கான்பூர் ஐஐடி ஆய்வில் தகவல் கொரோனா 4ம் அலை ஜூன் மாதம் ஏற்படும்

புதுடெல்லி: கொரோனா 4வது அலை ஜூன் 22ல் தொடங்கி, ஆகஸ்ட் இறுதியில் உச்சத்தை எட்டும் என்று கான்பூர் ஐஐடி ஆராய்ச்சி மாணவர்களின் மாதிரி ஆய்வில் கூறப்பட்டுள்ளது. கொரோனா தொற்றின் பரவல் குறித்து புள்ளியியல் அடிப்படையில், கான்பூர் ஐஐடி.யின் கணிதம், புள்ளியியல் துறை மாணவர்கள், கடந்த 4 மாதங்களாக நடத்திய மாதிரி ஆய்வு மேற்கொண்டனர். அந்த மாதிரி ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனா தொற்று ஜனவரி 30, 2020ம் ஆண்டில் இருந்து பரவத் தொடங்கியது. அந்த கணக்கின்படி, 936 நாட்களுக்கு பிறகு, இந்தியாவில் அதன் 4வது அலை பரவத் தொடங்கும். எனவே, கொரோனா 4வது அலை ஏறக்குறைய ஜூன் 22ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் மத்தியில் அல்லது இறுதியில் ஆகஸ்ட் 23ம் தேதி உச்சத்தை எட்டி, அக்டோபர் 24ம் தேதி குறையத் தொடங்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. 4வது அலையில், ஏற்கனவே போடப்பட்டிருக்கும் 2 தடுப்பூசிகள், பூஸ்டர் டோஸ் ஆகியவை நோயின் தீவிரத்தை குறைப்பதில் முக்கிய பங்காற்றும் காரணிகளாக விளங்கும். கொரோனாவில் தொடங்கி ஒமிக்ரானாக உருமாறிய வரையில் தொற்று கடந்த வந்த பாதையை கணித்தே இந்த மாதிரி புள்ளியியல் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, 4ம் அலை தொடங்கும் கால கட்டம் வரையறுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.10,000க்கு கீழ் சரிவு: நேற்று காலை 8 மணியுடன் முடிந்த கடந்த 24 மணி நேரத்துக்கான கொரோனா பலி, பாதிப்பு குறித்து ஒன்றிய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை:* புதிய தொற்று பாதிப்பு கடந்த 2 மாதங்களுக்கு பிறகு 10,000க்கு கீழ், 8,013 ஆக பதிவானது. இது கடந்தாண்டு டிசம்பர் 28ம் தேதி 9,195 ஆக இருந்தது.* நேற்று ஒரே நாளில் 115 பேர் பலியானதால், மொத்த உயிரிழப்பு 5,13,843 ஆக உள்ளது.* சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,02,601 ஆக உள்ளது.  * நாட்டில் இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்து கொண்டவர்களின் எண்ணிக்கை 177.50 கோடியை கடந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.