வேளாண் பணிகளுக்கான ட்ரோன் சேவை: தமிழகம் உட்பட 100 இடங்களில் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

தமிழகம் உட்பட நாடு முழுவதும் 100 இடங்களில் வேளாண் பணிகளுக்கான ட்ரோன் சேவையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கிவைத்தார்.

வேளாண் பணிகளில் நவீன ஆளில்லா விமானங்களை (ட்ரோன்) பயன்படுத்த ஊக்கம் அளிக்கப்படும் என்று அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக சென்னையைச் சேர்ந்த கருடா ஏர்ஸ்பேஸ் என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம், வேளாண் பணிக்காக 100 அதிநவீன ட்ரோன்களை உருவாக்கியுள்ளது. இவை தமிழகம் உட்படநாடு முழுவதும் 100 இடங்களில் வேளாண் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளன. இந்த ட்ரோன்களை பிரதமர் மோடி நேற்று காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:

கொள்கைகள் சரியாக இருந்தால் ஒரு தேசம் உச்சத்தை தொட முடியும். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ட்ரோன்கள் என்பது ராணுவம் தொடர்பான தொழில்நுட்பம் என்று கருதப்பட்டது. இன்று மானேசர் மற்றும் சென்னையில் வேளாண் பணிக்கான ட்ரோன்களை உற்பத்தி செய்யும் ஆலைகளை தொடங்கியுள்ளோம்.

இது 21-ம் நூற்றாண்டின் நவீன விவசாய முறையின் புதிய அத்தியாயம் ஆகும். அடுத்த 2 ஆண்டுகளில் ஒருலட்சம் ட்ரோன்களை உருவாக்க கருடா ஏரோஸ்பேஸ் இலக்கு நிர்ணயித்துள்ளது. இதன்மூலம் வேலைவாய்ப்பு பெருகும்.

இப்போது 75-வது ஆண்டுசுதந்திர தினத்தை கொண்டாடி வருகிறோம். இந்த காலகட்டம்இளைஞர்களுக்கு சொந்தமானது. கடந்த சில ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் இளைஞர்களின் திறமைக்கு ஊக்கத்தை அளித்துள்ளன.

ட்ரோன்கள் மூலம் நிலம், சொத்து அளவீடு செய்யப்படுகிறது. மருந்துகள் விநியோகம் செய்யப்படுகிறது. கரோனா தடுப்பூசிகள் தொலைதூர பகுதிகளை சென்றடைகின்றன. பல்வேறு பகுதிகளில்வயல்களில் பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளிப்பதற்கு ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்தவரிசையில் தற்போது தயாரிக்கப்பட்டுள்ள வேளாண் ட்ரோன்கள் புதிய புரட்சியின் தொடக்கமாக அமையும்.

வரும் காலங்களில் அதிக திறன் கொண்ட ட்ரோன்களின் உதவியுடன், விவசாயிகள் தங்கள் வயல்களில் இருந்து காய்கறிகள், பழங்கள், பூக்களை சந்தைகளுக்கு அனுப்பலாம். குளங்கள், ஆறுகள்மற்றும் கடலில் இருந்து நேரடியாகசந்தைக்கு மீன்களை அனுப்ப முடியும். ட்ரோன்கள் மூலம் விவசாயிகள் தங்களது விளைபொருட்கள் விரைவாக சந்தைக்கு கொண்டு செல்ல முடியும்.

நாட்டில் தற்போது 200-க்கும் மேற்பட்ட ட்ரோன் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. விரைவில் இந்த எண்ணிக்கை ஆயிரத்தை எட்டும். இதன் மூலம் லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகள் உருவாகும்.

இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார். – பிடிஐ

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.