தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கும் வேளையில், அடுத்து வரவுள்ள டி20 தொடருக்கான இந்திய அணியில் மிகப்பெரிய மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. குறிப்பாக, சஞ்சு சாம்சன் அணியிலிருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளதாகவும், அவருக்கு பதிலாக அதிரடி மன்னன் ரிஷப் பண்ட் மீண்டும் டி20 களத்திற்குத் திரும்பவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க அணி, டெஸ்ட் தொடரை தொடர்ந்து 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட நீண்ட தொடரில் விளையாடவுள்ளது. இதற்கான ஒருநாள் அணியை அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழு சமீபத்தில் அறிவித்தது. சுப்மன் கில்லுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் கே.எல்.ராகுல் ஒருநாள் அணிக்கு தலைமை தாங்குகிறார். ஆனால், ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருப்பது சூர்யகுமார் யாதவ் தலைமையிலான டி20 அணியின் அறிவிப்புக்காகத்தான்.
Add Zee News as a Preferred Source

சஞ்சு சாம்சனுக்கு நேரும் சோகம்?
2024 டி20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்த சஞ்சு சாம்சன், இந்த முறை அணியிலிருந்து நீக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலிய தொடரிலேயே அவருக்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைக்கவில்லை. அவருக்கு பதிலாக ஜித்தேஷ் சர்மாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. தற்போது ரிஷப் பண்ட் முழு உடற்தகுதியுடன் ஒருநாள் அணியில் இடம் பெற்றுள்ளார். அவர் டி20 அணிக்கும் திரும்பவுள்ளதால், முதன்மை விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் செயல்படுவார். மாற்று விக்கெட் கீப்பராக ஜித்தேஷ் சர்மா நீடிக்க வாய்ப்புள்ளது. இதனால், அணியின் காம்பினேஷன் கருதி சஞ்சு சாம்சனுக்கு அணியில் இடம் கிடைக்காது என்றே தெரிகிறது. இது அவரது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமையலாம்.
தொடக்க வீரராக ஜெய்ஸ்வால்
இந்திய அணியின் நட்சத்திர தொடக்க வீரரான சுப்மன் கில் கழுத்து வலி காரணமாக அவதிப்பட்டு வருகிறார். இதனால் அவர் டி20 தொடரில் பங்கேற்பது சந்தேகமே. இந்த சூழல் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு மீண்டும் கதவுகளை திறந்துள்ளது. முன்னதாக, அபிஷேக் சர்மா பந்துவீசக்கூடியவர் என்பதால் ஜெய்ஸ்வால் அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டிருந்தார். தற்போது கில் இல்லாததால், அபிஷேக் சர்மாவுடன் இணைந்து ஜெய்ஸ்வால் இன்னிங்ஸை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள் இருவரும் இந்திய அணியின் எதிர்காலத் தூண்களாக பார்க்கப்படுகிறார்கள்.
பாண்டியா மற்றும் பும்ரா வருகை
ஒருநாள் அணியில் இடம் பெறாத ஹர்திக் பாண்டியா, உள்ளூர் தொடரான சையத் முஷ்டாக் அலி டிராபியில் பரோடா அணிக்காக விளையாடி தனது உடற்தகுதியை நிரூபிக்கவுள்ளார். அதனை தொடர்ந்து அவர் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் களமிறங்குவார். அதே போல், ஒருநாள் போட்டிகளில் ஓய்வு அளிக்கப்பட்ட வேகப்பந்து வீச்சுத் தளபதி ஜஸ்பிரித் பும்ரா, டி20 போட்டிகளில் மீண்டும் இணைந்து பந்துவீச்சுக்கு வலுசேர்க்கவுள்ளார். மிடில் ஆர்டரில் திலக் வர்மா மற்றும் ரிங்கு சிங் ஆகியோர் தங்கள் இடத்தை தக்கவைத்துக்கொள்வார்கள். சுழற்பந்து வீச்சை பொறுத்தவரை வருண் சக்கரவர்த்தி மற்றும் குல்தீப் யாதவ் கூட்டணி அமைப்பார்கள்.
தென்னாப்பிரிக்கா தொடருக்கான உத்தேச இந்திய அணி
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரிங்கு சிங், ஹர்திக் பாண்டியா, சிவத் துபே, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ஜித்தேஷ் சர்மா, அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷித் ராணா.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
About the Author
RK Spark