மருத்துவர், வக்கீல், தொழிலதிபர் எனக்கூறி 7 மாநிலத்தை சேர்ந்த 14 பெண்களை திருமணம் செய்த கல்யாண மன்னன் கைது

* நடுத்தர வயது, விவாகரத்து பெற்றவர்களை குறிவைத்து மடக்கியது எப்படி?புவனேஸ்வர்: மருத்துவர், வக்கீல், தொழிலதிபர் எனக்கூறி 7 மாநிலத்தை சேர்ந்த 14 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்ட கல்யாண மன்னனை புவனேஸ்வர் போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரித்து வருகின்றனர். ஒடிசா மாநிலம் தலைநகர் புவனேஸ்வர் காவல்துறை துணை ஆணையர் உமாசங்கர் தாஷ் கூறுகையில், ‘டெல்லி, பஞ்சாப், அசாம், ஜார்கண்ட், ஒடிசா உள்ளிட்ட ஏழு மாநிலங்களைச் சேர்ந்த 14 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்ட 54 வயதுடைய ஒருவரை கைது செய்துள்ளோம். ஒடிசா மாநிலம் கேந்திரபாரா மாவட்டம் பட்குரா பகுதியில் ஒரு பெண்ணுடன் வசித்து வந்த போது கைது செய்யப்பட்டார். சில பெண்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவரை பிடித்து விசாரித்த போது, பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன கடந்த 2002ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டுக்குள் 14 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த இவர், ‘மேட்ரிமோனியல்’ வலைத்தளங்கள் மூலம் பெண்களுடன் நட்பு கொள்வார். பின்னர் அவர்களை முந்தைய மனைவிகளுக்கு தெரியாமல் ரகசிய திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்துள்ளார். டெல்லியில் பள்ளி ஆசிரியையாக இருந்த தனது கடைசி மனைவியுடன் ஒடிசாவில் சில மாதங்கள் தங்கி இருந்தார். இவரின் மோசடி திருமணங்களை கண்டறிந்த டெல்லி ஆசிரியை, போலீசில் புகார் அளித்தார். அதன்படி வாடகை வீட்டில் இருந்த அவர் கைது செய்யப்பட்டார். நடுத்தர வயதுடைய மற்றும் தனிமையில் வசித்து வரும் பெண்களை குறிவைத்து திருமணம் செய்துள்ளார். இவரது வலையில் சிக்கியவர்கள் பெரும்பாலும் 30 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்களாகவே உள்ளனர். மேலும் ‘மேட்ரிமோனியல்’ வலைத்தளங்களில் விவாகரத்து பெற்று வரன்களை தேடும் பெண்களையும் குறிவைத்து மடக்கியுள்ளார். இவர் தன்னை மருத்துவர், வக்கீல், தொழிலதிபர் என்று கூறி உயர்கல்வி படித்த பெண்களையே ஏமாற்றி திருமணம் செய்து கொண்டுள்ளார். இவரால் பாதிக்கப்பட்டவர்களில் துணை ராணுவப் படையில் பணிபுரியும் ஒரு பெண்ணும் அடங்கும். பாதிக்கப்பட்ட பெண்களுடன் சில மாதங்கள் குடும்பம் நடத்திவிட்டு, திடீரென மாயமாகிவிடுவார். இதனால் இவரை பற்றிய விபரங்கள் தெரியாமல் அவர்கள் தவித்து வந்துள்ளனர். இவரது முதல் இரண்டு மனைவிகளும் ஒடிசாவைச் சேர்ந்தவர்கள். ஒருவரை 1982ம் ஆண்டும், மற்றொருவரை 2002ம் ஆண்டும் திருமணம் செய்து கொண்டார். இந்த 2 மனைவிகள் மூலம் 5 குழந்தைகளுக்கு தகப்பனாக உள்ளார். தற்போது கைது செய்யப்பட்ட அவரிடம் இருந்து 11 ஏடிஎம் கார்டுகள், 4 ஆதார் அட்டைகள் மற்றும் பிற ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளோம். ஏற்கனவே ஐதராபாத் மற்றும் எர்ணாகுளத்தில் வேலையில்லாத இளைஞர்களை ஏமாற்றியதற்காகவும், கடன் மோசடி செய்ததற்காகவும் இரண்டு முறை கைது செய்யப்பட்டுள்ளார். இவரால் பாதிக்கப்பட்ட மற்றப் பெண்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டு, மேல் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார். இவரால் பாதிக்கப்பட்டவர்களில் துணை ராணுவப் படையில் பணிபுரியும் ஒரு பெண்ணும் அடங்கும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.