`உலகம் சுற்றும் ஃபினிஷர்' 8.25 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் வாங்கிய டிம் டேவிட் யார்?

ஐ.பி.எல் மெகா ஏலம் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் டிம் டேவிட் எனும் வீரர் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் பெரிய தொகைக்கு ஏலம் போயிருக்கிறார்.

அடிப்படை விலையாக 40 லட்சத்தை கொண்டிருந்த டிம் டேவிட் கிட்டத்தட்ட 20 மடங்கு அதிகமாக 8.25 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணியால் வாங்கப்பட்டிருக்கிறார். பெரும்பாலான அணிகள் இவருக்காக போட்டி போட்டிருந்தன. யார் இந்த டிம் டேவிட்?

Tim David

25 வயதான டிம் டேவிட் சிங்கப்பூரைப் பூர்வீகமாகக் கொண்டவர். இவரது தந்தையின் பணி நிமித்தமாக குடும்பமே ஆஸ்திரேலியாவிற்கு குடிபெயர்ந்து விட டிம் டேவிட்டும் ஆஸ்திரேலியாவிலேயே வளர்ந்தார். அங்கேயே கிரிக்கெட் ஆடினார். Rookie Contract எனும் சிறுபான்மை மக்களுக்கான இட ஒதுக்கீடு மூலம் ஆஸ்திரேலியாவின் உள்ளூர் அணிகளுக்காக ஆடி வந்தார். ஒரு கட்டத்தில் பிக்பேஸ் லீகில், பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிக்காக ஆடும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. 2020-21 சீசன் பெர்த் அணிக்காக ஆடிய டிம் டேவிட் பெரிய பெரிய சிக்சர்களை அடித்து கவனத்தை ஈர்த்திருந்தார். மிடில் ஆர்டரில் கடைசிகட்ட ஓவர்களில் ஆடுவதே எனக்கு விருப்பம் என கூறும் டிம் டேவிட் அதற்கு தேவையான ஹார்ட் ஹிட்டிங் திறனுடன் ஆச்சர்யப்படுத்தினார். பிக்பேஸ் லீகில் இவரின் பெரிய சிக்சர்களை கண்டு பாகிஸ்தான் சூப்பர் லீகிலிருந்து லாகூர் க்ளாந்தர்ஸ் அணி இவரை ரீப்ளேஸ்மென்ட் வீரராக ஒப்பந்தம் செய்தது. ‘ஹார்ட் ஹிட்டிங் திறனோடு மிடில் ஓவர்களில் ஸ்பின்னர்களையும் எதிர்கொள்ளும் வீரர் எங்களுக்கு தேவைப்பட்டார். அதற்காகவே டிம் டேவிட்டை ஒப்பந்தம் செய்தோம்’ என லாகூர் அணி காரணம் கூறியது.

லாகூர் அணிக்கு என்ன தேவைப்பட்டதோ அதை டிம் டேவிட் செய்து கொடுத்தார். 160+ ஸ்ட்ரைக் ரேட்டில் 6 இன்னிங்ஸ்களில் 180 ரன்களை எடுத்துக்கொடுத்தார்.

பாகிஸ்தான் சூப்பர் லீகைத் தொடர்ந்து கரீபியன் ப்ரீமியர் லீகிலிருந்தும் டிம் டேவிட்டிற்கு அழைப்பு வந்தது. செயிண்ட் லூசியா கிங்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார். கடந்த சீசனில் 12 போட்டிகளில் 282 ரன்களை எடுத்திருந்தார். ஸ்ட்ரைக் ரேட் 146 ஆக இருந்தது.

இந்த சமயத்தில் 2021 இரண்டாம் பாதி ஐ.பி.எல் இல் பெங்களூரு அணி ஆஸ்திரேலிய வீரரான டேனியல் சாம்ஸுக்கு பதில் டிம் டேவிட்டை ஒப்பந்தம் செய்தது.

Tim David

ஐ.பி.எல் இல் ஆடிய முதல் சிங்கப்பூர் வீரர் எனும் பெருமையை டிம் டேவிட் பெற்றார். ஆனால், டிம் டேவிட்டை பெங்களூரு அணியால் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை.

கடைசியாக சமீபத்தில் நடந்து முடிந்திருக்கும் பிக்பேஸ் சீசனில் ஹோபர்ட் அணிக்காக 15 போட்டிகளில் 218 ரன்களை அடித்திருந்தார். ஸ்ட்ரைக் ரேட் 163 ஆக இருந்தது. கொஞ்சம் சறுக்கலான பெர்ஃபார்மென்ஸ் போல தோன்றும் ஆனால், சறுக்கியவர் சீக்கிரமே எழுந்து இப்போது பாகிஸ்தான் சூப்பர் லீகில் பட்டையை கிளப்பி வருகிறார். தற்போது நடைபெற்று வரும் இந்த சீசனில் முல்தான் சுல்தான்ஸ் அணிக்காக 4,5,6 என தேவையை பொறுத்து எந்த ஆர்டரிலும் இறங்கி வெளுத்து வாங்குகிறார்.

Tim David

சமீபத்தில் இஸ்லாமாபாத்திற்கு எதிராக 29 பந்துகளில் 71 ரன்களை அடித்திருந்தார். பெஷாவருக்கு எதிராக 19 பந்துகளில் 51 ரன்களை எடுத்திருந்தார். அரைசதம் என்பதை தாண்டி எல்லா போட்டிகளிலுமே டெத் ஓவர்களில் 160+ ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசி எடுக்கிறார்.

டெத் ஓவரில் அதிரடியாக க்ளீன் ஹிட்டிங் ஷாட்களை ஆடும் பேட்ஸ்மேனாக இருந்ததால் ஆஸ்திரேலிய அணியே இவரை கடந்த டி20 உலகக்கோப்பை அணியில் தேர்வு செய்யலாமா என யோசித்தது. ஆனால், சில விதிமுறைகள் ஒத்துவராததால் பின் வாங்கியது.

ஏலத்திற்கு சில நாட்கள் முன்பு வரை அதிரடியாக ஆடி ஃபார்மை நிரூபித்திருப்பதால் நல்ல விலைக்கு போவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்த்ததைப் போன்றே இவருக்கு நல்ல டிமாண்ட் இருந்தது. டெல்லி, கொல்கத்தா, பஞ்சாப், லக்னோ, ராஜஸ்தான், மும்பை என பெரும்பாலான அணிகள் இவருக்காக போட்டி போட்டன. கொல்கத்தா மட்டும் தொடக்கத்திலிருந்தே தொடர்ந்து முயன்றது.

மற்ற அணிகள் ஒவ்வொன்றாக பின் வாங்கவே லேட்டாக வந்த மும்பை கடைசியில் 8.25 கோடிக்கு டிம் டேவிட்டை வாங்கியது. கொல்கத்தா போராடி தோற்றது.

Tim David

உலகமெங்கும் ப்ரீமியர் லீக் போட்டிகளில் சுற்றி சுழன்று பெயரை அழுத்தமாக பதித்துவிட்ட டிம் டேவிட் ஐ.பி.எல் ஐ மட்டுமே பாக்கி வைத்திருக்கிறார். அதிலும், இந்த முறை மும்பை அணிக்காக சம்பவங்களை நிகழ்த்துவார் என எதிர்பார்க்கலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.