மலை இடுக்கில் சிக்கிய இளைஞர் – 3 நாட்களுக்கு பிறகு மீட்பு!

கேரள மாநிலத்தில், மலை இடுக்கில் சிக்கித் தவித்த இளைஞரை மூன்று நாட்களுக்கு பிறகு ராணுவத்தினர் பத்திரமாக மீட்டனர்.

கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்தவர் பாபு (வயது 28). இவரும், இவரது நண்பர்களும் நேற்று முன்தினம் மலம்புழையில் காட்டுப் பகுதிக்குள் மலையேறச் சென்றனர். மலையில் இருந்து பாபு இறங்கிய போது, பள்ளமான இடத்தில் பாறை இடுக்குகளுக்குள் தவறி விழுந்தார். அவருடன் சென்றவர்கள் அவரை மீட்க முயற்சி செய்தும் முடியவில்லை.

இதை தொடர்ந்து அவர்கள் மலையில் இருந்து இறங்கி மலம்புழை வனத்துறையினரிடம் தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து, மலை ஏற்ற வீரர்களும், விபத்து பேரிடர் மீட்பு படையினரும் விரைந்து சென்றனர். ஆனால் பாபு சிக்கியுள்ள இடத்தை அவர்களால் அடையாளம் காண முடியவில்லை. இதை தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணி தொடங்கியது. நீண்ட நேரத்திற்கு பின் வாலிபர் பாபு சிக்கியுள்ள இடம் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை மீட்கும் பணி முடுக்கி விடப்பட்டது.

மலை இடுக்கில் சிக்கிய இளைஞரை ஹெலிகாப்டர் மூலம் கடற்படையினர் மீட்க மேற்கொண்ட போது முயற்சி தோல்வியில் முடிந்தது. அதனை தொடர்ந்து இந்திய ராணுவத்தின் உதவியை கேரள மாநில அரசு நாடியது. இதனையடுத்து தகை வெலிங்டன், பெங்களூரில் இருந்து வந்த மலையேற்ற பயிற்சி பெற்ற ராணுவ வீரர்கள் தற்போது மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முதற்கட்டமாக மலை இடுக்கில் 48 மணி நேரமாக சிக்கி உள்ள பாபுவை நெருங்கிய ராணுவ வீரர்கள், அவருக்கு தெம்பு அளிக்கும் வகையில் உணவு, தண்ணீர் வழங்கினர்.

இந்நிலையில், உணவு, தண்னீர் இன்றி தவித்து வந்த இளைஞர் பாபுவை, 43 மணி நேர போராட்டத்திற்கு பிறகு இந்திய ராணுவம் அவரை பத்திரமாக மீட்டது. மலை இடுக்கில் சிக்கி தவித்த இளைஞர் பாபுவை இந்திய ராணுவ வீரர்கள் கயிறு மூலம் மீட்டனர்.
பாலக்காடு
எம்.எல்.ஏ சாபி பரம்பேல், இளைஞர் மீட்கப்பட்ட தகவலை உறுதிப்படுத்தினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.