இந்திய அணி சமீபகாலமாக டெஸ்ட் போட்டிகளில் சந்தித்து வரும் தொடர் சறுக்கல்கள் ரசிகர்களை மட்டுமல்ல, முன்னாள் வீரர்களையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், விராட் கோலியின் சகோதரர் விகாஸ் கோலி, சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள கருத்து ஒன்று பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அது நேரடியாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீரை குறிவைப்பதாகவே பார்க்கப்படுகிறது. சொந்த மண்ணில் நியூசிலாந்திடம் ஏற்பட்ட ஒயிட்வாஷ் தோல்வி, அதனை தொடர்ந்து தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் தடுமாற்றம் என இந்திய கிரிக்கெட் அணி கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. கௌதம் கம்பீர் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்ற பிறகு, அணியின் அணுகுமுறையில் செய்யப்பட்ட மாற்றங்கள் பலனளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்துள்ளது.
Add Zee News as a Preferred Source

விகாஸ் கோலியின் சர்ச்சை பதிவு
இந்த சூழலில் தான், விராட் கோலியின் மூத்த சகோதரர் விகாஸ் கோலி, தனது Threads பக்கத்தில் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார். அதில் அவர், “நன்றாக செயல்பட்டு கொண்டிருந்த விஷயங்களை, தேவையில்லாமல் அதிகாரம் செய்து மாற்ற நினைத்தால் இப்படித்தான் நடக்கும்” (This is what happens when u try to boss around and change things unnecessary which were not broken) என்று குறிப்பிட்டுள்ளார்.
அவர் யாருடைய பெயரையும் நேரடியாக குறிப்பிடவில்லை என்றாலும், இது கௌதம் கம்பீரையும், பிசிசிஐ நிர்வாகத்தையும் மறைமுகமாக சாடுவதாகவே கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகின்றனர். விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா போன்ற மூத்த வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு அணியின் செயல்பாடு சரிவை சந்தித்து வருவதையும் இந்த பதிவு சுட்டிக்காட்டுவது போல் உள்ளது.

மாற்றங்களும் விளைவுகளும்
ஒரு காலத்தில் வெளிநாட்டு தொடர்களில்கூட வெற்றியை மட்டுமே குறிக்கோளாக கொண்டு ஆடிய இந்திய அணி, இப்போது சொந்த மண்ணிலேயே போட்டியை டிரா செய்யப் போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்றும் விகாஸ் கோலி வேதனை தெரிவித்துள்ளார். “நாங்கள் வெளிநாடுகளிலும் வெற்றிக்காக விளையாடிய காலம் ஒன்று இருந்தது. ஆனால் இப்போது இந்தியாவிலேயே போட்டியைப் காப்பாற்ற விளையாடுகிறோம்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கம்பீர் பயிற்சியாளராக வந்த பிறகு, அணியின் பேட்டிங் வரிசை மற்றும் உத்திகளில் செய்யப்பட்ட தேவையற்ற மாற்றங்களே இந்த தோல்விகளுக்கு காரணம் என்று ஒரு தரப்பினர் வாதிடுகின்றனர். விராட் கோலிக்கும் கம்பீருக்கும் இடையிலான பழைய மோதல்கள் அனைவருக்கும் தெரிந்ததே. இந்நிலையில், விகாஸ் கோலியின் இந்த பதிவு அந்த விவாதத்திற்கு மீண்டும் எண்ணெய் ஊற்றியுள்ளது. இந்திய அணி கௌஹாத்தியில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் திணறி வரும் நிலையில், விகாஸ் கோலியின் இந்த கருத்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இது இந்திய கிரிக்கெட் நிர்வாகத்திற்கு மேலும் அழுத்தத்தை அதிகரித்துள்ளது என்பதில் சந்தேகமில்லை.
About the Author
RK Spark