கூகுள் தேடலில் தனிப்பட்ட வாட்ஸ் அப் குழுக்களின் லிங்க்: மீண்டும் எழும் வாட்ஸ் அப் பாதுகாப்பு அச்சம்!

வாட்ஸ் அப் தனிப்பட்ட குழுக்களின் இணைப்புகள் கூகுள் தேடியந்திரத்தில் தேடினால் கிடைத்திருப்பது மீண்டும் தெரியவந்துள்ளது. அதாவது, இவை ரகசியமான, தனிப்பட்ட வாட்ஸ் அப் உரையாடல் குழுக்களாக இருந்தாலும் அவற்றின் இணைப்பு (லிங்க்) இருந்தால் அதை கூகுளில் தேடியே எளிதில் அந்தக் குழுவில் இணைந்துவிடலாம்.

சுயாதீன இணையப் பாதுகாப்பு ஆய்வாளர் ராஜேஷகர் என்பவர் இது குறித்துப் பகிர்ந்துள்ளார். இதனால் வாட்ஸ் அப் தனிப்பட்ட குழுக்களின் பாதுகாப்பு குறித்து மீண்டும் கேள்வியெழுந்துள்ளது.

அண்மையில், தனிப்பட்ட வாட்ஸ் அப் குழுக்களில் இணையக் கிட்டத்தட்ட 4,000 இணைப்புகள் கூகுள் தேடியந்திரத்தில் பட்டியலிடப்பட்டிருந்தன. தனிப்பட்ட குழுக்கள் வசதிக்கு எந்தவித அர்த்தமுமின்றி யார் வேண்டுமானாலும் இந்த இணைப்புகளை வைத்து அந்தந்தக் குழுக்களில் இணையும் சூழல் ஏற்பட்டது. இதனால் வாட்ஸ் அப் பாதுகாப்பில் அத்துமீறல் நடந்துள்ளதாகச் சந்தேகங்கள் எழுந்தன.

இதுகுறித்துப் பேசியிருக்கும் வாட்ஸ் அப் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் அலிசன் பானி பேசுகையில், “பொதுத் தளங்களில் பகிரப்படும் விஷயங்களைத் தேடியந்திரத்தில் கண்டுபிடிப்பது போலத்தான் குழுக்களின் இணைப்புகள் பொதுவில் பகிரப்படும்போது அவை மற்றவர்களுக்குக் கிடைக்கிறது. தங்களுக்குப் பரிச்சயமானவர்களிடம் பகிரப்படும் இணைப்புகளை யாரும் பொது இணையதளங்களில் பகிரக்கூடாது” என்று கூறியுள்ளார்.

இன்னொரு பக்கம் வாட்ஸ் அப்பின் தனியுரிமைக் கொள்கைகளில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதை ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கு பிப்ரவரி 8ஆம் தேதிக்குப் பிறகு வாட்ஸ் அப் செயல்படாது. பயனர்கள் பற்றிய விவரங்களை ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட, ஃபேஸ்புக்கின் மற்ற நிறுவனங்களுடன் பகிரப்படும் என்று இந்தப் புதிய விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் தங்களின் விவரங்கள், உரையாடல்களின் பாதுகாப்பு குறித்து பல பயனர்களிடையே அச்சம் எழுந்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.