“பிறரை குறைசொல்லி வாக்கு சேகரித்தால் வரும் பாதகத்தை உணர்ந்தவன் நான்”- ராஜேந்திர பாலாஜி

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பரப்புரையின்போது, யாரையும் குறை சொல்லி வாக்கு கேட்க வேண்டாம் எனவும், அதன் பின்னணியை அனுபவப்பூர்வமாக உணர்ந்தவன் தான் எனவும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியுள்ளார்.
தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மாநிலம் முழுவதும் அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரையல் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சிவகாசி மாநகராட்சியில் போட்டியிடக்கூடிய 48 அதிமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டார்.
image
கூட்டத்துக்குப் பின்னர் பேசிய அவர், “தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில், முக்கியமான களப்பணிகளை இன்றிலிருந்து நாம் அனைவரும் செய்ய வேண்டியுள்ளது. அதிமுக எனும் கட்சி, தொழிலதிபர்களையும் ஆசிரியர்களையும் கொண்டு ஆரம்பிக்கப்படவில்லை; மாறாக தொழிலாளர்கள் மற்றும் பாட்டாளிகள் போன்ற உழைப்பாளிகளைக் கொண்டு அவர்களை நம்பி மட்டுமே எம்.ஜி.ஆர். அவர்களால் தொடங்கப்பட்டது. அதனால் தான் இன்றளவும் சோதனைகள் வரும் போதெல்லாம் சாதனைகள் கிடைக்கக்கூடிய தொண்டர்களைக் கொண்ட இயக்கமாக அதிமுக உள்ளது.
`ஆட்சியில் இல்லை – அதிகாரத்தில் இல்லை’ போன்ற எண்ணம் இல்லாமல், சீட்டுக்காக போட்டி போடக்கூடிய இயக்கம் அதிமுக. விருதுநகர் மாவட்டத்தில் அதிமுக தெம்புடனும் திராணியுடனும் இருக்கிறது. அதிமுக முழுக்கவே, ஒரு அற்புதமான இயக்கத்தை ஓபிஎஸ் – இபிஎஸ் கட்டமைத்துக் வருகிறார்கள். அவர்கள் சொல்லும் வழியில் நான் பயணித்து வருகிறேன். மக்களிடம் நான் கேட்க நினைப்பது, அனைத்து வேட்பாளர்களையும் புரட்சித்தலைவர் புரட்சித்தலைவியாக எண்ணுங்கள்.
image
எனக்கு தெரிந்தவரை மக்கள் அனைவருக்கும் அதிமுகவுக்கு வாக்களிக்கும் எண்ணம் வந்திருக்கிறது. தமிழகம் முழுவதும் அதிமுக அலை வீசுகிறது. அதிமுக வெல்வது நிச்சயம். மாநகராட்சியை வெல்வது நிச்சயம். `ஆளுங்கட்சி வெற்றி பெற்றால் மட்டும் தான் மாநகராட்சிகளுக்கு பணம் மட்டும் பதவிகள் கிடைக்கும்’ என்ற எண்ணம் தவறானது. மத்திய அரசின் மூலம் கிடைக்கும் தொகையே பல கோடி வரும்.
மாவட்டமாக இருந்துவந்த சிவகாசி, மாநகராட்சியாக வரவேண்டும் என்பதற்காகவே பல்வேறு வழிகளில் பணிகள் செய்ததும் அதிமுகதான். அதுமட்டுமா? சிவகாசியில் மாநகர பணிகள் சாலைப் பணிகள் / புதிய பேருந்து நிலையம், கல்வி மாவட்டமாக அறிவித்து என அனைத்தையும் செய்தது இந்த கே.டி.ராஜேந்திர பாலாஜி மட்டுமே.
image
சிவகாசியை பொறுத்தவரை திட்டமிடப்பட்டிருந்த ஒரு சில சாலைப் பணிகள், கொரோனாவுக்குப் பின்னர் தேர்தல் வந்த காரணத்தினால் இன்னமும் தொடங்கப்படாமல் உள்ளது. தேர்தலுக்கு பின்னர் ஒருசிலர் அப்பணிகளை தங்கள் கையில் எடுத்துக் கொண்டதால் நமக்கு அதில் சரிவு ஏற்பட்டது. இங்கு மாநகராட்சி கட்டிடம், மண்டலங்கள் கட்டிடம் என அனைத்தும் அதிமுக கட்டிக் கொடுத்ததுதான்.
இப்படி நாம் செய்தது ஏராளம் இருக்கிறது. அனைத்து வேட்பாளர்களும் இதையெல்லாம் கூறி, மக்களிடம் பக்குவமாக ஓட்டு கேளுங்கள் என்று சொல்ல விரும்புகிறேன். நம் சாதனைகளை அல்லாமல், மற்றவர்களை குறை சொல்லி ஓட்டு கேட்பதால் நமக்குதான் பாதகம் ஏற்படும். என்ன பாதகம் ஏற்படும் என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்தவன் நான். ஆகவேதான் சொல்கிறேன்… யாரைப் பற்றியும் குறை சொல்லாமல் அதிமுக சாதனைகளை மட்டுமே வாக்கை கேளுங்கள்” என்றார்.
சமீபத்திய செய்தி: காதலர் தினத்தில் உயிர்நீத்த மூத்த காதல் தம்பதியர் – திருவாரூரில் சோகம்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.