அப்புக்குட்டிக்கு மற்றுமொரு தேசிய அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. ஆம், அவர் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான ‘பிறந்தநாள் வாழ்த்துகள்’ திரைப்படம் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டிருக்கிறது.
கோவாவில் நடைபெற்று வரும் இந்த சர்வதேச திரைப்பட விழாவுக்கு தமிழிலிருந்து அப்புக்குட்டியின் இந்தத் திரைப்படமும், சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ திரைப்படமும்தான் திரையிடத் தேர்வு செய்யப்பட்டிருந்தன.
கோவா திரைப்பட விழாவில் படத்தைப் பார்த்த பலரும் அப்புக்குட்டிக்கு பெரும் பாராட்டுகளைக் கொடுத்து வருகிறார்கள்.

வாழ்த்துகள் தெரிவித்து அப்புக்குட்டியிடம் பேசினோம். கோவா திரைப்பட விழாவில் படத்திற்கு கிடைத்த பாராட்டுகள் தந்த உற்சாகத்தில் நம்மிடம் பேசத் தொடங்கியவர், “ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு. நெகிழ்வான தருணமாகவும் இருக்கு.
எப்போதுமே ஒரு நடிகருக்கு தன்னுடைய படத்துக்கு பெரிய அங்கீகாரம் கிடைக்கும்போதுதான் அளவில்லா மகிழ்ச்சி உண்டாகும். அப்படியான மகிழ்ச்சியில்தான் நான் இருக்கேன்.
எங்களுடைய ‘பிறந்தநாள் வாழ்த்துகள்’ திரைப்படம் பேசும் கண்டென்ட்டிற்காகத்தான் படத்தைத் இந்த சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்வு செய்ததாகச் சொன்னார்கள். அப்படத்தில் வர்ற என்னுடைய கதாபாத்திரம் எனக்கு ரொம்பவே சவாலானதும் கூட!
படத்தில் கதாநாயகியாக நடித்திருந்த ஐஸ்வர்யா அனில்குமாரும், ஶ்ரீஜா ரவி மேடமும் அற்புதமான நடிப்பைக் கொடுத்திருந்தாங்க.
ஒரு சர்வதேச திரைப்பட விழாவில் என்னுடைய படத்தைத் திரையிட்டு, அதை பலரும் பார்த்துப் பாராட்டுவது பெரிய விஷயம். முக்கியமா, என்னுடைய நடிப்பைப் பலரும் பாராட்டினாங்க.
எனக்குக் கொடுக்கப்பட்ட கேரக்டரை நான் சரியாகக் கையாண்டிருக்கேன்னு இந்தத் திரைப்பட விழாவின் பெரியவர்களும் பலரும் என்னை பாராட்டி பேசினாங்க.
இயக்குநர் இப்படியான ஒரு கண்டென்ட்டை உருவாக்கினதால்தான் அதில் என்னால் நடிக்க முடிந்தது.
இந்தப் படத்தைப் பார்க்கும்போது மதுப் பழக்கத்தை விடணும்னு பார்வையாளர்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படும்.
அந்த மெசேஜை இயக்குநர் ராஜூ சந்திரா சரியாகச் சொல்லியிருந்தார்.

இன்னைக்கு இந்தப் படம் இந்தளவுக்கு பேசப்படுறதுக்கும் இயக்குநர்தான் காரணம்.” என்றவர், “அடுத்தடுத்து தேசிய அங்கீகாரம் கிடைப்பதுல ரொம்பவே மகிழ்ச்சி.
இதெல்லாம் ஒரு கலைஞனா என்னை நான் புதுப்பித்துக் கொள்வது மாதிரிதான். தேசிய விருது கொடுத்த மகிழ்ச்சியில நான் பல படங்களைத் தேர்வு செய்து நடிச்சேன்.
இன்னைக்கு இப்படியான ஒரு அங்கீகாரம் கிடைச்சப் பிறகு, இயக்குநர்கள் பலரும் இது மாதிரியான கண்டென்ட்ல அப்புக்குட்டி நடிச்சா நல்லா இருக்கும்னு யோசிப்பாங்க.
அந்த வகையில் பெரிய மனநிறைவும் எனக்கு உருவாகியிருக்குனு சொல்லலாம்.
மக்களும் இதுபோன்ற படங்களைத் தியேட்டரில் வந்து பார்த்து வரவேற்பு கொடுக்கணும்.
கோவா திரைப்பட விழாவுக்கும் போகும்போது நான் தேசிய விருது பெற்ற நடிகர் அப்படிங்கிறது பிளஸ்ஸாக இருந்துச்சு.
தேசிய விருது வென்ற நடிகர், இப்படியான படங்களெல்லாம் இவர் செய்திருக்கார்னு என்னை அங்க அடையாளப்படுத்தியதும் மகிழ்ச்சியைத் தந்தது.” எனப் பேசினார்.

நாம் அவரிடம், “ படத்திற்கு இது போன்ற அங்கீகாரங்கள் கிடைத்திருக்கும் சூழலில், திரையரங்க ரிலீசில் படத்திற்கு இன்னும் வரவேற்பு கிடைத்திருக்கலாம் என்ற வருத்தம் இருக்கிறதா?” எனக் கேட்டோம்.
பதில் தந்தவர், “இன்னைக்கு தேவையான புரோமோஷன் கொடுக்கலைனா, மக்கள் எப்படி படம் பார்க்க வருவாங்க? இந்த மாதிரியான படங்களை நல்லா ப்ரோமோட் பண்ணி ரிலீஸ் செய்யணும்ங்கிறதுதான் என்னுடைய எண்ணம்.
இப்படியான படங்களைப் பெரிதளவில் நாம் புரோமோட் செய்யும்போது மக்களும் படத்தைப் பார்த்துக் வருவாங்க. மக்களை நாம் குறை சொல்லக் கூடாது.
ஓடிடி தளத்தில் கூடிய விரைவில் இந்தத் திரைப்படம் ரிலீஸாகும். அப்போ மக்களுக்கு இந்தப் படம் நிச்சயமாகப் பிடிக்கும்.
தியேட்டரிலேயே இந்தப் படம் ஜெயிக்க வேண்டியதுதான். ஆனா, இப்போ ஓடிடியில் நிச்சயமாக ஜெயிப்போம்.
வணிக வெற்றியும் இங்கே முக்கியமானதுதான். ஒரு நடிகருக்கு சம்பளம் ஏறணும்னா வணிகரீதியான வெற்றி ரொம்ப முக்கியம்.
என்னுடைய படங்களுக்கு வணிக ரீதியான வெற்றி கிடைச்சு, தயாரிப்பாளர் சம்பாதிச்சிருந்தார்னா எனக்கும் சம்பளமும் ஏறியிருக்கும்.

ஒரு நல்ல படத்தை எடுத்து திரையரங்க ரிலீஸுக்கு கொண்டு வர்றது தயாரிப்பாளர்கள்கிட்ட இருக்கு. நடிகர்களாகிய நாங்க ஒரு படத்துல நடிச்சிடுவோம்.
ஆனா, அதை மக்கள்கிட்ட கொண்டு சேர்க்க வேண்டியது ஒரு தயாரிப்பாளருடைய கைகளில் இருக்கு. முன்னாடி மாதிரி இப்போ சூழல் கிடையாது.
தயாரிப்பாளரே தியேட்டருக்குப் படத்தைக் கொண்டு வர வேண்டிய ரிஸ்கான சூழல் இருக்கு!” என்றவர் அவருடைய அடுத்தப் படங்கள் குறித்து, ” ‘ஜீவகாருண்யம்’, ‘வாழ்க விவசாயி’னு இரண்டு படங்கள்ல கதையின் நாயகனாக நடிச்சிருக்கேன்.
இன்னொரு படத்திலேயும் லீட் கேரக்டர்ல நடிக்கிறேன். சிம்புதேவன் சார் டைரக்ஷன்லையும் ஒரு படம் நடிக்கிறேங்க!” என்றார் அப்புக்குட்டி.