தொழிலாளர் நலத் துறை அமைச்சர் முன்னிலையில் 12 தொழில் பிரிவு திறன் கவுன்சில்களுடன்: திறன் மேம்பாட்டுக் கழகம் ஒப்பந்தம்

சென்னை: தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் முன்னிலையில், 12 வகையான தொழில் பிரிவு திறன் கவுன்சில்களுடன் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் ஒப்பந்தம் செய்துள்ளது.

இதுகுறித்து திறன் மேம்பாட்டுக் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் முன்னிலையில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், ஆயத்த ஆடை மற்றும் வீட்டு அலங்காரம், அழகு மற்றும் நலம், வீட்டுப் பணியாளர்கள், மின்னணுவியல் மற்றும் வன்பொருள், உணவு பதனிடுதல், நகைகள் மற்றும் கற்கள், பசுமைப் பணிகள், தோல் பதனிடுதல், மேலாண்மை மற்றும் தொழில்முனைவோர், ரப்பர், தொலைதொடர்பு, சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் ஆகிய 12 செக்டார் ஸ்கில் கவுன்சில்கள் இடையே நேற்று புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் அந்தந்த பிரிவு ஸ்கில் கவுன்சில் வாயிலாக அளிக்கப்படும் வேலைவாய்ப்பைப் பெறும்வகையில், குறுகிய காலப் பயிற்சிகள், பயிற்றுநர்களுக்கான பயிற்சி, மதிப்பீட்டாளர்களுக்கான பயிற்சி ஆகியவை வழங்கப்படும். மேலும், சமீபத்திய தொழில்நுட்பங்கள், புதிதாக எழும் பயிற்சிகள், வேலைகள் குறித்த தகவல்களை தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்துடன் அந்தந்த பிரிவு கவுன்சில்கள் பகிர்ந்து கொள்ளும்.

திறன் போட்டிகளுக்கு ஆயத்தம்

இந்த கவுன்சில்கள் வாயிலாக வழங்கப்படும் பயிற்சிகளுக்கான செலவுகளை தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் ஏற்கும். அதுமட்டுமின்றி உலகத்திறன் போட்டிகளில் திறன் பயிற்சியாளர்கள் பங்கேற்று தமிழகத்துக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் பதக்கங்களை வெல்ல தேவையான பயிற்சிகளை அளித்து அப்போட்டிகளுக்கு ஆயத்தம் செய்யவும் வழிவகுக்கும். இந்தஒப்பந்தம், திறன் மேம்பாட்டுக் கழகத்தை நாட்டின் திறன் மையமாக மாற்றியமைக்கும் முயற்சியின் முன்னெடுப்பாகும்.

இந்நிகழ்ச்சியில், செக்டார் ஸ்கில் கவுன்சில்களின் முதன்மைச் செயல் அலுவலர்கள், தொழிலாளர் நலத்துறைச் செயலர் கிர்லோஷ் குமார், திறன் மேம்பாட்டுக் கழக மேலாண் இயக்குநர் இன்னசன்ட் திவ்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.