நாடாளுமன்றத்தின் நேரத்தை பிரதமர் நரேந்திர மோடி வீணடித்து விட்டதாக, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றம் சாட்டி உள்ளார்.
நாடாளுமன்ற
பட்ஜெட் கூட்டத்தொடர்
கடந்த ஜனவரி மாதம் 31 ஆம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து கடந்த 1 ஆம் தேதி 2022 – 2023 ஆம் நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை, பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த மத்திய நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இதை அடுத்து நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் குடியரசுத் தலைவரின் உரைக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்து பேசினார். அப்போது எதிர்க்கட்சியான காங்கிரசை அவர் கடுமையாக தாக்கி பேசினார்.
இந்நிலையில்,
காங்கிரஸ்
மூத்தத் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜூன கார்கே தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது:
பணவீக்கம், வேலைவாய்ப்பின்னமை, விவசாயிகள் பிரச்னை, பொருளாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினோம். ஆனால் இந்த பிரச்னைகள் குறித்து பதில் அளிக்காமல் தேவையில்லாமல் காங்கிரஸ் கட்சி குறித்து பிரதமர் நரேந்திர மோடி குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்.
தேர்தல் பிரசாரத்தில் உரையாற்றுவது போல் நாடாளுமன்றத்தில் அவர் உரையாற்றுகிறார். சொல்லப் போனால் நாடாளுமன்றத்தின் ஒட்டு மொத்த நேரத்தையும் வீணடித்து விட்டார். கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் தான் போனப் போக்கில் பேசி வருகிறார். கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் விவகாரத்திற்கு முழு முதற்காரணம்
பாஜக
தான். தேர்தல் நடைபெறும் சமயத்தில் இது போன்ற அரசியலில் ஈடுபடுவது பாஜகவுக்கு கைவந்த கலை.
இவ்வாறு அவர் கூறினார்.