கீவ் உள்ளிட்ட நகரங்களில் உணவு தட்டுப்பாடு: போரை நிறுத்த ரஷ்யாவுக்கு அழுத்தம் தரவேண்டும் – இந்தியா உள்ளிட்ட நாடுகளிடம் உக்ரைன் வேண்டுகோள்

கீவ்: ரஷ்யா, உக்ரைன் இடையே நேற்று 11-வது நாளாக கடும் சண்டை நடைபெற்றது. உக்ரைன் தலைநகர் கீவ் உட்பட பல்வேறு நகரங்களில் உணவுப் பொருட்கள், எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

போரை நிறுத்துமாறு ரஷ்யாவுக்கு அழுத்தம் தரவேண்டும் என இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளிடம் உக்ரைன் அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

அண்டை நாடான உக்ரைன், அமெரிக்கா தலைமையிலான நேட்டோவில் இணையக் கூடாது என்று ரஷ்யா எச்சரிக்கை விடுத்து வந்தது. இதை உக்ரைன் அரசு புறக்கணித்த நிலையில் கடந்த 24-ம் தேதி அந்த நாட்டின் மீது ரஷ்யா ராணுவ நடவடிக்கை எடுத்தது.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் மறைமுக ஆதரவுடன் உக்ரைன் அதிபர் ஜெலன்கி, ரஷ்யாவுக்கு எதிராக போரை நடத்தி வருகிறார். இரு நாடுகளிடையே கடந்த 11 நாட்களாக போர் நீடித்து வருகிறது.

அமைதி தூதர் கொலை

மனிதாபிமான அடிப்படையில் உக்ரைனின் தென்கிழக்கில் உள்ளமேரிபோல், கிழக்கில் உள்ள வோல்னோவாகா நகரங்களில் ரஷ்யாதற்காலிக போர் நிறுத்தத்தை அறிவித்தது. ஆனால், போர் நிறுத்தத்தை ரஷ்ய ராணுவம் கடைபிடிக்கவில்லை. மேரிபோல் நகரம் மீதுரஷ்ய போர் விமானங்கள் குண்டுமழை பொழிந்ததாக உக்ரைன் அரசு குற்றம் சாட்டியுள்ளது.

இதை மறுத்துள்ள ரஷ்ய ராணுவ வட்டாரங்கள், பொதுமக்கள் வெளியேறுவதை தடுக்க உக்ரைன் ராணுவமே தாக்குதல் நடத்தி வருகிறது என்று விளக்கம் அளித்துள்ளது.

உக்ரைனில் 11-வது நாளாக போர் நீடிப்பதால் தலைநகர் கீவ், கார்கிவ் உள்ளிட்ட நகரங்களில் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு உணவுப்பொருட்கள் விற்கப்படுவதாக செஞ்சிலுவை சங்க தன்னார்வலர்கள் தெரிவித்துள்ளனர். இதேபோல பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது.

ரஷ்யா, உக்ரைன் இடையே இதுவரை 2 கட்ட பேச்சுவார்த்தை நடந்துள்ளன. இதில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. உக்ரைன் அமைதிக் குழுவில் வங்கித்துறை நிபுணர் டேனிஷ் கிரிவ் இடம்பெற்றிருந்தார். இவர் ரஷ்யாவின் உளவாளி என்று உக்ரைன் அரசுதரப்பு குற்றம் சாட்டிய நிலையில் மர்ம நபர்களால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். ரஷ்ய உளவாளிகள் என்ற சந்தேகத்தின் பேரில் பலர் கொலை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

உக்ரைன் அதிபர் ஜெலன்கி, யூத குடும்பத்தைச் சேர்ந்தவர். எனவே, போரை நிறுத்த இஸ்ரேல் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இஸ்ரேல் பிரதமர் நப்தாலி பென்னட், கடந்த சனிக்கிழமை மாஸ்கோவுக்கு நேரடியாக சென்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்துப் பேசினார். உக்ரைன் அதிபர் ஜெலன்கியுடன் அவர் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதேபோல துருக்கி அதிபர் எர்டோகனும் போரை நிறுத்த ரஷ்ய, உக்ரைன் அதிபர்களுடன் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இதன்படி 3-வது கட்ட அமைதி பேச்சுவார்த்தை துருக்கியில் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

துருக்கி அதிபர் எர்டோகனுடன் ரஷ்ய அதிபர் புதின் பேசும்போது, ‘‘ரஷ்யாவின் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால் உக்ரைன் மீதான துல்லிய தாக்குதலை உடனடியாக நிறுத்துவோம். அந்த நாட்டை ஆக்கிரமிக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கம் கிடையாது. ஆனால் சிலரின் தூண்டுதலால் பேச்சுவார்த்தையை உக்ரைன் விரும்பவில்லை’’ என்று குற்றம்சாட்டினார்.

உக்ரைன் அதிபர் ஜெலன்கி வெளியிட்ட வீடியோ பதிவில், ‘‘ரஷ்யாவுக்கு அடிபணிய மாட்டோம். தாய் மண்ணை காக்க உக்ரைன் மக்கள் அனைவரும் போரில் ஈடுபட வேண்டும்’’ என்று அழைப்பு விடுத்துள்ளார்.

உக்ரைன் வெளியுறவு அமைச்சர் திமித்ரோ குலேபா, நேற்று முன்தினம் தொலைக்காட்சி மூலம் உரையாற்றினார். அவர் கூறியதாவது:

கடந்த 30 ஆண்டுகளாக ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் உக்ரைனில் படித்து வருகின்றனர். இப்போது, உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்துவதால் வெளிநாட்டு மாணவர்கள் தாயகம் திரும்ப முடியாமல் தவிக்கின்றனர். எனவே, தங்கள் நாட்டு மக்கள் பாதுகாப்பாக தாயகம் திரும்ப வசதியாக போரை நிறுத்த வேண்டும் என இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவுக்கு அழுத்தம் தரவேண்டும்.

உக்ரைனின் வேளாண் பொருட்களை இறக்குமதி செய்யும் பெரிய நாடுகளில் ஒன்றாக இந்தியா விளங்குகிறது. எனவே, போர் தொடர்ந்தால் இங்கு வேளாண் உற்பத்தி பாதிக்கப்பட்டு ஏற்றுமதியும் தடைபடும். எனவே, உணவு பாதுகாப்பை கருத்தில் கொண்டாவது இந்தியாவும் உலக நாடுகளும் போரை நிறுத்துமாறு ரஷ்யாவிடம் வலியுறுத்த வேண்டும்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தங்கள் நலனுக்கு எதிரானது என ரஷ்யாவுடன் நல்லுறவை பேணும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதினிடம் எடுத்துக் கூற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஏவுகணைகளால் விமான நிலையம் தகர்ப்பு

மேற்கு-மத்திய உக்ரைனில் வின்னிடிசியா நகரம் அமைந்துள்ளது. அந்த நகரின் விமான நிலையத்தை குறிவைத்து ரஷ்ய ராணுவம் நேற்று 8 ஏவுகணைகளை அடுத்தடுத்து வீசியது. இதில் வின்னிடிசியா விமான நிலையம் தகர்க்கப்பட்டது.

கார்கிவ் நகரில் இயற்பியல், தொழில்நுட்ப கழகம் அமைந்துள்ளது. சோவியத் யூனியன் ஆட்சிக் காலத்தில் அங்குதான் ரஷ்யாவின் முதல் அணு குண்டு தயாரிக்கப்பட்டது. அதனை குறிவைத்து ரஷ்ய ராணுவம் நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தியது. கார்கிவ் இயற்பியல் தொழில்நுட்ப கழகத்தில் உள்ள அணு உலைக்கு பாதிப்பு ஏற்பட்டால் ஒட்டுமொத்த ஐரோப்பிய நாடுகளுக்கும் அணு கதிர்வீச்சு பாதிப்பு ஏற்படும் என்று உக்ரைன் அரசு அச்சம் தெரிவித்துள்ளது.

தலைநகர் கீவில் இருந்து 100 கி.மீ. தொலைவில் கெய்னிவ் நகரில் அமைந்துள்ள நீர்மின் நிலையத்தை ரஷ்ய படைகள் முற்றுகையிட்டுள்ளன. உக்ரைனின் ராணுவ தளங்கள் மட்டுமன்றி அனைத்து எரிசக்தி நிலையங்களையும் ரஷ்ய ராணுவம் அடுத்தடுத்து கைப்பற்றி வருகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.