உக்ரைன் மருத்துவக் கல்லூரிகளுக்கு இந்திய மாணவர்கள் சென்றது ஏன்?

உக்ரைன் – ரஷ்யப் போரில் மேற்குலக நாடுகள் உக்ரைனை ஆதரிக்கும் போது இந்திய அரசு ரஷ்யாவை மறைமுகமாக ஆதரிக்கிறது. அல்லது நடுநிலை வகிக்கிறது. கடந்த 26ஆம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த நிலையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதில் ரஷ்யப் படைகள் உடனே உக்ரைனிலிருந்து திரும்ப வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது.

தற்போது ஐ.நா. பொதுச்சபை அவரசக் கூட்டத்தைக் கூட்டும் நிமித்தமாக பாதுகாப்பு கவுன்சில் சார்பில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. கவுன்சிலில் 11 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. ரஷ்யா எதிர்த்து வாக்களித்தது. இந்திய, சீனா, ஐக்கிய அரபு அமீரகம் மூன்றும் வாக்களிக்காமல் புறக்கணித்தன.

இக்கூட்டத்தில் பேசிய இந்தியப் பிரதிநிதி இருநாடுகளும் பேசி பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ள வேண்டும், உக்ரைனில்
இந்திய மாணவர்கள்
பலர் சிக்கிக்கொண்டுள்ளனர், அவர்களை மீட்பதே தலையாய பிரச்சினை. இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டு வாக்களிப்பதிலிருந்து விலகியிருக்கிறோம் என்றார்.

என்ன காரணம்?

உண்மையில் இந்தியா தனது இராணுவத் தளவாட ஆயுதங்களின் இறக்குமதிக்கு ரஷ்யாவைச் சார்ந்து இருக்கிறது. இந்நிலையில் ரஷ்யாவைப் பகைத்துக்கொள்ள இந்தியா விரும்பவில்லை. இன்னொரு புறம் அமெரிக்காவுடன் இந்தியா நெருங்கிய கூட்டாளியாக இருந்தாலும் அமெரிக்காவிற்கு ஆதரவாகச் செயல்பட முடியவில்லை. இது மேற்குலக நாடுகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருக்கும். அதன் விளைவு என்ன என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

உக்ரைனின் கிழக்கு பகுதியில் இருக்கும் கார்கிவ் முதல் மேற்கு பகுதியில் இருக்கும் லிவிவ்வரை நாடெங்கும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் இந்திய மாணவர்கள் படிக்கின்றனர். உக்ரைன் மட்டுமல்ல ரொமேனியா, பல்கேரியா போன்ற நாடுகளிலும் இந்திய மாணவர்கள் மருத்துவக் கல்வி பயில்கின்றனர். இதற்கு மூன்று காரணங்கள் உள்ளன. அங்கே கல்லூரிகளில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு எளிது, கல்லூரி இடங்களுக்கு போட்டியில்லை, இந்திய தனியார் மருத்துவக் கல்லூரி கட்டணங்களைவிட அங்கே கட்டணம் குறைவு.

அதே நேரம் அந்த நாடுகளில் படிக்கும் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் பட்டம் பெற்றாலும் இங்கே மருத்துவராக பணிபுரிவதற்கும், மேல்படிப்பு படிப்பதற்கும் இங்கே ஒரு தனியான தேர்வில் பங்கேற்று வெற்றிபெற வேண்டும். அது வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரிகளுக்கான தேர்வு என்று அழைக்கப்படுகிறது. அதில் தேர்வு பெறுவோரின் விகிதம் மிகவும் குறைவு.

உக்ரைன் தனது மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் அயல்நாட்டு மாணவர்களுக்கென ஆங்கில வழிக் கல்வியை வைத்திருந்தாலும் கல்லூரிகளில் சேர்வதற்கு என்று தேர்வு எதுவும் இல்லை. ஆனால் இந்தியாவில் 2018ஆம் ஆண்டு முதல் வெளிநாடு சென்று படிக்கும் மாணவர்கள் நீட் தேர்வு எழுத வேண்டும் என கட்டாயம் உள்ளது. நீட் தேர்வில் குறைந்தபட்ச தேர்வு மதிப்பெண் பெற்றவர்கள் கிழக்கு ஐரோப்பிய நாடுகள், சைனா, ரஷ்யாவிற்கு செல்கின்றனர்.

உக்ரைனில் ஆறு வருடம் தங்கி மருத்துவக் கல்வி படித்து முடிப்பதற்கு 15 முதல் 20 இலட்ச ரூபாய் மட்டும்தான் செலவாகிறது. இதே கட்டணம் இந்தியாவின் மருத்துவக் கல்லூரிகளில் 50 இலட்சம் முதல் 1.5 கோடி ரூபாய் வரை ஆகிறது. அதுவும் 4.5 வருடங்களுக்கு மட்டும்.

உக்ரைனில் இந்திய மாணவர்கள்

உக்ரைனில் இந்திய மாணவர்கள் படிப்பதற்கு மற்றுமொரு காரணம் உக்ரைன் பல்கலைக் கழகங்களிலிருந்து படிக்கும்போதே ஐரோப்பிய நாடுகளின் மற்ற பல்கலைகளுக்கு மாறிக்கொள்ளலாம். அந்த வசதி உள்ளது. வெளிநாடுகளில் படித்த மாணவர்கள் இங்கே வந்து மருத்துவராக பணி செய்வதற்கான இந்தியத் தேர்வில் வெற்றி பெறவேண்டும். 2020-ஆம் ஆண்டில் அப்படி எழுதிய மாணவர்களில் சுமார் 17 சதவீதம் பேர்தான் வெற்றி பெற்றனர். உக்ரைனில் இருந்து வந்து எழுதி வெற்றி பெற்ற மாணவர்களின் சதவீதம் 16.6 மட்டும்தான்.

இன்னும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் இந்தத் தேர்வில் வெற்றி பெறக் காத்திருக்கின்றனர். அதுவரை அவர்கள் இங்கே பணியாற்ற முடியாது. தேர்வில் வெற்றி பெறுவதற்காக தனியார் கோச்சிங் நிறுவனங்களுக்கு அவர்கள் செல்கின்றனர். அதற்கான செலவு தனி.

இந்தியாவில் 90,000 மருத்துவக் கல்வி இடங்கள் இருந்தாலும் 2021இன் நீட் தேர்வில் 16 இலட்சம் பேர் விண்ணப்பத்திருக்கின்றனர். 4.4 கோடி மக்கள் தொகை இருக்கும் உக்ரைனில் 25 மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்றன. அதாவது உக்ரைனில் 1.7 இலட்சம் மக்களுக்கு ஒரு மருத்துவக் கல்லூரி இருக்கிறது. இந்தியாவில் 25 இலட்சம் மக்களுக்கு ஒரு மருத்துவக் கல்லூரி இருக்கிறது.

நீட்தேர்வு வந்த பிறகு தமிழகம் போன்ற மாநிலங்கள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. அதற்கு முன்பு மதிப்பெண்ணை வைத்து மருத்துவ இடம் கொடுக்கப்பட்டது. தற்போது அகில இந்திய அளவில் தேர்வு நடத்தப்படுகிறது. அதில் வெற்றி பெற தனியார் கோச்சிங் நிறுவனங்களில் இலட்சக்கணக்கில் பணம் கட்டி பயிற்சி பெற்றால்தான் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்கும். அதுவும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்குமளவு மதிப்பெண் இல்லை என்றால் தனியாரிடம்தான் சேர வேண்டும். அங்கேயோ கட்டணக் கொள்ளை. இதில் நல்ல மதிப்பெண் பெற்றாலும் ஏழை மாணவர்கள் மருத்துவக் கல்வி என்பது எட்டாக் கனிதான். நடுத்தர வர்க்கமோ இங்கே உள்ள தனியார் கல்லூரிகளைவிட உக்ரைனில் கட்டணம் குறைவு என்ற அங்கே செல்கிறது.

இந்நிலையில்தான் தமிழகம் உள்ளிட்டு பிற மாநில மாணவர்கள் உக்ரைன் உள்ளிட்டு பிற நாடுகளுக்கு மருத்துவக் கல்வி கற்க செல்கின்றனர். சென்று படித்தும் இங்கே வந்து தேர்வு பெறுவதற்கு சிரமப்படுகின்றனர். இப்படி இங்கேயும் நிம்மதி இல்லை, சென்று படித்தாலும் பலனில்லை என்ற நிலையில்தான் மாணவர்கள் இருக்கின்றனர்.

இப்போதும் உக்ரைனில் கணிசமான மாணவர்கள் உணவு, இருப்பிடமின்றி போரில் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களுக்கு இந்திய தூதரக உதவி கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. சில நூறு பேர் திரும்பினாலும் இன்னும் பல நூறு பேர் வருவதற்கு காத்திருக்கின்றனர். எல்லையில் உக்ரைன் இராணுவம் அவர்களை இழிவாக நடத்தும் வீடியோக்கள் வந்திருக்கின்றன. எனவே தமிழகம் உள்ளிட்ட பிற மாநில மாணவர்கள் தாயகம் திரும்பிட இந்திய அரசு கடுமையான முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.