டெல்லி,
உலக அளவில் விளையாட்டு போட்டிகளின் திருவிழாவாக ஒலிம்பிக் கருதப்படுகிறது. ஒலிம்பிக்கிற்கு அடுத்தபடியாக விளையாட்டு போட்டிகளின் திருவிழாவாக காமன்வெல்த் போட்டி கருதபடுகிறது. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் காமன்வெல்த் போட்டிகளில் 70க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். அந்த வகையில் 2026ம் ஆண்டுக்கான காமன்வெல்த் போட்டிகள் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெறுகிறது.
இதனை தொடர்ந்து 2030ம் ஆண்டு நடைபெறும் காமல்வெல்த் போட்டிகளை நடத்த இந்தியா திட்டமிட்டிருந்தது. போட்டிகளை நடத்துவதற்கு காமன்வெல்த் கூட்டமைப்பில் இந்தியா விண்ணப்பித்திருந்தது. மேலும், இந்தியாவில் காமன்வெல்த் போட்டிகளை நடத்த குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் தேர்வு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், 2030ம் ஆண்டுக்கான காமன்வெல்த் போட்டிகளை இந்தியா நடத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. காமன்வெல்த் கூட்டமைப்பு இந்த ஒப்புதலை அளித்துள்ளது. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 2010ம் ஆண்டு இந்தியாவின் டெல்லியில் காமன்வெல்த் போட்டிகள் நடத்தப்பட்டன. அதன்பின்னர் 20 ஆண்டுகள் கழித்து 2030ம் ஆண்டு மீண்டும் காமன்வெல்த் போட்டிகளை இந்தியா நடத்த அனுமதி கிடைத்துள்ளது. முன்னதாக, 2030ம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகளை குஜராத்தின் அகமதாபாத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.