Elon Musk: கிரேஸி ஐடியாக்கள்; கொஞ்சம் மனஉறுதி; – அவரின் வெற்றிப் பயணம் சாத்தியமானது எப்படி?

எலான் மாஸ்க்கின் சொத்து மதிப்பு 22,110 கோடி டாலர் என கூகுள் சொல்கிறது. பிரபஞ்சத்தின் அதிக சொத்துடைய தனிநபர் பட்டியலில் உச்சாணிக் கொம்பில் அமர்ந்திருக்கும் எலானின் வாழ்க்கை எப்போதுமே மலர்ப்படுக்கையிலேயே நகர்ந்தது இல்லை. யாரை விடவும் அதிகமான விமர்சனத்துக்கும் கேலிக்கும் உள்ளானவர் தன்னை நோக்கி வீசப்பட்ட சொற்களுக்கு எல்லாம் செயலில் பதில் சொன்னார், சொல்லிக் கொண்டும் இருக்கிறார். ‘பெரிதினும் பெரிது கேள்’ எனப் பாரதி பாடியதைப் போல, பெரிதினும் பெரிதாக யோசித்து அதனைச் செயல்படுத்தியும் காட்டியவர்.

Elon Musk | எலான் மஸ்க்

எலான் மஸ்க் பிறந்தது வளமான குடும்பத்தில், அம்மா கனடா. அப்பா ஆப்பிரிக்கா. இவர் வளர்ந்தது எல்லாம் தென்னாப்பிரிக்காவில் உள்ள பிரிடோரியா நகரத்தில். 10 வயதில் எலானின் பெற்றோருக்கு விவாகரத்து ஆகிவிட்டது. 17 வயதில் கட்டாய இராணுவச் சேவைக்கு ஆள் எடுப்பத்தில் இருந்து தப்பிக்க அங்கிருந்து கனடாவுக்கு சென்றார். குவின்ஸ் பல்கலைக்கழகத்தில் படிக்கத் தொடங்கியவர் அங்கிருந்து மாற்றலாகி பென்சில்வேனியா பல்கலைக்கழகம் சென்றார். இயற்பியலிலும் பொருளியலிலும் பட்டம் பெற்று வெளியே வந்தார். இயற்பியலைவிட இணையம் தான் இந்த உலகை ஆளப்போகிறது என்பதை உணர்ந்தவர் தன்னுடைய சகோதரர் கிம்பலுடன் சேர்ந்து தொடங்கியது தான் Zip2 மென்பொருள் நிறுவனம்.

உள்ளூர் கடைகள் முதல் நாம் தேடும் எல்லாமும் கிடைக்கும் இணையதளம் ஒன்றை வரைபடங்கள் உள்ளிட்டவற்றோடு உருவாக்கியது Zip2 நிறுவனம். இதனை 1999 பிப்ரவரியில் மிகப்பெரிய கணினி மென்பொருள் சேவை நிறுவனமான Compaq, 307 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்கியது. எலான் மஸ்கின் பங்கு 22 மில்லியன். நேர்த்தியாக அதிலிருந்து வெளி வந்த கையோடு அவர் செய்த முதல் வேலை 1 மில்லியன் மதிப்புள்ள McLaren F1 supercar ஸ்போர்ட்ஸ் காரை வாங்கினார். ஒரு வருடத்திற்கு பிறகு அந்தக் கார் விபத்துக்கு உள்ளானது. அந்த கார் இன்சுரன்ஸ்கூட செய்யப்படவில்லை. அப்போதே எலானிடம் இன்னொரு திட்டம் இருந்தது. அந்தக் கார் விபத்துக்குள்ளான தருணத்தில் உடன் இருந்தவர் பீட்டர் தியெல் (Peter Thiel). Confinity என்கிற இணைய வங்கி சேவையின் இணை இயக்குநர். அந்த விபத்தில் இருவருக்கும் அதிர்ஷ்டவசமாக அடிபடவில்லை. எலான் மஸ்க் உருவாக்கிய X.com என்கிற இணைய வங்கி சேவைக்கான நிறுவனமும், Confinity இரண்டும் 2000-ல் இணைந்தது. எலான் விடுமுறைக்கு போய் வந்த கேப்பில் அவரை நிறுவனத்தை விட்டே தூக்கி விட்டனர். அந்த நிறுவனம் பின்னர் PayPal என்று பெயர்மாற்றம் அடைந்தது. eBay 1.5 பில்லியனுக்கு அந்த நிறுவனத்தை வாங்கியது. எலானின் நிகர பங்கு 180 மில்லியன் டாலர்கள்.

Elon musk

பணத்தை ஒரு பொருட்டாக மதித்தவராக எலான் செயல்பட்டதில்லை. வருகிற மில்லியன் கணக்கான பணத்தை அடுத்த திட்டங்களில் முதலீடாக கொட்டிக் கொண்டே இருந்தார். விண்வெளிக்கு மனிதர்களை அழைத்துச் செல்லவும் செவ்வாயில் மனித காலனியை உருவாக்கவும் 2002 இல் SpaceX திட்டத்தைத் தொடங்கினார். இதனை அறிவிக்கும்போது அவர் எதிர்கொண்டது வெறும் கேலிகள் மட்டும்தான். ஆனால் இன்று, 2025க்குள் மனிதர்களை அனுப்பும் திட்டத்தில் மும்முரமாக இருக்கிறது SpaceX. 2004 டெஸ்லா இயந்திர கார்களை உற்பத்தி செய்து உலகின் மாசுக்களைக் குறைக்கும் எலானின் கனவோடு தொடங்கப்பட்டது. நிறைய தோல்விகள், டெஸ்லாவுக்கான உகந்த பேட்டரிகள் சந்தையில் எங்குமே இல்லை. முதல் டெஸ்லா கார்கள் விற்பனைக்கு பிறகு பல்வேறு குழறுபடிகளால் திரும்பப் பெறப்பட்டது.

திவாலாகும் கட்டம் வரை சென்று மீண்டார் எலான். சர்ச்சைகள், ட்வீட்கள், பிரச்னைகள் என எதற்கும் பஞ்சமே இல்லாத வாழ்க்கை. கோடிக்கணக்கான டாலர்களுடன் கிரேஸியான ஐடியாக்களுடன் எலானின் வாழ்வு யாருக்கும் பொறாமை ஏற்படுத்தக்கூடியதுதான், அந்தக் கிரீடத்தில் இருக்கும் முட்களை மட்டும் தவிர்த்துவிட்டால். எந்தளவிற்கு அவர் கிரேஸி என்றால் தன்னுடைய கம்பெனி பங்குகளையே சரித்து விடும் அளவுக்கு. அமெரிக்க பங்குச்சந்தையில் இருந்து நிறுவனத்தை வெளியேற்றும் அளவுக்கு தன்னிடம் சேமிப்பு இருப்பதாக அவர் சொல்லவும் சடசடவென பங்கு வீழ்ந்தது.

எலான் மஸ்க், ஸ்பேஸ்எக்ஸ்

பங்குச்சந்தையில் தவறான வழியில் இறக்கத்தை ஏற்படுத்தியதாக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது வரை அந்தப் பிரச்னை போனது. எலானின் கனவுகள்- மீண்டும் உபயோக்கிக்கத்தக்க ராக்கெட்கள், எலெக்ட்ரிக் கார்கள் ஆகியவற்றைச் சாதித்ததோடு நிறைவு பெறவில்லை. அதிவேக Hyperloop போக்குவரத்து, மனித நுண்ணறிவை மெஷின்களோடு இணைக்கும் Neuralink திட்டம், செவ்வாய் கோளில் குடியேறுவது இப்படி விரிந்து கொண்டே செல்கிறது. நாம் அவரின் கனவில் தான் வாழவிருக்கிறோமா என்பதே இப்போதைக்கான கேள்வி. எலான் சொல்வது என்னமோ, “அதிபர் புதின் குறிப்பிடத்தக்க வகையில் என்னை விடப் பணக்காரர். என்னால் ஒரு நாட்டையெல்லாம் கைப்பற்ற முடியாது” என்கிறார், உலகத்தையே கைப்பற்றிய பிறகு!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.