RBI warning : நாடு முழுவதும் வங்கி கணக்கு வைத்திருப்பவர்களை குறி வைத்து மோசடிகள் அதிகம் நடக்கின்றன. குறிப்பாக, ஆன்லைன் பணப்பரிவர்த்தனை அதிகமாகிவிட்ட நிலையில், அதை வைத்து மோசடி செய்பவர்களின் எண்ணிக்கையும் பெருகிவிட்டது. சாமானியர்கள் கூட இப்போது ஆன்லைன் பணப்பரிவர்த்தனை செய்கின்றனர். அந்த மக்களை குறி வைக்கும் மோசடியாளர்கள், இந்திய ரிசர்வ் வங்கி பெயரில் மெசேஜ் அனுப்புகின்றனர். அ தில், உங்கள் வங்கி கணக்கு இன்னும் சில மணி நேரங்களில் முடங்கப்போகிறது, உடனே நீங்கள் வங்கி கணக்கு எண், மொபைல் எண், பாஸ்வேர்டு, ஓடிபிக்களை ஷேர், இந்த எண்ணுக்கு ஷேர் செய்யுங்கள் என ஒரு மொபைல் எண்ணையும் மோசடியாளர்கள் கொடுக்கிறார்கள்.
Add Zee News as a Preferred Source
இந்த மெசேஜ்களை பார்த்ததும் சாமானிய மக்கள், கூலி வேலை செய்பவர்கள் பதற்றம் அடைந்து விடுகின்றனர். மேலும் அவர்கள் கேட்கும் தகவல்களை அனுப்பிவிடுகின்றனர். அப்படி செய்பவர்களின் வங்கி கணக்குகளில் இருந்து உடனடியாக பணமும் களவாடப்படுகிறது. இது குறித்த புகார்களும் நாடு முழுவதும் காவல்நிலையங்களில் இன்றளவும் பதிவாகிக் கொண்டு தான் இருக்கின்றன. இப்போதும் அப்படியான ஒரு மெசேஜ், வாட்ஸ்அப் மற்றும் தனிப்பட்ட மெசேஜ்களில் பரவிக் கொண்டிருக்கிறது.
அதில், உங்கள் வங்கி கணக்கு உடனே பிளாக் செய்யப்பட உள்ளது. உங்களின் வங்கி கணக்கில் சந்தேகத்துக்கு இடமான பணப்பரிவர்த்தனைகள், மோசடி பணப்பரிவர்த்தனைகள் நடந்திருக்கின்றன. குறிப்பாக உங்களின் கிரெட் கார்டு மூலம் இந்த மோசடி பணப்பரிவர்த்தனை நடந்திருக்கிறது. அந்த கிரெடிட் கார்டுடன் தொடர்புடைய அனைத்து வங்கிகளும் முடக்கப்பட்டுவிடும். இன்னும் 2 மணி நேரம் மட்டுமே உங்களுக்கு காலவகாசம் இருக்கிறது. உங்களுக்கு ஒரு அழைப்பு வரும், அப்போது 9 என்ற எண்ணை அழுத்தவும் என்பது போன்ற வழிக்காட்டல்களுடன் அந்த மெசேஜ் பரவிக் கொண்டிருக்கிறது.
அதுவும் ரிசர்வ் வங்கி அனுப்பிய மெசேஜ் போலவே அச்சு அசலாக இருக்கிறது. இதனை யாரும் நம்ப வேண்டாம் என மத்திய அரசின் உண்மை சரிபார்ப்புக்குழு கேட்டுக் கொண்டுள்ளது. இவையெல்லாம் மோசடியாளர்கள் பணத்தை சுருட்டுவதற்கு விரிக்கும் வலை என எச்சரித்துள்ள மத்திய அரசு, பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. ஏதேனும் சந்தேகம் இருந்தால் உடனடியாக 918799711259 என்ற மொபைல் எண்ணை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டுக் கொள்ளுமாறும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
பொதுமக்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், படித்தவர்கள், படிக்காதவர்கள் எல்லோரையும் மோசடி கும்பல் திட்டமிட்டு ஏமாற்றுகிறது. ஒருவேளை நீங்கள் விழிப்புடன் இருப்பவர் என்றால் உங்களுக்கு அண்டை வீட்டில் வசிப்பவர்களுக்கு இப்படியான மோசடி குறித்து விழிப்புணர்வு கொடுங்கள். ஏனென்றால் நாள்தோறும் ஏதாவது ஒரு மூலையில் இந்த மோசடிகள் இன்னும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. இவரெல்லாம் படித்தவர், இவரெல்லாம் மோசடியில் சிக்கமாட்டார் என நீங்கள் நினைக்கும் ஒருவர் கூட வங்கி சார்ந்த மோசடிகளில் சிக்கிக் கொள்ள வாய்ப்புள்ளது. எனவே, ரிசர்வ் வங்கி பெயரில் பரவும் போலிச் செய்திகளை மக்களை நம்ப வேண்டாம்.
About the Author

Karthikeyan Sekar
I am Karthikeyan, a Senior Sub-Editor at Zee Tamil News Channel, bringing 10 years of experience in the media industry. I have extensive experience working in both news television and online website platforms.
…Read More