கோவா, மணிப்பூர், உத்தரகாண்டில் முதல்வர் பதவிக்கு பாஜவில் கடும் போட்டி: உத்தரப்பிரதேசத்தில் யோகி மீண்டும் முதல்வர் ஆகிறார்

புதுடெல்லி: ஐந்து மாநில தேர்தலில் 4 மாநிலங்களில் வெற்றி பெற்ற பாஜ.வில் உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா மாநிலங்களில் முதல்வர் பதவியை பிடிப்பதற்கு இக்கட்சியில்  கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.சட்டப்பேரவை தேர்தல் நடந்த 5 மாநிலங்களில், உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் மாநிலங்களில் பாஜ மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. பஞ்சாப்பில் காங்கிரஸ் படுதோல்வியை தழுவி, ஆம் ஆத்மி அமோக வெற்றி பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து, புதிய ஆட்சி அமைப்பதற்கான நடவடிக்கைகள், இந்த மாநிலங்களில் தொடங்கி உள்ளன.நான்கு மாநிலங்களில் பாஜ வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ள போதிலும், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் மாநிலங்களில் முதல்வர் பதவியை பிடிக்க கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.   உத்தர பிரதேசத்தில் தொடர்ந்து 2வது முறையாக பாஜ ஆட்சியை பிடித்துள்ளதால், இம்மாநில முதல்வர்  யோகி ஆதித்யநாத் மீண்டும் முதல்வர் பதவியை ஏற்க உள்ளார். இது தொடர்பாக தேசிய தலைவர்களுடன் ஆலோசிக்க அவர் டெல்லி சென்றுள்ளார்.  அதேபோல்,  பஞ்சாப் தேர்தலில் ஆம் ஆத்மியின் முதல்வராக அறிவிக்கப்பட்ட பகவந்த் மான், எந்தவித போட்டியின்றி முதல்வர் பதவியை ஏற்கிறார். நேற்று காலை டெல்லி சென்று கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் ஆலோசனை நடத்திய பிறகு, வரும் 16ம் தேதி முதல்வராக பதவியேற்பதாக அவர் அறிவித்தார்.ஆனால், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் பாஜ முதல்வர்கள் யார்என்ற கேள்வி எழுந்துள்ளது. உத்தரகாண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி, கதிமா  தொகுதியில் தோல்வியை தழுவினார்.  காங்கிரஸ் வேட்பாளர் புவன் கப்ரி, 6,500 வாக்குகள் வித்தியாசத்தில் தாமியை தோற்கடித்தார். இந்த தொகுதி, தாமியின் கோட்டையாக கருதப்பட்டது. கடந்த 2012, 2017ம் ஆண்டுகளில் நடத்த தேர்தல்களில், அவர் இங்கு வெற்றி பெற்றார். இம்மாநில பாஜ.வில் ஏற்பட்ட உட்கட்சி மோதல்களால் கடந்த 5 ஆண்டுகளில் 3 முறை  முதல்வரை பாஜ தலைமை மாற்றியது. பிரதமர் மோடி உட்பட கட்சியின் உயர்மட்டத் தலைமையின் செல்வாக்கு பெற்ற புஷ்கர் சிங் தாமி தற்போதைய தேர்தலில் தோற்றதால், மீண்டும் அவருக்கு முதல்வர் பதவி வழங்கப்படுமா? என்பது கேள்வியாக உள்ளது. அதனால், முன்னாள் மாநிலத் தலைவர் பன்சிதர் பகத், மாநில அமைச்சர்கள் தன் சிங் ராவத், சத்பால் மகராஜ் ஆகியோர் முதல்வர் பதவியை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.இது குறித்து உத்தரகாண்ட் தேர்தல் பொறுப்பாளரும், பொதுச் செயலாளருமான கைலாஷ் விஜயவர்கியா கூறுகையில், ‘உத்தரகாண்டின் அடுத்த முதல்வர் யார்? என்று கேட்கின்றனர். எங்களது கட்சியில் உட்கட்சி ஜனநாயகம் உள்ளது. சட்டமன்றக் கட்சித் தலைவரைத் தேர்ந்தெடுப்போம்; அவரது பெயர் கட்சியின் தலைமைக்கு அனுப்பப்பட்டு, அதன்பின் இறுதி முடிவு எடுக்கப்படும். அடுத்த முதல்வர் யார் என்று இப்போதைக்கு யாராலும் சொல்ல முடியாது. தோல்வியடைந்த புஷ்கர் சிங் தாமிக்கு மாநிலத்திற்கு மட்டுமல்ல, நாட்டிற்கும் மிக முக்கியமான தலைவர். நாங்கள் கோட்டையை வென்றோம்; ஆனால் சிங்கத்தை இழந்துவிட்டோம்,’ என்றார்.கோவாவிலும் அடுத்த முதல்வர் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. இங்கு மொத்தமுள்ள 40 தொகுதிகளில் பாஜ 20 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. பெரும்பான்மை பலத்துக்கான 21 இடங்களை கைப்பற்றவில்லை என்றாலும் கூட, மாநிலத்தில் ஆட்சியமைக்க உரிமை கோர உள்ளது. மகாராஷ்டிரவாடி கோமந்தக் கட்சியின் 2 எம்எல்ஏக்கள், மூன்று சுயேச்சை எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதங்களுடன் ஆளுநரை சந்திக்க உள்ளதாக கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறினார். ஆனால், தற்போதைய முதல்வர் பிரமோத் சாவந்த் மீண்டும் முதல்வராக பதவியேற்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. சாங்கியூலிம் தொகுதியில் தோல்வியின் விளிம்புக்கு சென்ற அவர், இறுதியில் வெறும்  500 வாக்குகள் அதிகம் பெற்றுதான் வெற்றி பெற்றார்.ஏற்கனவே பிரமோத் சாவந்துக்கும், மாநில பாஜக தலைமைக்கும் மோதல் ஏற்பட்டு வந்ததால் பாஜ வேட்பாளருக்கு எதிராக பாஜவில் இருந்து விலகி சுயேச்சையாக போட்டியிட்டனர். இதனால், பாஜ பெரும்பான்மை பலத்தை பெறமுடியவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கு காரணம் முதல்வர் பிரமோத் சாவந்த் தான் என்று கூறப்படுகிறது. அதனால் முதல்வர் பதவிக்கு மூன்று பேரின் பெயர்கள் அடிபடுகின்றன. அந்த பட்டியலில் துணை முதல்வர் சந்திரகாந்த் காவ்லேகர், சுகாதார அமைச்சர் விஸ்வஜித் ரானே, போக்குவரத்து அமைச்சர் மவுவின் கோடின்ஹோ ஆகியோரின் பெயர்கள் உள்ளன. மாநில பாஜ பிரமோத் சாவந்தை ஆதரிக்கும் அதே வேளையில், தேசிய பாஜ உயர்நிலைக் குழு விஸ்வஜித் ரானேவுக்கு ஆதரவளிப்பதாக தகவல்கள் கூறுகின்றன. முதல்வர் பதவிக்கான போட்டியில் உள்ளீர்களா? என்ற கேள்விக்கு, விஸ்வஜித் ரானே அளித்த பதிலில், ‘கட்சியின் சீனியர்கள் சொல்வதை பின்பற்றுவேன். கட்சிக்கு உழைக்கும் பணிவான தொண்டன்’ என்றார்.மணிப்பூரை பொருத்தமட்டில் 60 உறுப்பினர்களை கொண்ட மாநில சட்டசபையில் 32 இடங்களை கைப்பற்றி பாஜ பெரும்பான்மை பலத்தை தாண்டியுள்ளது. தற்போதைய முதல்வர் பிரேன் சிங் மீண்டும் முதல்வராக தேர்வு செய்யப்படுவாரா? அல்லது புதிய முகமாக வேறு யாரேனும் அறிவிக்கப்படுவாரா? என்பது குறித்து பாஜ மாநில தலைவர் சாரதா தேவியிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‘தேசிய தலைமைதான் அடுத்த முதல்வர் யார்? என்பதை தீர்மானிக்கும். மாநில தலைமையுடன் கலந்தாலோசித்து தேசிய தலைமை முடிவு செய்யும். என்பிஎப், என்பிபி ஆகிய கட்சிகள் பாஜகவை ஆதரிப்பதாகக் கூறி உள்ளன’ என்றார். மணிப்பூரில் பாஜ மீண்டும் ஆட்சியை கைப்பற்றி இருந்தாலும் கூட, பிரேன் சிங்கை மீண்டும் முதல்வராக்க கூடாது என்று மாநில தலைவர்கள் சிலர் கூறிவருவதால் அங்கும் குழப்பம் நீடிக்கிறது.எனவே உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய 3 மாநிலங்களிலும் அடுத்த முதல்வர் யார்? என்ற பிரச்னை எழுந்துள்ளதால் பாஜ தலைமைக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. முதல்வர் பதவியை பிடிக்க மூன்று மாநில மூத்த தலைவர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.