"நாயகனுக்கோ, நாயகிக்கோ அப்பா ரோலில் நடித்துவிடலாம் என்பதே என் திட்டமாக இருந்தது!"- விஜய் சேதுபதி

ஆனந்த விகடன் யூடியூப் சேனலுக்காக பேச்சாளர், கல்வியாளர், எழுத்தாளர் என பன்முகம் கொண்ட பேராசிரியை, பல்துறை ஆளுமைகளைச் சந்தித்து உரையாடி வருகிறார். ‘கதைப்போமா with பர்வீன் சுல்தானா’ என்ற பெயரிலான அந்த நிகழ்வில் தமிழ்த் திரையுலகின் முக்கிய நடிகர்களுள் ஒருவரான விஜய் சேதுபதியை சந்தித்து அண்மையில் உரையாடினார்.

நீண்ட அந்த உரையாடலில் இருந்து சில துளிகள்.

உங்கள் சினிமா வாழ்க்கையின் தொடக்கக் காலத்தில் பல்வேறு விதமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளீர்கள். என்றேனும் ஒருநாள் கதாநாயகன் ஆவேன் என்று நினைத்திருக்கிறீர்களா?

“உண்மையாக நான் அப்படி நினைத்ததே இல்லை. என் தாடி 26 வயதிலேயே நரைக்கத் தொடங்கிவிட்டது. மேலும் என் உடலும் மிக சீக்கிரமாக எடை போட்டுவிடும். எனக்கு 30 வயது இருக்கும் போது என் தங்கை இப்படி கேட்டார். ‘என்ன தாடி எல்லாம் நரைத்துவிட்டது. சினிமாவில் எப்படி வாய்ப்பு தேடுவாய்?’ என்று. ‘இன்று வரைக்கும் நான் சினிமாவில் நடிப்பேனா என்று தெரியாமல் இருந்தது. ஆனால் இப்போதுதான் இந்த தொழில் எனக்கு புரிய தொடங்கிருக்கிறது’ என்று நான் அவரிடம் கூறினேன். இன்னும் கொஞ்சம் குண்டாகி விட்டால் நாயகனுக்கோ அல்லது நாயகிக்கோ அப்பா கதாபாத்திரமாக நடித்துக்கொள்ளலாம் என்பதே என் திட்டமாக இருந்தது.

விஜய் சேதுபதி

சினிமாவில் இருக்கவேண்டும் என்பதே என் எண்ணமாக இருந்தது. ஜெயிக்க வேண்டும், சாதிக்க வேண்டும் என்ற சொல்லாடல் மீது எனக்கு நம்பிக்கை இருந்ததில்லை. அது என்னவென்றும் எனக்கு தெரியாது. ஏனென்றால் காலையில் சாப்பிட்ட பிறகு மதியம் மீண்டும் பசிக்கிறது அல்லவா! அதே போலத்தான் வெற்றியும். அதற்கு முடிவே கிடையாது. ஒரு வட்டத்திற்குள்தானே நாம் அனைவரும் சுற்றிக்கொண்டிருக்கிறோம்.”

உங்கள் பார்வையில் கதாநாயகன் என்பவர் யார்? உங்களின் கதாநாயகன் யார்?

“ஒரு கதையை அதன் கருத்தை உங்களுக்கு நம்புகிற வகையில் சுமந்து செல்பவனே கதாநாயகன். ஏனென்றால் எதை ஒன்றையும் அப்படியே சொல்லிவிட முடியாது. டைட்டானிக் படத்தை கப்பலின் கதையாக மட்டும் சொன்னால் அது டாக்குமென்டரியாகி விடும். அதற்குள் இரு காதலர்கள் தேவைப்படுகிறார்கள் அல்லவா? என்னுடைய கதாநாயகன் என்று சொன்னால் என் அப்பாதான். சில நேரங்களில் நண்பர்கள், சில நேரங்களில் எதிரிகள்.

விஜய் சேதுபதி

உங்களோடு நெருக்கமாக இருப்பவர்களைவிட எதிரிகளே அதிகமாக நன்மை செய்வார்கள். ஏனென்றால் உங்களின் மூளையை அதிகமாக வேலை செய்யவைப்பது அவர்கள்தான். ஓட்டப்பந்தயத்தில் உங்களுக்கு ஓடும் எதிர் போட்டியாளரே உங்களை இன்னும் வேகமாக ஓடிட உந்துதல் செய்கிறார். அதனால் எதிரியும் நம் கதாநாயகன்தான்.”

உங்களை மிகவும் வசீகரித்த ஒரு ஆளுமை யார்?

“ஒருத்தரை மட்டும் அப்படிக் குறிப்பிட்டு கூறவே முடியாது. கற்றல் என்பதையே நான் சுவாசிப்பது போன்றதாகத்தான் பார்க்கிறேன். அது ஒரு சாதாரணமான செயல். உங்களிடம் பேசுவதன் மூலம் நான் நிச்சயம் ஏதோ ஒன்றை கற்றுக்கொள்வேன். ஆனால் அதை கற்றல் என்று குறிப்பிட்டு சொல்வதால் நான் உங்களிடம் இருந்து எதையோ எடுத்துக்கொள்வது போல இருக்கிறது. ஆனால் அப்படி இல்லாமல் பகிர்ந்துகொள்ளலாம் என்று சொல்கிறேன். சுவாசிப்பது என்பது எப்படி நான் மூச்சு காற்றை தனியாக எடுத்துக்கவில்லையோ அதே போலதான் கற்றலும். அது அவ்வளவு ரம்மியமானது. நான் என்றேனும் ஒரு நாள் புகைபிடிக்காமல் இருக்கும் போதுதான் காற்றின் சுவை தெரியும். அதேபோலதான் ஒரு சொற்பொழிவு, ஒரு எண்ணம், ஒரு பொருள், ஒரு மரம், நீங்கள், என் அப்பா அல்லது திடீரென்று பேசிவிட்டு செல்லும் அந்நியர். எனவே எதைச் சொல்வது யாரை சொல்வதென்று என்று எனக்குத் தெரியவில்லை. நான் எல்லாவற்றில் இருந்தும் எடுத்துக்கொள்கிறேன்.”

மேலும் பல மொழி திரைப்படங்களில் நடித்த அனுபவம், ஆமீர் கானோடு நடிக்க முடியாமல் போனதற்கான காரணம் எனப் பலவற்றையும் பகிர்ந்துள்ளார் விஜய் சேதுபதி. அதை கீழுள்ள வீடியோவில் காணுங்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.