இந்தியாவை தரக்குறைவாக பேசிய தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் – அனில் கும்ப்ளே பதிலடி

மும்பை,

இந்தியா – தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் இடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது. இதில் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா, இந்திய அணியை ஒயிட்வாஷ் செய்தது. அத்துடன் 25 வருடங்களுக்கு பிறகு இந்திய மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரை வென்று வரலாறு படைத்தது.

இதில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி போட்டி கவுகாத்தியில் நடைபெற்றது. இந்த போட்டியின் 4வது நாளில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெறுவதற்கு தேவையான முன்னிலையைப் பெற்றும் டிக்ளேர் செய்வதற்கு தாமதப்படுத்தியது.

அதற்கான காரணத்தைக் கேட்டபோது தென் ஆப்பிரிக்கா பயிற்சியாளர் சுக்ரி கான்ராட், “We Wanted India To Grovel’’ என தெரிவித்தார். `Grovel’ என்றால், கைகள், முழங்கால்களை தரையில் ஊன்றி மண்டியிட வைப்பது என அர்த்தம். இது இனவெறியை குறிக்கும் என்பதால் பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

முன்னதாக 1976-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணியை தோற்கடித்து ‘Grovel’ அதாவது ‘மண்டியிட வைப்போம்’ என்று இங்கிலாந்து கேப்டன் டோனி கிரைக் இனவெறியை தூண்டும் வகையில் பேசினார். அதற்கு வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் கிளைவ் லாய்ட் பதிலடி கொடுத்தார். அவரது தலைமையில் வெறித்தனமாக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் 3 – 0 (3) என்ற கணக்கில் இங்கிலாந்தை தோற்கடித்து டோனி கிரைக்கிற்கு தக்க பதிலடி கொடுத்தது. தொடரின் இறுதியில் இங்கிலாந்து கேப்டன் அந்த வார்த்தை கூறியதற்கு மன்னிப்பு கேட்டார்.

தற்போது அதே போன்று பேசிய சுக்ரி கான்ராட்டுக்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். அந்த வரிசையில் இந்திய முன்னாள் வீரரான அனில் கும்ப்ளே, சுக்ரி கான்ராட்டுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியது பின்வருமாறு:- “ இதனுடன் (Grovel) ஒரு வரலாறு இணைக்கப்பட்டுள்ளது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு இங்கிலாந்து கேப்டன் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இதே வார்த்தையை பயன்படுத்தினார். அதன் பிறகு என்ன நடந்தது என்பது நம் அனைவருக்கும் தெரியும். தென் ஆப்பிரிக்கா தொடரை வென்றிருக்கலாம். ஆனால் நீங்கள் உச்சத்தில் இருக்கும்போது, ​​உங்கள் வார்த்தைகளைத் தேர்ந்தெடுப்பது முக்கியம். இதுபோன்ற நேரங்களில் பணிவு மிக முக்கியமானது.

பயிற்சியாளரிடமிருந்தோ அல்லது துணை ஊழியர்களிடமிருந்தோ நான் நிச்சயமாக இதை எதிர்பார்க்கவில்லை. நீங்கள் வெற்றி பெறும்போது, ​​முதலில் பணிவாக இருக்க வேண்டும், பத்திரிகையாளர் சந்திப்பில் இதுபோன்ற ஒன்றைச் சொல்லக்கூடாது” என்று கூறினார்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.