'முதல் நாள் முதல் காட்சி' என்ற பெயரில் கட்டணக் கொள்ளை

கொரோனா காரணம், அதனால் மக்கள் தியேட்டர்கள் பக்கம் வரவில்லை என கடந்த இரண்டு வருடங்களாக திரையுலகத்தில் அதிகமான குரல்கள் எழுந்து வருகின்றன. ஆனால், விருப்பப்பட்டு வரும் மக்களுக்கும் அதிகமான கட்டணம், அதிகமான தின்பண்ட விலை, ஆன்லைன் பதிவுக் கட்டணம் என மக்களை அடுத்த முறை எட்டி கூட பார்க்க வைக்காத விதத்தில்தான் பல தியேட்டர்கள் உள்ளன.

முன்னணி நடிகர்களின் படங்கள் வரும் போதெல்லாம் அதிகாலை காட்சி, காலை 8 மணி சிறப்பு காட்சி என சிறப்புக் காட்சிகளை நடத்தி அதிகமான கட்டணங்களை பல தியேட்டர்கள் வசூலிக்கிறார்கள். இதனால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறதே தவிர உரிய வருவாய் வருவதேயில்லை.

அந்த சிறப்புக் காட்சிகளுக்கான கட்டணமாக 500, 1000 என வசூலிக்கிறார்கள். கடந்த மாதம் அஜித் நடித்து வெளிவந்த 'வலிமை' படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கான டிக்கெட் விலை 1000 ரூபாய் வரை போயிருக்கிறது. ரசிகர் மன்றங்களை அஜித் கலைத்து பல வருடங்கள் ஆகிவிட்டது. அப்புறம் எப்படி சிறப்புக் காட்சிகளை ரசிகர் மன்றம் பெயரில் நடத்த முடியும். தியேட்டர்காரர்களே அந்த அளவுக்கு டிக்கெட் விலைகளை விற்கிறார்கள்.

இந்த வாரம் வெளியாக உள்ள சூர்யா நடித்துள்ள 'எதற்கும் துணிந்தவன்' படத்திற்கும் அதிகாலை, காலை சிறப்புக் காட்சிகள் நடைபெற உள்ளன. இதற்கான கட்டணமாக 300, 500 ரூபாய் என தியேட்டர்காரர்களே நிர்ணயித்துள்ளார்கள். ஆனால், அவர்கள் தரும் டிக்கெட்டுகளில் வழக்கமான மற்ற சாதாரண காட்சிகளுக்கான கட்டணங்களே அச்சிடப்பட்டுள்ளன. இது அநியாயமான கொள்ளை என அந்தக் காட்சிகளுக்குப் படம் பார்க்க வரும் ரசிகர்கள் ஆவேசத்துடன் சொல்கிறார்கள்.

படத்தில் அநியாயத்தைத் தட்டிக் கேட்கும் வசனம் பேசும் ஹீரோக்கள், அவர்கள் படங்களுக்கான டிக்கெட் கட்டணங்கள் அநியாய விலைக்கு விற்கப்படும் போது மட்டும் வாயைத் திறந்து எதுவும் பேசாமல், கண்களைக் கட்டிக் கொண்டு காணாமல் போய்விடுகிறார்கள்.

ஆந்திர அரசு நேற்று அறிவித்தபடி கடும் கட்டுப்பாடுகளுடன் கூடிய சினிமா டிக்கெட் கட்டணம் போல தமிழகத்திலும் வர வேண்டும் என பெரும்பாலான ரசிகர்கள் ஆசைப்படுகிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.