ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் 2022: கடகம் – கே.பி.வித்யாதரன்

முன்வைத்த காலைப் பின்வைக்காதவர் நீங்கள். சொன்ன சொல் தவறமாட்டீர்கள். ஒருவரை உங்கள் மனதுக்குப் பிடித்துவிட்டால் கணக்கு வழக்கு பார்க்காமல் வாரி வழங்குவீர்கள். உங்களுக்கு 21.3.2022 முதல் 8.10.2023 வரை உள்ள காலகட்டத்தில் ராகுவும், கேதுவும் சேர்ந்து என்ன பலன்கள் தரப்போகிறார்கள் என்று பார்ப்போம்.

முயற்சிகளில் வெற்றியைப் பெற்றுத் தரப்போகிறார் ராகு!

இதுவரை உங்களின் லாப வீட்டில் அமர்ந்து பிரபலங்களின் நட்பு, திடீர் பணவரவு, வாகன வசதிகள் என பல வகையிலும் முன்னேற்றம் தந்தார் ராகு பகவான். இப்போது ராசிக்கு பத்தாவது வீட்டில் வந்து அமர்கிறார். புதிய முயற்சிகளில் வெற்றி பெறவைப்பார். சதா சர்வகாலமும் ஓடி ஓடி உழைத்துக் கொண்டிருந்த நீங்கள், இனி அதற்கான நற்பலனை அடைவீர்கள்.

குடும்பத்தில் அமைதி தொடரும். கணவன்-மனைவிக்குள் அந்நியோன்யம் பிறக்கும். பழைய கடனில் ஒருபகுதியை அடைக்கும் அளவிற்குப் பணவரவு உண்டு. உங்களைச் சுயமாக சிந்தித்துச் செயல்பட வைப்பதுடன் சுயதொழி செய்யும் வல்லமையையும் தருவார் ராகு. உங்களிடமிருந்த பய உணர்வு, தடுமாற்றம் எல்லாம் நீங்கும். குடும்ப வருமானம் உயரும். மூத்த சகோதரருடன் இருந்த கருத்துமோதல்கள் விலகும்.

உங்களின் நல்ல மனசைப் புரிந்துகொண்டு சிலர் உங்களுக்கு உதவுவார்கள். மனைவிவழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. குலதெய்வக் கோயிலுக்கு ஒருமுறையாவது சென்று வாருங்கள். குழந்தை இல்லையே என வருந்திய தம்பதியருக்குக் குழந்தை பாக்கியம் உண்டாகும். வீடு, வாகன வசதி பெருகும். உங்களுடன் பழகிக் கொண்டே உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்களைக் கண்டறிந்து ஒதுக்குவீர்கள். எதையும் திட்டமிட்டுச் செய்வீர்கள்.

கே.பி.வித்யாதரன்

ராகு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

சூரியனின் கார்த்திகை நட்சத்திரம் 1ம் பாதத்தில்: 21.3.2022 முதல் 22.05.2022 முடிய ராகுபகவான் கார்த்திகை 1-ம் பாதத்தில் செல்கிறார். உங்களின் பேச்சில் கம்பீரம் பிறக்கும். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். எதிர்பார்த்த வகையில் உதவிகள் கிடைக்கும். உடல் ஆரோக்யம் திருப்தி தரும்.

சுக்ரனின் பரணி நட்சத்திரத்தில்: 23.5.2022 முதல் 29.1.2023 முடிய ராகு பரணியில் சஞ்சரிக்கிறார். பாதியிலேயே நின்றுபோன வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். மன உளைச்சல், டென்ஷன் விலகும். வீடு மாறுவீர்கள். வாகனம் வாங்குவீர்கள்.

கேதுவின் அசுவினி நட்சத்திரத்தில்: 30.1.2023 முதல் 8.10.2023 முடிய ராகு அசுவினியில் செல்கிறார். வேலைச்சுமை அதிகரிக்கும். மறைமுக எதிர்ப்புகள், செலவுகள், மருத்துவச் செலவுகள் வரும். யாரையும் விமர்சித்துப் பேசவேண்டாம்.

வியாபாரத்தில்: புதிய யுக்திகளைக் கையாண்டு பற்று-வரவை உயர்த்துவீர்கள். போட்டியாளர்கள் திகைக்கும் அளவிற்கு சந்தை நிலவரம் அறிந்து முதலீடு செய்வீர்கள். பழைய சரக்குகள் விற்றுத் தீரும். வராமலிருந்த பாக்கிகள் வசூலாகும். கடையை அழகு படுத்தி அதிக வேலையாட்களைப் பணியில் அமர்த்துவீர்கள். வாடிக்கையாளர்களைக் கவரும் விதமாக புதிய சலுகைகளை அறிவிப்பீர்கள். ஷேர், ஸ்பெகுலேஷன், ஹோட்டல் மூலம் லாபம் அடைவீர்கள். கூட்டுத்தொழிலில் தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்க வேண்டாம். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

உத்தியோகத்தில் மேலதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். அதேநேரம் வீண்பழிகள் வர வாய்ப்பு உண்டு. வேலைசுமை அதிகரித்தாலும் புதிய அனுபவங்களைக் கற்றுக்கொள்வீர்கள். அடிக்கடி விடுப்பில் செல்லாதீர்கள். கணினித்துறையினருக்கு வேலை தொடர்பான நெருக்கடிகள் அதிகரிக்கும். புதிய வாய்ப்புகள் வந்தாலும் யோசித்து முடிவெடுங்கள்.

கலைஞர்களின் திறமைக்குப் பரிசும் பாராட்டும் கிட்டும். வெகு நாட்களாக நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிறுவனத்திலிருந்து புது வாய்ப்பு தேடி வரும்.

புது அனுபவங்களைத் தரப்போகும் கேது!

இதுவரை உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடத்தில் அமர்ந்துகொண்டு, முன்கோபத்தால் பல இழப்புகளையும் கசப்பான அனுபவங்களையும் தந்த கேது பகவான், தற்போது ராசிக்கு 4-ல் வந்து அமர்கிறார். இனி, உங்களைப் பதற்றத்தில் இருந்து விடுபடவைத்துப் பக்குவப்படுத்துவார். கனிவான பேச்சாலேயே காரியங்களைச் சாதிப்பீர்கள்.

எந்த விஷயத்திலும் தெளிவான முடிவுகளை எடுக்க முடியாமல் தயக்கத்துடன் இருந்தீர்களே… இனி, அந்த அவலநிலை மாறும். மற்றவர்களுக்கு ஆலோசனை வழங்கும் அளவுக்கு புதுப்புது அனுபவ அறிவு கிடைக்கும். வீட்டில் தடைப்பட்ட சுபகாரியங்கள் இனி நடக்கும். பிள்ளைகளின் பிடிவாத குணம் மாறும். அவர்கள் உங்களின் பாசத்திற்குக் கட்டுப்படுவார்கள். மகனுக்கு அயல்நாட்டில் வேலை கிடைக்கும். வீட்டிற்குத் தேவையான மின்சாதனப் பொருள்களை வாங்குவீர்கள்.

ராசிக்கு 4-ம் வீட்டில் கேது அமர்வதால் முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும்போது பலமுறை யோசித்துக் கையெழுத்திடுவது நல்லது. தாயாருக்கு மருத்துவச் செலவுகள், வீண் வாக்குவாதங்கள் வந்து போகும். தாய்வழி உறவினர்களிடம் கருத்துவேறுபாடுகள் வெடிக்கும். யாரையும் நம்பி பெரிய முடிவுகளை எடுக்க வேண்டாம். வாகனத்தை இயக்கும்போது கவனம் தேவை; சிறுசிறு விபத்துகள் வரக்கூடும். வழக்குகளில் வழக்கறிஞரை மாற்றவேண்டி வரும். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் மற்றும் பயணச் செலவுகள் அதிகரிக்கும். ஆன்மீகவாதிகள், கல்வியாளர்களின் நட்பு கிடைக்கும். மாணவ மாணவியர்கள் பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் பெறுவார்கள்.

உங்களின் நீண்டகால லட்சியமான சொந்தவீடு கனவு இப்போது நிறைவேறும். ஆனாலும் தேவைப்படும் பணத்தைக் கையில் வைத்துக் கொண்டு வீடு கட்டத் தொடங்குவது நல்லது. வெளி மாநில புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். அரசாங்க அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் கடகம்

கேதுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

21.03.2022 முதல் 24.09.2022 வரை: குருவின் விசாகம் நட்சத்திரத்தில் கேது பகவான் செல்வதால், பிரபலங்களின் தொடர்பு கிட்டும். பாதி யிலேயே நின்றுபோன பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மகான்கள், சித்தர்களின் ஆசீர்வாதம் கிட்டும். குழந்தை பாக்கியம் உண்டு.

25.09.2022 முதல் 04.06.2023 வரை: ராகுவின் சுவாதி நட்சத்திரத்தில கேது செல்கிறார். மற்றவர் விவாகரத்தில் தலையிடாதீர்கள். சோம்பல், ஏமாற்றம் வந்து செல்லும். யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். நேரம் தவறி சாப்பிடாதீர்கள்.

4.6.2023 முதல் 8.10.2023 வரை: செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் கேது செல்வதால், தாயாரின் உடல்நிலை சீராகும். உறவினர்களால் ஆதாயம் உண்டு.

வியாபாரத்தில் அணுகுமுறையை மாற்றிக் கொள்ளுவீர்கள். வேலையாட்களின் ஆதரவு உண்டு.

உத்தியோகத்தில் வேலைச்சுமை ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் பாராட்டும் பதவி உயர்வும் வந்து சேரும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.