அகமதாபாத் குண்டுவெடிப்பு வழக்கு – 38 பேருக்கு தூக்கு தண்டனை!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் தொடர் குண்டு வெடிப்பு வழக்கில், 38 பேருக்கு தூக்குத் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 26 ஆம் தேதி, அடுத்தடுத்து 21 இடங்களில் குண்டு வெடித்தது. 70 நிமிடங்களுக்குள் நடந்த இந்த சம்பவத்தில் 56 போ் உயிரிழந்தனா்; மேலும் 200-க்கும் மேற்பட்டோா் காயம் அடைந்தனா்.

சம்பவம் நடந்த சில நாட்களுக்குப் பிறகு சூரத் நகரில் பல்வேறு இடங்களில் வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இதையடுத்து, அகமதாபாத்தில் 20 வழக்குகளையும், சூரத்தில் 15 வழக்குகளையும் காவல் துறை பதிவு செய்தது. அனைத்து வழக்குகளையும் ஒன்றாகச் சோ்த்து அகமதாபாத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றம் விசாரித்தது.

குஜராத் மாநிலத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டில் கோத்ரா ரயில் எரிப்பைத் தொடா்ந்து நிகழ்ந்த வன்முறைக்குப் பழிதீா்க்கும் விதமாக, தடை செய்யப்பட்ட இந்தியன் முஜாஹிதீன், சிமி இயக்கத்தினா் தொடா் குண்டு வெடிப்பை நிகழ்த்தி இருக்கலாம் என்று காவல் துறையினா் சந்தேகித்தனா்.

அகமதாபாத் சிறப்பு நீதிமன்றத்தில், கடந்த 2009 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் தொடங்கிய விசாரணை, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நிறைவடைந்தது. வழக்கில், இந்தியன் முஜாஹிதீன் அமைப்புடன் தொடா்புடைய 78 போ் மீது குற்றம்சாட்டப்பட்டது. ஒருவா் அரசுத் தரப்பு சாட்சியமாக மாறியதால் 77 போ் மீது விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை முடிவில், சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஏ.ஆா்.படேல், கடந்த 8 ஆம் தேதி இந்த வழக்கில் 49 பேர் குற்றவாளிகள் என தீா்ப்பளித்தாா். மேலும் இந்த வழக்கில் இருந்து 28 போ் விடுவிக்கப்பட்டனா்.

இந்நிலையில் இன்று, குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதில், 49 குற்றவாளிகளில் 38 பேருக்கு தூக்குத் தண்டனையும், மீதமுள்ள 11 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து ஆமதாபாத் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.