'ஜெய் ஸ்ரீராம்' என்றோ, 'அல்லாஹ் அக்பர்' என்றோ பள்ளி வளாகத்தில் கூறுவதை ஊக்கப்படுத்த முடியாது கர்நாடக அமைச்சர் பி.சி.நாகேஷ் பேச்சு

பெங்களூரு: ‘ஜெய் ஸ்ரீராம்’ என்றோ, ‘அல்லாஹ் அக்பர்’ என்றோ பள்ளி வளாகத்தில் கூறுவதை ஊக்கப்படுத்த முடியாது என்று கர்நாடக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பி.சி.நாகேஷ் தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் (முக்காடு), பர்தா (முகத்திரை), புர்கா (முழு நீள உடை) அணிந்து வருவதற்கு இந்துத்துவா அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அங்கு ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. கல்லூரிக்கு ஹிஜாப் அணிந்துவந்த மாணவி முஸ்கானை, காவி துண்டுகள் அணிந்த‌ ஏபிவிபி அமைப்பினர் சூழ்ந்து கொண்டு ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று முழக்கம் எழுப்பினர். அந்த கூட்டத்துக்கு அஞ்சாமல் மாணவி தனியாளாக ‘அல்லாஹ் அக்பர்’ என்று முழக்கம் எழுப்பிய காட்சி சமூக வலைத்தளங்களின் வாயிலாக வைரலானது. இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; “சட்டம்-ஒழுங்கை யாரும் கையில் எடுத்துவிட முடியாது. எந்தத் தவறான செயலையும் அரசு விட்டுவைக்காது. மாண்டியாவில் அந்த மாணவி வரும்போது எந்த மாணவர்களும் அவரை சுற்றி வளைக்கவில்லை. எந்த மாணவர்களும் அவர் அருகில் செல்லவில்லை. ’ஜெய் ஸ்ரீராம்’ என்றோ, ’அல்லாஹ் அக்பர்’ என்றோ பள்ளி வளாகத்தில் கூறுவதை ஊக்கப்படுத்த முடியாது” என்று தெரிவித்தார். இதனிடையே, ஹிஜாப் விவகாரம் குறித்து மகாராஷ்டிரா அமைச்சர் ஆதித்ய தாக்ரே கூறும்போது, “பள்ளிகள் சீருடை சார்ந்து என்ன சொல்கிறதோ, அதனைத்தான் பின்பற்ற வேண்டும். கல்வி மையங்களில் கல்வியில் மட்டுமே கவனம் செலுத்தவேண்டும். மதம் அல்லது அரசியல் பிரச்சினைகளை பள்ளி, கல்லூரிகளுக்கு கொண்டு வரக் கூடாது” என்று கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.