நீட் விலக்கு மசோதா: பிப்.8-ல் சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டம்

சென்னை: நீட் விலக்கு தொடர்பான சட்டமுன்வடிவை மீண்டும் நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெறுவதற்காக பிப்.8-ல் சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறும் என்று பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழக ஏழை, எளிய மாணவர்களை பெரிதும் பாதிக்கும் என உணர்ந்த நமது முதல்வர், கடந்தாண்டு செப்.13-ம் தேதி நீட் தேர்வு தமிழகத்துக்கு தேவையில்லை என்பதை அறிந்து அதற்கு ஒரு சட்டமுன்வடிவினை கொண்டு வந்தார். சட்டமன்றத்தில் முழுமையாக விவாதிக்கப்பட்டு, ஒருமனதாக அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு அனுப்புவதற்கு பதிலாக, 142 நாட்கள் கழித்து, சட்டப்பேரவைத் தலைவராகிய எனக்கு, 1.2.2022 அன்று, மீண்டும் பரிசீலனை செய்து அனுப்புங்கள் என்ற அடிப்படையில் எனக்கு திரும்ப அனுப்பி வைக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக கடந்த 3.2.2022 அன்று, ஆளுநர் மாளிகையில் இருந்து ஒரு பத்திரிக்கை செய்தியாகவும் அது வெளியிடப்பட்டதால், பத்திரிக்கைகள், ஊடகங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் எல்லாம் அதுபற்றி விவாதிக்க தொடங்கிவிட்டார்கள். இதையறிந்த முதல்வர் இன்று, சட்டமன்றத்தில் உள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி, அதில் கலந்துகொண்ட சட்டமன்றக் கட்சிகளின் தலைவர்களின் கருத்துகளைக் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில், மீண்டும் அந்த சட்டமுன்வடிவினை சட்டமன்றத்தைக் கூட்டி அதிலே விவாதித்து, அதனை மீண்டும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெறுவதற்காக ஆளுநருக்கு அனுப்ப வேண்டும் என முடிவெடுக்கப்பட்டதை தமிழக சுகாதாரத்துறை மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் அலுவல் சாரா தகவல் மூலமாகவும், முதல்வர் தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையிலும், அந்த ஆணையின் நகலை என்னுடைய கவனத்துக்கு கொண்டு வந்தார்.

இது மிக முக்கியமான ஒரு விஷயம். தமிழக மாணவ மாணவிகளின் மருத்துவ படிப்பு சார்ந்த மிக முக்கியமான விசயம். இதற்கு சரியான நடவடிக்கை என்னவென்றால், சட்டமன்றத்தைக் கூட்டி, மீண்டும் விவாதித்து குடியரசுத் தலைவரின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பது எனது கவனத்துக்கு கொண்டு வந்தார். சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சட்டப்பேரவை விதி 143-ன் கீழ், சட்டமன்றத்தின் சிறப்பு கூட்டத்தை உடனடியாக கூட்டி, நீட் சம்பந்தப்பட்ட இந்த சட்டமுன்வடிவை மீண்டும் சட்டமன்றத்தில் விவாதித்து, மீண்டும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற அனுப்பி வைக்க வேண்டும் என்பதை கடிதம் மூலம் என்னுடைய கவனத்துக்கு கொண்டு வந்துள்ளார்.

இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு, அவர்கள் கூறுகின்ற கருத்துகள் எல்லாம் நியாயமாகவும் , தமிழக மக்களின் நலன் சார்ந்தும் இருக்கின்ற காரணத்தினால், வருகின்ற 8-ம் தேதி தலைமைச் செயலகத்தில் அமைந்துள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் வைத்து, காலை 10 மணிக்கு தமிழக சட்டமன்றத்தினுடைய சிறப்புக் கூட்டத்தை கூட்டுவது என்று தீர்மானித்துள்ளேன். அதன் அடிப்படையில் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், கடந்தாண்டு செப்.13-ம் தேதி நீட் தேர்வு தொடர்பாக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்ட கடிதத்தின் நகலும், தற்போது ஆளுநர் பிப்.1-ம் தேதி எனக்கு அனுப்பிய அறிக்கையும் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும். பிப்.8-ம் தேதி நிகழ்ச்சி நிரலுடன் அதுவும் அனுப்பி வைக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, தமிழகத்தில் நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவது தொடர்பான சட்டமுன்வடிவை தமிழக சட்டமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனத் தெரிவித்து, ஆளுநர் அச்சட்டமுன்வடிவினைத் திருப்பி அனுப்பி வைத்துள்ள நிலையில், இதுதொடர்பாக மேற்கொள்ள வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (5-2-2022) தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில், 10-வது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்: மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வு முறையானது ஏழை, நடுத்தர வகுப்பு மாணவர்களை மிகவும் பாதித்துள்ளதோடு, மாநில அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்க்கும் உரிமையை மாநில அரசுகளிடம் இருந்து பறிப்பதாகவும் அமைந்துள்ளது. சிறப்புப் பயிற்சி வகுப்புகளுக்குத் தொடர்ந்து செல்லும் வசதி வாய்ப்புகள் பெற்றவர்களுக்கு மட்டுமே சாதகமாக அமைந்துள்ள இந்தத் தேர்வு முறை, பள்ளிக் கல்வியின் அவசியத்தையே சீர்குலைக்கின்றது. இவற்றைக் கருத்தில்கொண்டு, இந்தத் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும், பள்ளிக் கல்வியில் மாணவர்கள் பெறும் 12-வது வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையிலேயே தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைமுறை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் தமிழக மக்களிடையே நிலவி வரும் அசைக்கமுடியாத கருத்தொற்றுமையை மனதில் கொண்டு, மாநில அரசுகளின் உரிமைகளை நிலைநாட்டும் விதமாக, நீட் தேர்வில் இருந்து தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு விலக்கு அளிக்கும் சட்டமுன்வடிவை 13-9-2021 அன்று தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றி, அதனை குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றிட, மத்திய அரசுக்கு அனுப்பி வைப்பதற்காக ஆளுநருக்கு அனுப்பி வைத்தோம்.

இந்தச் சட்டமுன்வடிவை ஆளுநர் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்காத நிலையில், முதல்வர், ஆளுநரை நேரில் சந்தித்து, இந்தச் சட்டமுன்வடிவை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்குமாறு வலியுறுத்தினார். மேலும், தமிழகத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து, குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் இதுகுறித்து மனு அளித்தும், மத்திய உள்துறை அமைச்சரை நேரில் சந்தித்தும் வலியுறுத்தினார்கள். தமிழகத்திலுள்ள மாணவர்களின் மருத்துவக் கனவினை நனவாக்கிடவும், எதிர்கால நலனைப் பாதுகாத்திடவும், இது போன்ற பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்தோம்.

இருப்பினும், மக்களாட்சி தத்துவத்தின் அடிப்படையில், சட்டமன்றத்தில் மக்கள் நலன் கருதி நிறைவேற்றப்பட்ட இந்தச் சட்டமுன்வடிவினை மத்திய அரசுக்கு அனுப்பாமல் ஐந்து மாத காலம் வைத்திருந்து, பின்னர் அந்தச் சட்டமுன்வடிவை தமிழக சட்டமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனத் தெரிவித்து, ஆளுநர் 1-2-2022 அன்று பேரவைத் தலைவர் அவர்களுக்குத் திருப்பி அனுப்பி வைத்துள்ளார். இந்த நிலையில், நீட் தேர்விலிருந்து விலக்கு கோரும் இந்தச் சட்டமுன்வடிவு ஏழை, நடுத்தர மாணவர்களின் நலனுக்கு எதிரானது, இச்சட்டத்திற்கு அடிப்படையான நீதியரசர் ஏ.கே. ராஜன் குழு தெரிவித்துள்ள கூற்றுகள் தவறானவை என்றும் ஆளுநர் குறிப்பிட்டுள்ளது சரியல்ல என நடுநிலையாளர்களும், சட்ட வல்லுநர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், நீட் தேர்விலிருந்து விலக்கு தேவையற்றது என்ற ஆளுநரின் கருத்தை தமிழக மக்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

மருத்துவ மாணவர் சேர்க்கையில் ஏழை, நடுத்தர மாணவர்களின் நலனைப் பாதுகாக்கவும், மாநில அரசுகளின் உரிமையை மீட்டெடுக்கவும், நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதே தீர்வாக அமையும் என்ற அடிப்படையில், சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி, நீட் தேர்வு குறித்து ஆளுநர் தெரிவித்துள்ள கருத்துகள் குறித்து தெளிவாக விவாதித்து, சரியான வாதங்களை எடுத்துரைத்து, இந்தச் சட்டமுன்வடிவை மீண்டும் நிறைவேற்றி, குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற மத்திய அரசுக்கு அனுப்பி வைப்பதற்காக ஆளுநருக்கு மீண்டும் அனுப்புவது என இந்தச் சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.