TVK Vijay: “விஜய் வாக்குறுதிகள்: முதலில் அத்தைக்கு மீசை முளைக்கட்டும்" – ஜெயக்குமார் பதில்

மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர். நடிப்பில் 1975-ம் ஆண்டு வெளியான திரைப்படம் இதயக்கனி. தற்போது இந்த திரைப்படம் டிஜிட்டல் வடிவம் பெற்று சென்னை ஆல்பர்ட் திரையரங்கில் திரையிடப்பட்டு 150 நாட்களை எட்ட உள்ளது.

இந்த நிலையில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் ஆல்பர்ட் திரையரங்கில் இதயக்கனி திரைப்படத்தை கண்டு ரசித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “50 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட இதயக்கனி, தற்போது 150 நாட்கள் ஓடுகிறது.

இப்போதும் எம்.ஜி.ஆர் மக்கள் மனதில் வாழ்ந்து வருகிறார். தமிழ்நாட்டுக்கு ஒரே ஒரு அண்ணாதான், ஒரே ஒரு எம்.ஜி.ஆர் தான், ஒரே ஒரு ஜெயலலிதா தான். வேறுயாராலும் அந்த இடத்துக்கு வரமுடியாது.

தவெக சிறப்புப் பொதுக்குழு கூட்டத்தில் விஜய்
தவெக சிறப்புப் பொதுக்குழு கூட்டத்தில் விஜய்

அறிஞர் அண்ணாவை வைத்து அரசியல் வியாபாரம் செய்கிறது தி.மு.க. நடிகர் விஜய்யை எம்.ஜி.ஆருடன் ஒப்பிடுகிறார்கள் என்கிறீர்கள். வானுக்கு ஒரே ஒரு சந்திரன் தான், அதுபோல ஒரே ஒரு எம்.ஜி.ராமச்சந்திரன்தான்.

அவரோடு யாரையும் ஒப்பிட முடியாது. எந்தக் கட்சியாக இருந்தாலும் புரட்சித் தலைவரின் பெயரை உச்சரிக்காமல் கட்சி நடத்த முடியாது. அந்த வகையில்தான் விஜய் தலைவர் எம்.ஜி.ஆர் பெயரை உச்சரித்திருக்கிறார்.

அத்தைக்கு மீசை முளைக்கட்டும்

எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பித்ததின் நோக்கமே அ.தி.மு.க ஆட்சிக்கு வரவேண்டும் என்பதுதானே. அந்த நோக்கம் இந்த தேர்தலில் நிறைவேறும். விஜய் அவரின் பேச்சில் தேர்தல் வாக்குறுதிகளாக சில அறிவிப்புகளைச் செய்திருக்கிறார்.

அதைக் கேட்கும்போது ‘முதலில் அத்தைக்கு மீசை முளைக்கட்டும்’ என்ற வாசகம்தான் நினைவுக்கு வந்தது. ஒ.பி.எஸ் என்.டி.ஏ கூட்டணியில் சேருவதற்கான ஏற்பாடுகளை செய்துவருகிறார் என்றால், அது குறித்து என் நண்பர் நயினார்தான் பதிலளிக்க வேண்டும். தமிழ்நாட்டில் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணிதான் ஆட்சி அமைக்கும் எனவே, என்.டி.ஏ கூட்டணி குறித்து பேச முடியாது” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.