவர் ஏற்கெனவே ஒரு புத்தகத்தை எழுதி வைத்திருப்பதும், அதன் பெயர் ‘காவேரி கரை’ என்றும் தெரிகிறது.

இந்நிலையில் அந்தப் புத்தகத்தின் பின்பக்க அட்டையில் ஒரு அபார்ட்மெண்ட்டின் பெயர் இடம்பெற்றிருப்பதைக் கண்டு, அங்குச் சென்று தன் விசாரணையைத் தொடங்குகிறார்.
எழுத்தாளரின் கொலைக்குக் காரணம் என்ன, யார் கொலை செய்தார்கள் என்பதற்கான விடையைத் தேடுவதே ‘தீயவர் குலை நடுங்க’ படத்தின் கதை.
தனக்கே உரித்தான வசன உச்சரிப்பும் உடல்மொழியும் கொண்டு அர்ஜுன் கவர்ந்திழுக்கிறார் என்றாலும், அவரது ஆக்ஷன் திறனுக்கு இப்படத்தில் போதிய தீனி இல்லை என்பதே உண்மை.
ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கியப் பாத்திரத்தில் தோன்றி, உணர்ச்சிபூர்வமான காட்சிகளில் தன் திறமையை நிரூபித்திருக்கிறார். ஆயினும் அதிரடித் தருணங்களிலும் ஆரம்பக்கட்ட காதல் காட்சிகளிலும் அவரது உடல்மொழி சற்று ஒத்துவரவில்லை.

ஆட்டிசம் பாதிக்கப்பட்டவராக வரும் சிறுமியும் வேல ராமமூர்த்தியும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பாத்திரங்களுக்கு முழு நியாயம் செய்திருக்கிறார்கள்.
ரொமான்ஸ் காட்சிகளில் பிரவீன் ராஜா அப்பட்டமாகத் தோல்வியடைந்திருக்கிறார். உடல்மொழியும் வசன உச்சரிப்பும் வைத்தே காமெடியைச் சித்திரவதை செய்திருக்கிறார் அவரின் நண்பராக வரும் ராகுல்.
பல காட்சிகளை க்ளோஸ்-அப்புகளிலேயே வைத்துள்ள ஒளிப்பதிவாளர் சரவணன் அபிமன்யு, காட்சிக் கோணங்களில் பெரிய வித்தியாசம் காட்டவில்லை.
பாரத் ஆசீவகனின் பின்னணி இசை, சில இடங்களில் பதற்றத்தை ஏற்றினாலும், சைலன்ஸ் என்ற வார்த்தையை அகராதியிலிருந்து நீக்கிவிட்டதைப் போல, சாதாரண காட்சிகளுக்குக்கூட ஒலித்துக் கொண்டேயிருக்கிறது. பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லை.

படத்தொகுப்பாளர் லாரன்ஸ் கிஷோர், தேர்ந்த காட்சிகளுக்கான வறட்சியைப் போக்க முடியாமல் திணறியிருக்கிறார். அதேபோல டெம்ப்ளேட் காதல் காட்சிகளுக்கு இவ்வளவு கருணை காட்டியிருக்க வேண்டிய அவசியமில்லை; இன்னும் சுருக்கமாக அமைந்திருந்தால் களைப்பு சற்று குறைந்திருக்கும்.
படம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே ஒரு கொலையோடு வலுவான ஆரம்பத்தைத் தந்தாலும், பிறகு மிகத் தாமதமாக எடுக்கப்பட்ட காட்சிகள் படத்தின் தீவிரத்தை நீர்த்துப்போகச் செய்கின்றன. பழகிப்போன, எதிர்பார்க்கக்கூடிய திருப்பங்களோடு இடைவேளை வருகிறது.
விசாரணைக் காட்சிகள் அனைத்தும் மிக மோசமாகவும், எந்தச் சுவாரசியமுமின்றி தட்டையாகவும் இருக்கின்றன. பழங்கால படங்களை நினைவூட்டும் பழிவாங்கும் கதைக்கு திரைக்கதையும் அதே பாணியிலேயே எழுதப்பட்டிருப்பது சோதனை.
பாலியல் குற்றங்கள், குறிப்பாக குழந்தைகளுக்கு எதிரானவை பற்றிய கதைகளில், பாதிக்கப்பட்டவரின் வலியை மீண்டும் உணரவைக்கும் அளவுக்குக் கடுமையான காட்சிகள் இடம்பெறாமல் கவனமாக இருக்க வேண்டும். அந்தச் சமநிலையை இப்படம் பல இடங்களில் தவறவிட்டிருக்கிறது. அதிலும் குழந்தை வன்முறை, சிறப்புக் குழந்தைகளைக் காட்சிப்படுத்தும் விதம் போன்றவற்றில் கூடுதல் பொறுப்பு அவசியம் இயக்குநரே!

மொத்தத்தில், மோசமான திரையாக்கமும் யூகிக்கக்கூடிய பழைய திரைக்கதையும் கொண்டு நம்முடைய நேரத்தைத்தான் ஆட்டம் காண வைத்திருக்கிறது இந்த ‘தீயவர் குலை நடுங்க’!