மும்பை,
மறைந்த பாடகி லதா மங்கேஷ்கரின் உடல், ராணுவ வாகனத்தில் வைத்து இறுதி சடங்கிற்காக சிவாஜி பார்க் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. மறைந்த பாடகி லதா மங்கேஷ்கரின் இறுதி ஊர்வலம், மும்பை பிரபுகஞ்சில் இருந்து தொடங்கியது. இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்டு இசை குயிலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
இந்தநிலையில், மும்பை சிவாஜி பூங்காவில் வைக்கப்பட்டு இருந்த பாரத ரத்னா லதா மங்கேஷ்கர் உடலுக்கு பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினார்.
மத்திய மந்திரி பியூஷ் கோயல், மராட்டிய ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி, கோவா முதல்-மந்திரி பிரமோத் அஞ்சலி செலுத்தினர். லதா மங்கேஷ்கரின் குடும்பத்தினர், உறவினர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆறுதல் கூறினார்.
இறுதி அஞ்சலி நிகழ்வில் மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே , சரத் பவார், சச்சின், ஷாருக்கான் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
இந்நிலையில், மும்பை சிவாஜி பூங்காவில் வைக்கப்பட்டுள்ள பாரத ரத்னா லதா மங்கேஷ்கர் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது.
முப்படை வீரர்கள் மற்றும் மராட்டிய காவல்துறையினர் இறுதி மரியாதை செலுத்தினர். லதா மங்கேஷ்கர் உடலுக்கு துப்பாக்கிக் குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்டது. லதா மங்கேஷ்கரின் உடலில் போர்த்தப்பட்ட தேசியக்கொடி குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.
தொடர்ந்து மும்பை சிவாஜி பூங்காவில் முப்படை, மாநில காவல்துறை மரியாதையுடன் லதா மங்கேஷ்கரின் உடல் தகனம் செய்யப்பட்டது.
லதா மங்கேஷ்கர் மண்ணை விட்டு மறைந்தாலும் அவரது தங்கக்குரல் அழியாதது, அவரது ரசிகர்களின் இதயங்களில் தொடர்ந்து எதிரொலிக்கும்.