ஹிஜாப் விவகாரம்: கர்நாடகாவில் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்த இரண்டு வாரம் தடை!

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் விவகாரம் சர்ச்சையாக்கப்பட்டுள்ள நிலையில்,  ஆர்ப்பாட்டங்கள், கூட்டங்கள் நடத்த இரண்டு வாரங்கள் தடை விதித்து மாநகர காவல் ஆணையர் கமல்பண்ட் உத்தரவிட்டுள்ளார்.

பெங்களூரு நகரில் உள்ள பள்ளி வாசல், பியு கல்லூரிகள், பட்டயக் கல்லூரிகள் மற்றும் அதுபோன்ற கல்வி நிறுவனங்களுக்கு 200 மீட்டர் சுற்றளவில் எந்தவிதமான கூட்டங்கள், போராட்டம் அல்லது போராட்டங்கள் நடத்த அனுமதி கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் பள்ளி, கல்லூரி மாணாக்கர்களுக்கு ஒரே சீருடை கொண்டு வரப்பட்டுள்ளது. இதையடுத்து, உடுப்பியில் அமைந்துள்ள  அரசு PUC கல்லூரியில் பயிலும் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என்று கல்லூரி நிர்வாகம் அவர்களை வெளியேற்றியது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மாணவிகள் போராட்டத்தில் குதித்ததால், அதை எதிர்த்து மற்றொரு தரப்பினர் காவி துண்டு அணிந்து போராட்டம் நடத்தினர். இது மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

இந்தவிவகாரம் நீதிமன்றத்தைக்கு சென்ற நிலையில், இன்று ஹிஜாப் வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்ற தனி நீதிபதி, வழக்கு கூடுதல் அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டதுடன், ஒரே சீருடை உத்தரவுக்கு தடை விதிக்கவும் மறுத்து விட்டார்.

முன்னதாக கல்வி நிலையங்களில் நிலவும் பதற்றமான சூழலை தணிக்கும் விதமாக கர்நாடகாவில் அடுத்த 3 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த நிலையில்  பெங்களூருவிலும் ஆர்ப்பாட்டங்கள், கூட்டங்கள் நடத்த இரண்டு வாரங்கள் தடை விதித்து மாநகர காவல் ஆணையர் கமல்பண்ட் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.