“DMK is an emotion; இது நான் சேர வேண்டிய இடம்தான்; உதயம் வரும்" – உதயநிதி விழாவில் கமல்

தமிழக அரசியலில் அ.தி.மு.க, தி.மு.க என இரு பிரதான கட்சிகளையும் எதிர்த்து 2018-ல் மக்கள் நீதி மய்யம் எனும் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கி தனது முதல் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிட்ட கமல்ஹாசன், கட்சி ஆரம்பித்த ஐந்தே ஆண்டுகளில் தி.மு.க-வுடன் கூட்டணி சேர்ந்தார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ராஜ்ய சபா சீட்டுக்காக தி.மு.க-வுடன் ஒப்பந்தம் போட்டு தேர்தலிலேயே மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை.

அந்த ஒப்பந்தத்தின்படி தற்போது மாநிலங்களவையில் எம்.பி-யாக இருக்கிறார் கமல்.

ஸ்டாலின் - கமல்
ஸ்டாலின் – கமல்

இவ்வாறிருக்க 10 நாள்களுக்கு முன்பு நிகழ்ச்சியொன்றில் கமல், “எதுக்காக நீங்க தி.மு.க-வோடு சேர்ந்தீங்க, நீங்கதான் டிவி மேல ரிமோட் தூக்கி போட்டீங்களே, ஏன் மறுபடியும் அங்க போனீங்களேன்னு கேட்டீங்கனா… ஆமா ரிமோட் தூக்கி போட்டேன்.

விமர்சிக்கும் உரிமை ஜனநாயகத்துக்கு உண்டு. ஒருத்தருக்கொருத்தர் அடிச்சிக்க வேணாம் இனிமே, எவனோ வந்து ரிமோட்ட தூக்கிட்டு போயிட்றான்… அப்படின்னு எடுத்த முடிவு இது. இந்தக் கூட்டணி புரிஞ்சா புரிஞ்சிக்கோங்க, புரியலன்னா சும்மா இருங்க” என்று தி.மு.க-வுடனான கூட்டணி குறித்து பேசியிருந்தார்.

இந்த நிலையில் சென்னையில் இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளையொட்டி தி.மு.க சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் தி.மு.க-வுடன் சேர்ந்தது பற்றி கமல் மீண்டும் விளக்கியிருக்கிறார்.

நிகழ்ச்சியில் பேசிய கமல், “இது அரசியல் இக்கட்டுக்காகவோ சூழலுக்காகவோ நான் சேர்ந்த இடமல்ல. நான் சேரவேண்டிய இடம்தான் இது. எங்கள் கொள்கைகள் எல்லாம் ஒரேமாதிரியானது.

நாங்கள் இதை நிகழ்த்தியே ஆகவேண்டும் என்று போர்க்குரல் கொடுப்பது இவர்களோடு அல்ல.

இதனை நடத்த வேண்டும் என்று போட்டியாகத் தேர்தலில் போட்டியிட்டபோது நாங்கள் சொன்ன ஐடியாவாக இருந்தாலும் அதை எடுத்துக்கொண்டு செயல்படுத்திக் காட்டியவர்கள் இவர்கள். இவர்களோடு சேர்வதா இல்லை யாரென்றே தெரியாதவர்களுடன் சேர்வதா…

உதயநிதி ஸ்டாலின் - கமல்ஹாசன்
உதயநிதி ஸ்டாலின் – கமல்ஹாசன்

கலைஞருக்கு ஓய்வு கொடுத்தது சரிதான். எங்களுக்கு வருத்தமாக இருந்தது. ஆனால் அந்த ஓய்வுகூட கொடுக்கலனா 90 வயதுக்கு மேல அவர் வாழ்ந்திருக்க மாட்டார். அந்த ஓய்வுக்கு நன்றி.

அதேபோல் அவருடைய பேரனும் நீண்ட நாள் வாழ்ந்து இந்த அமைப்புக்கு நன்மை சேர்க்க வேண்டும். தி.மு.க என்பது ஒரு உணர்வு.

என் வயது என்னவோ அதுதான் தி.மு.க-வைப் பற்றிய என் புரிதல். நான் கண்திறந்தபோது பார்த்த சூரியன் இதான். இருட்டு வரும், நாளை சூரியன் வரும்.

இருட்டைப் பார்த்து நான் பயப்பட மாட்டேன். ஏனென்றால் விடியும், உதயம் வரும். உதயநிதியும் வருவாரு, முதலமைச்சரும்… இன்னொரு பாராட்டு விழாவுக்கு இந்த அரங்கம் பத்தாது” என்று சிரித்தவாறே கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.