‘ஹோட்டலில் அறை; வாடகைக்கு கார், வீடு’ – பணிசெய்த இடங்களில் தொடர்திருட்டு -கோவை இளைஞர் கைது

கோவையில் தனியார் மருத்துவமனையிலிருந்து ரூ.85 லட்சம் திருடிய இளைஞர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் கோசவம்பட்டி பகுதியை சேர்ந்தவர் யுவராஜ் (29). இவர் கடந்த 6 மாதங்களாக கோவை சிட்ரா பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவில் காசாளராக பணியாற்றி வந்துள்ளார். இதனிடையே, கடந்த 13-ம் தேதி மருத்துவமனையின் 3 நாட்கள் வருமானமான ரூபாய் 85 லட்சத்தை லாக்கரிலிருந்து திருடி விட்டு, யுவராஜ் தலைமறைவானார். இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக மருத்துவமனையின் துணைத் தலைவர் நாராயணன் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில், பீளமேடு காவல்துறையினர் தலைமறைவான யுவராஜை தேடி வந்தனர்.
இந்நிலையில், சென்னையில் பதுங்கியிருந்த யுவராஜை, சென்னை போலீஸாரின் உதவியுடன் கோவை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.72 லட்சத்து 40 ஆயிரத்தை காவல்துறையினர் கைப்பற்றினர். இதனைத் தொடர்ந்து, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
image
தற்போது, கைது செய்யப்பட்ட யுவராஜுக்கு பெற்றோர் இருவரும் இறந்ததால் குடும்பம் என்பது இல்லாத நிலை இருந்துள்ளது. மேலும், தனியார் மருத்துவமனையில் திருடிய ரூபாய் 85 லட்சம் மூலம் சென்னையில் நட்சத்திர ஹோட்டலில் அறை எடுத்து தங்கி வந்ததும், வாடகைக்கு கார், வீடு, வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்கியதன் மூலம் சுமார் 10 லட்சம் ரூபாய் வரை செலவு செய்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
திருடிய பணத்தில் ஆடம்பர வாழ்வை முன்னெடுக்கவே முயன்று உள்ளார். முன்னதாக, கோவையில் பணியாற்றிய நகைக்கடை ஒன்றிலும் ரூபாய் 7 லட்சத்து 50 ஆயிரம் திருடி உள்ளார். மேலும், கோவை, திருச்சி மாநகர பகுதிகளில் உள்ள துணிக்கடையிலும் பணியாற்றிய போது ரூபாய் 10 லட்சத்திற்கும் அதிகமாக பணம் திருடி உள்ளார். அதுதொடர்பாகவும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தவிர, யுவராஜ் போலி ஆவணங்கள் மூலமாகவே இந்நிறுவனங்களில் பணியில் சேர்ந்துள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.