லதா மங்கேஷ்கர் தமிழில் பாடிய பாடல்கள்

இந்தியாவின் இசைக்குயில் என அழைக்கப்பட்ட லதா மங்கேஷ்கர் உடல்நலக் குறைவால் காலமானார். 1942ம் ஆண்டு தன்னுடைய திரையுலகப் பயணத்தை ஆரம்பித்த லதா கடந்த 60 வருடங்களில் இந்திய மொழிகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.

ஹிந்தியில் பல சூப்பர் ஹிட் பாடல்களைப் பல கதாநாயகிகளுக்குப் பாடியள்ளார். தனித்துவமான அவரது குரல் சமீப கால கதாநாயகிகளுக்கும் கூட பொருத்தமாக இருந்து ரசிகர்களை ரசிக்க வைத்தது.

தமிழில் இவரது குரலில் படங்களில் இடம்பெற்று, வெளியான பாடல்களில் மூன்றே மூன்று பாடல்களை மட்டுமே பாடியுள்ளார் லதா. அந்த மூன்று பாடல்களும் இளையராஜா இசையில் அமைந்தவை. பிரபு, ராதா மற்றும் பலர் நடித்து இளையராஜா இசையமைப்பில், சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரித்து வெளிவந்த 'ஆனந்த்' படத்தில் இடம் பெற்ற 'ஆராரோ… ஆராரோ..' பாடல்தான் அவர் தமிழில் பாடிய முதல் பாடல். சிவாஜி குடும்பத்தினரும், லதா குடும்பத்தினரும் நெருக்கமானவர்கள் என்பதால் அவரை அழைத்து வந்து பாட வைத்தனர் சிவாஜி குடும்பத்தினர்.

அதற்கடுத்து 1988ல் கமல்ஹாசன், அமலா நடித்து இளையராஜா இசையில் வெளிவந்த 'சத்யா' படத்தில் 'வளையோசையில்…கலகலவென…' பாடலை எஸ்பி பாலசுப்ரமணியத்துடன் இணைந்து பாடினார். இந்தப் பாடல் மாபெரும் ஹிட்டடித்த பாடல். இன்றும் பல மேடைக் கச்சேரிகளில், டிவி நிகழ்ச்சிகளில் இப்பாடல் பாடப்பட்டு வருகிறது. லதா மங்கேஷ்கர் என்றாலே தமிழ் சினிமா இசை ரசிகர்களுக்கு இந்தப் பாடல்தான் ஞாபகம் வரும்.

மூன்றாவது மற்றும் கடைசி பாடலாக லதா தமிழில் பாடிய பாடல் இடம் பெற்ற படம் 1988ல் இளையராஜா இசையில் வெளிவந்த 'என் ஜீவன் பாடுது'. இப்படத்தில் 'எங்கிருந்தோ அழைக்கும் என் ஜீவன்' என்ற பாடலைத் தனியாகவும், மனோவுடனும் இணைந்து பாடியிருக்கிறார் லதா. இந்தப் பாடலும் சூப்பர் ஹிட்டான ஒரு பாடல்.

இவை தவிர்த்து 1991ல் இளையராஜா இசையில் கண்ணுக்கொரு வண்ணக்கிளி என்ற படத்தில் இங்கே பொன் வீணை என்ற பாடலையும், கமல்ஹாசன் நடித்த சத்யா படத்தில் இடம்பெறாத ‛இங்கேயும் அங்கேயும்' என்ற பாடலையும் பாடி உள்ளார்.

இந்த பாடல்களுக்கு முன்பே, 1952ல் வெளியான ஹிந்தி டப்பிங் படமான 'ஆண் முரட்டு அடியாள்' (ஹிந்தியில் Aan) என்ற படத்தில் நான்கு பாடல்களையும், அதற்குப் பிறகு 1956ல் வெளிவந்த ஹிந்தி டப்பிங் படமான 'வான ரதம்' (ஹிந்தியில் Uran Khatola) படத்தில் ஒரு பாடலையும் பாடியுள்ளார் லதா மங்கேஷ்கர். இவை தவிர ஹிந்தியில் இருந்து தமிழில் டப்பிங் ஆன ஒரு சில படங்களின் பாடல்களை பாடி உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.