மே 26 முதல் இந்தியாவில் ட்விட்டர், ஃபேஸ்புக் செயல்படுமா? 

ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் செயல்பட மூன்று மாதங்களுக்கு முன் இந்திய அரசு புதிய சட்டதிட்டங்களை அறிமுகம் செய்தது. அவற்றை அந்தத் தளங்கள் இன்னும் ஏற்காத நிலையில் அதற்கான கெடு மே 26-ம் தேதி (நாளை) முடிகிறது. இதனால் தொடர்ந்து இந்தத் தளங்கள் இயங்க அனுமதிக்கப்படுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

இடைநிலை வழிமுறைகள் மற்றும் டிஜிட்டல் ஊடக நெறிமுறை விதிகள், 2021இன் கீழ், இந்திய அரசிதழில் புதிய விதிமுறைகளைக் கடந்த பிப்ரவரி 25ஆம் தேதியன்று இந்திய அரசாங்கம் குறிப்பிட்டிருந்தது. ஆனால், அதில் பெரும்பாலான விஷயங்களை இன்னும் சமூக வலைதளங்கள் பின்பற்றவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த விதிமுறைகளின் கீழ் வரவில்லையென்றால், இடையீட்டாளர்கள் என்கிற நிலையை சமூக வலைதளங்கள் இழக்கும். அவற்றால் நடக்கும் குற்றச்செயல்களுக்கு அந்தந்தத் தளங்கள் பொறுப்பாகும் நிலையும் உருவாகியுள்ளது.

கூ என்கிற இந்திய சமூக ஊடக நிறுவனத்தைத் தவிர வேறு எந்த முன்னணி சமூக ஊடகமும் அவர்கள் நிறுவனத்தில் குறைகளைக் கேட்டறியும் அதிகாரியையும், தலைமை இணக்க அதிகாரியையும், நோடர் தொடர்பு நபரையும் இன்னும் நியமிக்கவில்லை. மூன்று மாதங்கள் கெடு இருந்தும் இவை எதையும் சமூக வலைதளங்கள் செய்யவில்லை என்பது அரசுத் தரப்பைக் கோபப்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

தனிநபர் கணக்குகளைத் தன்னிச்சையாக முடக்குதல், வசவுகள், மத ரீதியான அவதூறுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் இருத்தல் என இந்தியப் பயனர்கள் ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்கள் மீது தொடர் புகார்களை முன்வைத்து வருகின்றனர்.

ஊகத்தின் அடிப்படையிலான ட்விட்டரின் முடிவுகளைப் பல பயனர்கள் கண்டித்து வருகின்றனர். அண்மையில் பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பாத்ராவின் ட்வீட் ஒன்றை ட்விட்டர் தரப்பு மோசடி என்று குறித்ததைத் தொடர்ந்து, காங்கிரஸ் டூல்கிட் சர்ச்சையில் டெல்லி காவல்துறையின் ட்விட்டர் இந்தியாவின் டெல்லி அலுவலகத்தில் விசாரணை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஒரு மாதத்தில் எத்தனை புகார்கள் எழுந்தன, அவற்றில் எவ்வளவு தீர்க்கப்பட்டன என்பது குறித்து அறிக்கையையும் இந்த சமூக ஊடகங்கள் தரவில்லை. சில தளங்கள், இன்னும் ஆறு மாதங்கள் அவகாசம் கோரியுள்ளன. இன்னும் சில தளங்கள், அமெரிக்காவில் அவர்களது தலைமை என்ன சொல்கிறதோ அதற்குக் காத்திருப்பதாக, வழக்கமான பதிலைத் தந்திருக்கின்றனர்.

இந்தியா போன்ற அதிக மக்கள் தொகை இருக்கும் ஜனநாயக நாட்டில் அமெரிக்காவைச் சேர்ந்த சமூக வலைதளங்கள் மிகப்பெரிய பயனர் கூட்டத்தையும், லாபத்தையும் ஈட்டியுள்ளன. ஆனால், இந்தத் தளங்கள் எதுவும் இந்தியாவின் சட்ட திட்டங்களை மதிப்பதில்லை. மேலும், உண்மை சரிபார்க்கும் அவர்களது வழிமுறை குறித்தும், எது தவறான ட்வீட் என்பதை எப்படித் தீர்மானிக்கிறார்கள் என்கிற வழிமுறை குறித்தும் வெளிப்படையாக எதையும் சொல்ல மறுத்து வருகின்றன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.