கிராம சபை போல ஏரியா சபை, விலையில்லா தரமான குடிநீர்… – மநீம வாக்குறுதிகளின் முக்கிய அம்சங்கள்

சென்னை: தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குறுதிகளை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார். அதில், அனைத்து வீடுகளுக்கும் விலையில்லா தரமான குடிநீர், மனிதக்கழிவுகளை மனிதனே அகற்றும் அவலநிலைக்கு முற்றுப்புள்ளி என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.

மநீம வாக்குறுதிகள்: அனைத்து வீடுகளுக்கும் விலையில்லா தரமான குடிநீர், முறையான மழைநீர் சேகரிப்பு அமைப்பு உறுதி செய்யப்படும். காற்றிலிருந்து தண்ணீர் எடுக்கும் தொழில்நுட்பத்தை பரவலான பயன்பாட்டிற்கு கொண்டுவர முயற்சிகள் எடுக்கப்படும்.

> கிராம சபை போல, தங்களது வார்டிற்கு என்ன தேவை என்பதை அந்தந்தப் பகுதி மக்களே முடிவுசெய்வதற்கு வழிவகுக்கும் ஏரியா சபை, வார்டு கமிட்டி கூட்டங்கள் செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்படும். மக்கள் நீதி மய்யம் கவுன்சிலர்கள் இக்கூட்டத்தில் தங்களது மாதாந்திர செயல்பாட்டுக்கான அறிக்கையைச் சமர்ப்பிப்பர்

> வெளிப்படையான நிர்வாகத்தை உறுதிப்படுத்த, வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து விவாதித்து, நிதி ஒதுக்கும் கவுன்சிலர் கூட்ட விவாதங்கள் இணையதளத்தில் நேரலை செய்யப்படும்.

> தொழில்நுட்பத்தின் உதவியோடு வீடு தேடி உள்ளாட்சி சேவை மையம் வரும் – மக்கள் தேவைகள் வீட்டு வாசலில் நிவர்த்தி செய்யப்படும்.

> குறிப்பிட்ட கால உத்தரவாதத்துடன் கூடிய தரமான சாலைகள், உரிய விதிமுறைகளைப் பின்பற்றிப் போடப்படுவதை உறுதி செய்வோம்.

> அனைத்து நகர்ப்புற உள்ளாட்சிகளிலும் மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் அவலநிலைக்கு உயர்தொழில்நுட்ப உதவியுடன் முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

> ஒவ்வொரு தெருவிலும் ஸ்மார்ட் கழிவுத் தொட்டி அமைத்து குப்பைக் கழிவுகள் மறுசுழற்சி செய்யப்படும். பொது இடங்களில் தேவையான கழிப்பிடங்கள் உறுதிசெய்யப்படும்.

> வீட்டுவரி, குடிநீர் வரி போன்ற வரிகள் வசூலிக்கும் முறை சீரமைக்கப்படும்.

> பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் மேம்படுத்தப்படும்.

> முறையான பராமரிப்புடன் பூங்கா, உடற்பயிற்சிக்கூடம் மற்றும் நூலகம் அமைப்பது உறுதி செய்யப்படும்.

> ஒருங்கிணைந்த போக்குவரத்து மேலாண்மை அமைக்கப்படும். இதன்மூலம் அவசர ஊர்திகள் சென்சார் உதவியுடன் கண்டறிந்து தடையில்லா போக்குவரத்து உறுதி செய்யப்படும்.

> மழைநீர் தேங்காத தெருக்கள் என்ற நிலையை அடைய முறையான மழைநீர் வடிகால் அமைப்புகள் அமைக்கப்படும்.

> நீர்நிலை ஆக்கிரமிப்புகள் தடுக்கப்படும், கட்டிட வரைபட அனுமதிகள் விரைவாக லஞ்சம் இல்லாமல் வழங்கப்படுவது உறுதி செய்யப்படும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.