திமுக சிறப்பாக ஆட்சி செய்தால் பாஜக எப்படி வரும்? சீமான் சிறப்பு நேர்காணல்

“வீடுதேடி தெருத் தெருவா அழைந்தேன்; ஆனால் வீடு வாடகைக்கு கொடுக்க மறுக்கிறார்கள்” என சிறப்பு நேர்காணலில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேதனையோடு பதிலளித்தார்.
தமிழகத்தில் வருகிற 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சியின் தலைவர்கள் சூடான சுறுசுறுப்பான பரப்புரையில் ஈடுபட்டு வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.
இந்நிலையில் காஞ்சிபுரத்தில் தேர்தல் பரப்புரையில் இருந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுடன் நெறியாளர் கார்த்திகேயன் நடத்திய சிறப்பு நேர்காணலை இங்கு விரிவாக படிக்கலாம்.
image
கேள்வி: பிரசாரத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றீர்கள்; களம் எப்படி இருக்கிறது?
பதில்: பொது தேர்தல்போல களத்துக்கு நேரடியாக போக முடியவில்லை. அதற்கு தேர்தல் விதிமுறையும் இடம் கொடுக்கவில்லை, கொரோனா இருப்பதால் மக்களை ஒன்றுதிரட்டி நமது கருத்துகளை சொல்லி வாக்கு சேகரிக்கப்பதற்கான சூழல் இல்லை.
கேள்வி: நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் சுறுசுறுப்பாக இருக்கிறார்களா?
பதில்: அதெல்லாம் உற்சாகமாக இருக்கிறார்கள். இந்த தேர்தலுக்கு மொத்தமாக 76 லட்சம் தேவைபடுகிறது. அதோடு திடீரென தேர்தலை அறிவித்து விட்டார்கள். செலவுக்கு காசு இல்லை. அப்படி போட்டியிட்ட பிள்ளைகளையும் மிரட்டி கையெழுத்து வாங்கி விட்டார்கள். வேட்பாளர்கள் உறுதியாக இருந்தால் முன்மொழிபவரை தூக்கிவிடுகிறார்கள். இதுக்குள்ளதான் நாம வேலை செய்யவேண்டி இருக்கிறது.
கேள்வி: கடந்த சட்டமன்றத் தேர்தலில் 7 சதவீத வாக்குகள் வாங்கிய நீங்கள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 65 சதவீத இடங்களில் போட்டியிடுவதால் தொண்டர்கள் நம்பிக்கை இழந்துவிட மாட்டார்களா?
பதில்: சட்டமன்ற பாராளுமன்ற பொதுத்தேர்தல் வரும்போது, முதன்மையான நகரம், கிராமம் போன்ற இடங்களிpல்தான் நாம் வேலை செய்கிறோம். ஆனால், இந்த தேர்தலில் சிற்றூர்கள் போன்ற பகுதிகளில் வீடு வீடாகப்போய் நமது கொள்கைகளை கொண்டுபோய் சேர்ப்பதற்கான வாய்ப்புதான் இது, இதற்கு முன்பு இப்படி இல்லை. இதையே நாம் பெரிய வெற்றியாகத்தான் கருதவேண்டும்.
image
கேள்வி: எந்த அடிப்படையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடுகிறது?
பதில்: அனைத்து இடங்களிலும் முதன்மை சாலையே சரியில்லாமல் இருக்கு. பஞ்சர் மட்டுமே ஒட்டப்படுகிறது. ஆங்காங்கே குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. அதனால் மற்ற நாடுகளைபோல சீரான பயணத்தை நாம் தொடர முடியாது. அடிப்படை தேவையான சாலையை கூட நாம் இன்னும் சரியாக போடவில்லை.
அதேபோல் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் உள்சாலைகளும் மிகவும் மோசமாக இருக்கிறது. எரியாத மின் விளக்குகள். குப்பைகள், சுகாதாரமான வாழ்விடமின்மை, குடிநீர் வசதியில்லை. மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் இல்லை. ஆட்சிக்கு வரும் ஒருவரை ஒருவர் குறைசொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்.
கேள்வி: இரண்டு கட்சியையும் விடுத்து மாற்றம் தேடி மக்கள் போகவில்லையே?
பதில்: மக்கள் போகவில்லை என்று சொல்ல முடியாது. ஐயா விஜயகாந்துக்கு முதல் தேர்தலில் 8 விழுக்காடு, இரண்டாவது தேர்தலில் 10 விழுக்காடு. அது மாறுதலுக்கானது தானே. அதுவும் கருணாநிதியும் ஜெயலலிதாவும் இருக்கும்போது. அதன்பிறகு 6 வருடம் கழித்து நான் வந்துவிட்டேன். எனக்கு முதலில் 1.1, பிறகு 4, அப்புறம் 7 அது மாறுதலை நோக்கி வந்துகொண்டுதான் இருக்கிறது.
கேள்வி: பட்டியலின வேட்பாளர்கள் போட்டியிட அச்சப்படுகிறார்களா?
பதில்: என் கட்சியல் நிறைய பிள்ளைகள் இருக்குறாங்க. அவங்களுக்கு முன்னுரிமை கொடுத்து நிறுத்துறோம். தேர்தல் ஆணையம் என்ன சொல்லுது வேட்புமனு தாக்கல் செய்ய 3 பேர் வாங்கன்னு சொல்லுது. நாங்க 3 பேர் போறோம்; வேலூரில் வேட்புமனுத் தாக்கல் செய்யும்போது 30 பேரை அடித்து மண்டையை உடைத்து விடுகிறார்கள். 3 பேரை கடத்தியும் சென்றுவிட்டார்கள்.
கேள்வி: 12 ஆயிரம் இடங்களில் 50 இடங்கள் 100 இடங்கள் கூடவா நாம் தமிழர் கட்சிக்கு வருவதற்கான சாத்தியக் கூறுகள் இல்லாமல் போய்விட்டது?
பதில்: அதை தேர்தல் முடிவுக்குப் பிறகுதான் பார்க்கணும், நம்ம பிள்ளைகள் முதன் முதலாக தேர்தலை சந்திக்கிறாங்க. ஆனால் நீண்டகால அனுபவம் பெற்றவர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள் வேலை செய்றாங்க. அதேபோல மக்களுக்குத் தேவையானதையும் கொடுத்து ஓட்டை பெறுகிறார்கள்.
image
கேள்வி: பெரிதாக விளம்பரம் இல்லாமல், ஒரு அரசியல் கட்சியாக பதிவு செய்யப்படாத விஜய் மக்கள் இயக்கம் நூற்றக்கணக்கான இடங்களை பெறுகிறபோது, 10 ஆண்டுகளாக களத்தில் நிற்கும் நாம் தமிழர் கட்சி தேர்தலில் பினனடைவை சந்திக்கும்போது வருத்தமாக இருக்காதா?
பதில்: விஜய் பற்றி திருப்பி திருப்பி ஸ்டாலினிடமோ, எடப்பாடியிடமோ, கமலுடனோ, விஜயகாந்துடனோ பேசுவதில்லை. என்னிடமே பேசுறீங்க. விஜய் எனக்கு எந்த வழியில போட்டி, எதுக்கு அதை பேசிக்கிட்டு இருக்கீங்க. அவர் கோட்பாடு தனி, அவர் கொள்கை தனி. இதைபற்றி மீடியாக்கள் தான் பேசுகிறது. எங்களை அவரோடு ஒப்பிட்டு ஒவ்வொரு முறையும் கேட்குறீங்க. கட்சி ஆரம்பிப்பதாக சொல்லாத அவர் எங்களை முந்திவிட்டார் என்று சொல்வதெல்லாம்…
கேள்வி: பாஜக எதிர்ப்பு நிலையில் நீங்க பேசுறீங்க ஆனால், பாஜகவின் பி டீம் ஆக சீமான் இருக்கிறார் என்பது தொடர் விமர்சனமாக இருக்கிறது?
பதில்: இந்த விமர்சனத்தை யார் வைக்கிறார்கள் என்று பார்க்க வேண்டும். அண்ணாமலையை, பாஜகவை சொல்லச் சொல்லுங்க, ஆமா சீமான் எங்க ஆளு அவர் எங்களோட பி டீம் என்று. ஆவ்வளவு வெறுப்பில் இருக்கிறார்கள். அந்தக் காலத்தில் இருந்து நான் மட்டும் சண்டை போடுகிறேன். இவர்களுக்கு கிறிஸ்தவ இஸ்லாமிய மக்கள் நடுநிலையாளர்கள் என்பக்கம் திரும்பிவிடக் கூடாது என்ற பயம் இருக்கு. 15 விழுக்காடு வாக்கு அதுல பாதி திரும்பிட்டா கூட அவங்க கதை முடிந்துவிடும். நான் வென்றுவிடுவேன்.
கேள்வி: திமுகவை எதிர்க்கும் அளவிற்கு அதிமுகவை சீமான் எதிர்ப்பதில்லையே?
பதில்: திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் ஆகிய நான்கு கட்சிகளையும் நாங்க ஒன்றாகத்தான் எதிர்க்கிறோம். எங்க குடும்பமே காங்கிரஸ் குடும்பம்தான், ஆனால் நான் வளர வளர திராவிட சிந்தனையில் திமுகவிற்கு வந்தேன். திமுக அதிமுக எனக்கு எல்லாமே ஒன்னுதான், நான் வரும்போது எம்ஜிஆர் மலையாளி, கருணாநிதி என் இனத்தில் தலைவன். அப்படித்தானே நாங்கள் இருந்தோம் வாழ்ந்தோம்.
கேள்வி: திமுகவை எதிர்ப்பதற்கு திமுகவை விமர்சனம் செய்வதற்கு சீமான் காலில் கிடக்கும் செருப்பை தூக்கி காட்றாரு ஆனால், அதிமுக மீது கூர்மையாக கேள்விகள் வைப்பதில்லை?
பதில்: அதிமுக எனக்கு பொருட்டல்ல. திமுக இல்லையென்றால் அதிமுக இல்லை. அதிமுக சரியில்லை. பெத்துப்போட்ட தாய் யாரு. திமுக சரியாக இருந்தால் ஏது எம்ஜிஆர், ஏது ஜெயலலிதா. திமுகவின் தலைமை ஜோதிபாசு போல, பெருந்தலைவர் போல, ஜீவானந்தம் போல இருந்திருந்தால் எப்படி எம்ஜிஆர் வருவாரு. எப்படி ஜெயலலிதா அம்மையார் வந்திருப்பாங்க.
இப்போது கூட பாஜக வந்துவிடுமென்று உங்களுக்கு நடுக்கம் இருக்கிறது. எப்படி வரும், நீங்க சிறப்பா ஆடசி செய்தால் எப்படி பாஜக வரும். பாஜக இந்து என்று பேசுகிறது. அதுதான் நீங்களும் சொல்றீங்க எங்கள் கட்சியில் 90 விழுக்காடு இந்து என்று நீங்களும் பேசுறீங்களே. உண்மையான சங்கி நீங்க ஆனால் என்னை சங்கி சங்கி என்று சொன்னால் எப்படி சகித்துக்கொள்ள முடியும் என்றார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.