லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னூர் மாவட்டம் கிரட்பூர் கிராமத்தை சேர்ந்த பால்காரர் யூசப். இவர் அதே கிராமத்தை சேர்ந்த 16 வயதான மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை அப்பகுதியில் உள்ள கரும்பு தோட்டத்திற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு வைத்து சிறுமியை யூசப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். 6 மாதங்களுக்குமுன் இந்த சம்பவம் நடந்த நிலையில் சிறுமி கர்ப்பமாகியுள்ளார்.
சிறுமி 6 மாதம் கர்பமாக உள்ளது தற்போது தெரியவந்தது. இது குறித்து போலீசில் கடந்த 20ம் தேதி புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில் யூசப் தலைமறைவானார்.
இந்நிலையில், நஜிபாபாத் அருகே உள்ள பேப்பர் மில் பகுதியில் யூசப் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் அப்பகுதிக்கு விரைந்து சென்ற போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது அங்கு பதுங்கி இருந்த யூசப் போலீசாரை தாக்கிவிட்டு தப்பியோட முயன்றார். இதையடுத்து, யூசப்பை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர். போலீசார் சுட்டதில் காலில் காயமடைந்த யூசப் அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சைக்குப்பின் யூசப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.