மும்பையில் காலமான பாடகி லதா மங்கேஸ்கரின் உடலுக்குப் பிரதமர் நரேந்திர மோடி, மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். சிவாஜி பார்க் மைதானத்தில் முழு அரசு மரியாதையுடன் லதா மங்கேஷ்கரின் உடல் தகனம் செய்யப்பட்டது.
பாரத ரத்னா விருது பெற்ற பாடகி லதா மங்கேஷ்கர் உடல்நலக் குறைவால் மும்பை பிரீச்கேண்டி மருத்துவமனையில் கடந்த மாதம் அனுமதிக்கப்பட்டார். தீவிரச் சிகிச்சை அளித்தும் பயனின்றி இன்று காலையில் காலமானார். அவரது மறைவுக்குக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், மாநில முதலமைச்சர்கள், திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இரண்டு நாள் அரசு முறைத் துக்கம் கடைப்பிடிக்கப்படும் என்றும், அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
லதா மங்கேஷ்கரின் உடல் மருத்துவமனையில் இருந்து பெட்டார் சாலையில் உள்ள அவரது இல்லத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டது. அங்கு அரசியல் தலைவர்கள், திரைத்துரையினர் அவரது உடலுக்கு மரியாதை செலுத்தினர். தேசியக் கொடி போர்த்தப்பட்ட லதா மங்கேஷ்கரின் உடல் அலங்கரிக்கப்பட்ட ஊர்தியில் ஊர்வலமாக சிவாஜிபார்க் மைதானத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டது. சாலையின் இருபுறமும் ஏராளமானோர் கூடிநின்று அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
சிவாஜி பார்க் மைதானத்தில் லதா மங்கேஷ்கரின் உடலுக்குப் பிரதமர் நரேந்திர மோடி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், துணை முதலமைச்சர் அஜித் பவார், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர், நடிகர் ஷாருக்கான் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
மத வழக்கப்படி குடும்பத்தினர் இறுதிச் சடங்குகளைச் செய்த பின் துப்பாக்கிக் குண்டுகள் முழங்கி மரியாதை செலுத்தப்பட்டது. அதன் பின் உடல் எரியூட்டப்பட்டது